சொல்சித்திரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சொல்சித்திரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 13 ஜூலை, 2020

மண்ணிசைந்து,,,,,

இரு சக்கர வாகனத்தை எடுக்கையில் மணி மாலை ஐந்து முப்பதிலிருந்து ஆறு மணிக்குள்ளாக இருக்கலாம்.

உத்தேசம்தாம்தான், உத்தேசங்கள் உலகை ஆள்வதில்லை என்பது எவ்வளவு உண்மையோ அது போல் எதுவும் அறுதியிட்டுச்சொல்வதில்லை,

கைக்கடிகாரத்தைப்பார்த்து மணியை உறுதி செய்து கொள்ளலாம் என்றாலும் கையில் கடிகாரம் கட்டி பல வருடங்கள் பலவாகிவிட்டது,

எப்பொழுதிலிருந்து இந்த எளிமை என்பது இவனுக்கு அரிதாகக் கூட ஞாபகம் இல்லை.,இப்படி இருப்பதே பிடித்துப்போக அப்படியே விட்டும் விட்டான்,

அது ஒன்றும் பெரும் உறுத்தலாய் தெரியவில்லை,”ஊருக்குள்ள அதது எப்பிடி எப்பிடி திரியுது?கஞ்சிக்குச்செத்தது கூட வெளுப்பு மாறாம தேய்ப்பு மடங்காம போட்டுக்கிட்டுத்திரியுதுங்க,இவரு என்னமோ எளிமையா இருக்கு றேன்,,,,,,,,,( நல்லா வந்துறப்போகுது வாயில,) அது இதுன்னு கஞ்சிக்குச் செத்தவரு போல அலையுறாரு.

“முன்னயெல்லாம் ஒரு கல்யாணம் காய்ச்சி,நல்லது பொல்லதுன்னா வலது கையில பிரேஸ்லெட்டும், யெடது கையில தங்கக்கலர் செயின் போட்ட வாட்சுமாமடிப்புகலையாத லக்கி பேண்ட்டும் ,சட்டையுமாத்தான் இருப்பாரு, எப்ப யாரு கண்ணுபட்டுச்சுச்சோ,இல்ல யாரும் அவரு மனசக் கெடுத்து விட்டுட்டாங்களான்னு தெரியல. பழைய பழக்கமெல்லாம் சின்னப் புள்ளைங்க ஒழப்பி விட்ட மண்ணு வீடாட்டம் சரிஞ்சி போச்சி/,

”சரிஞ்சது அதல பாதாளம் காட்டி நிக்காட்டிக்கூட லேசா பள்ளம் பறிச்சிப் போட்டுருச்சி இவரு மனசுல. அன்னையிலயிருந்து இன்னைக்கு வரைக்கும் இப்பிடி விட்டேத்தியா நேந்துவிட்ட சாமியாரு போலத் திரியிறாரு”என இவன் மனைவி அன்றாடங்களில் புலம்புவது இப்பொழுது எப்பொழுதுதாவதான வாடிக்கையாகிப் போனது,

“என்ன சார் வண்டி எடுக்க உதவி பண்ணணுமா,,,? அருகில் வருகிறார் வாசு அண்ணன், இந்த வயசான காலத்துல ஓங்களுக்கு தக்கன வண்டி வாங்காம இவ்வளவு பெரிய வண்டிய வாங்கி வச்சிருக்கீங்களே என்றார்,

அலுவலத்தின் வெளி வாசல் தாண்டி இடதுபக்கமாய் கடை வைத்திருப்பவர், சேவு மிக்சர்,பக்கோடா,நிலக் கடலைப் பருப்பு,ஊறுகாய் மற்றும் சிகரெட், பீடி, வெற்றிலை,,, இவைகள்தான் அவரது வியாபாரமாய் இருந்தது,என்ன வாசுண்ணேநல்லாயிருக்கீங்களா,நான் தள்ளிக்கிர்றேன் வண்டிய ,என்றதும்  ”நல்லாயிருக்கேம்பா” என்றார்,

அது என்னவெனத் தெரியவில்லை,சிறிது காலமாய் அப்படித்தான் அழைக்கி றார் அல்லது சொல்கிறார்,

சென்ற மாதத்தின் ஒரு நாளின் மதியமாய் அலுவலகத்திற்கு வேலையாய் வந்த பெண்ணுக்கு இவனது இரண்டாவது மகளின் வயதிருக்கும், வேலையெ ல்லாம்முடித்துப்போகும்போது”போயிட்டுவர்றேன்ப்பா”எனச்சொல்லிவிட்டுப் போனாள்.அது போல் இப்பொழுது இவரும்,

”அப்புறம் வாசுண்ணே யேவாரம் எப்பிடி இருக்கு ,வீட்ல புள்ளைங்க என்ன செய்யிறாங்க என்கிற கேள்விக்கு சின்னவ ரெண்டாவது போறா,பெரிவன் மூணாம் வகுப்பு படிக்கிறான்,அந்த வகையில பரவாயில்லை சார்,ஆணு ஒண்ணு பொண்ணு ஒண்ணு,ரெண்டும் ஆணாவும், பொறக்கல,ரெண்டும் பொண்ணாவும் பொறக்கல,செலவு ஒருபக்கம் இருந்தாலும் கூட ஆண் பெண் புரிதல் வீட்ல இருந்தே ஆரம்பிக்க ஒரு வாய்ப்புக் கெடச்சிருதுள்ள பையனுக்கு .இல்லைன்னா ஆணப்பத்தி பொண்ணு என்னமோன்னு நெனை க்க, பொண்ணப்பத்தி ஆணு என்னமோன்னு நெனைக்க.அது கட்டாகிருதுல்ல சார், அது வரைக்கும் நான் குடுத்துவச்ச ஆளு என்ற வாசு அண்ணன் மத்தபடி எனக்கும் ஏங் வீட்டம்மாவுக்கும் இந்த கடையேவாரம் போதும்ண்ணே, புள்ளைங்கள வளர வளர இது போதாதுன்னு தோணுது,வேற ஏதாவது ஒண்ணு செஞ்சுதான் ஆகணும் சார்,”என்கிறார்,

மழைபெய்து முடித்திருந்ததில் மண் கொஞ்சம் மகிழ்ந்திருந்தது, சமீபத்தில் ரோட்டை அகலப்படுத்துவதற்காய் தோண்டப்பட்ட மண்ணை சாலையின் இரு புறமுமாய் விரித்து விட்டிருந்தார்கள்.பரப்பப்பட்டிருந்த மண் சமமாய் இல்லாமல் மேடு பள்ளமாய் இருந்தது,

அலுவலகத்தில் வண்டி நிறுத்த இடமில்லை,அலுவலகத்தின் முன் ஒரு செட் கூடப்போட்டுக் கொடுத்திருக்கலாம்.கட்டிடத்தின் உரிமையாளர்., இப்பொ ழுது ரோட்டியில்தான் நிறுத்தவேண்டியதிருக்கிறது வண்டியை. மழைக்கும் வெயிலுக் கும் காற்றுக்கும் தூசிக்குமான அனைத்தையும் தன்னில் தாங்கி நின்று கொண் டிருக்கிறது.

”போடுமண்ணாய்இருந்தாலும்மண்நல்ல வண்டலாய்த் தெரிந்தது, கொஞ்சம் சிரத்தையெடுத்து சிரமப்பட்டால் இம்மண்ணில் எதையும் விளைய வைக்கலாம் தானே? கொஞ்சம் உரமும், கொஞ்சம் உழைப்பும்,கூடவே சிறிது ஆட்டாம் புழுக்கையும்,நம்பிக் கையும் இருந்தால் போதும்.எல்லாம் சாத்தியமே/”

காலடிகளை நின்ற இடத்திலிருந்து சற்று மாற்றி வைத்துக்  கொள்கிறான், நின்ற இடத்திலேயே நின்றால் பாதத்தின் அடியில் வேர் விட்டுவிடக்கூடாது,

விடாதுதான்,அப்படியெல்லாம் நமது மண் நமது மண் ,நமது மனிதர்கள்,நமது வீடு நமது அலுவலகம்,நமது சாலை மற்றும் நமது ,மனிதர்கள் எல்லாம் சேர்ந்து வேர்விட்டு விட விட மாட்டார்கள்,

மண் மீது நம் கவனம் இருப்பது போல் மண்ணும் நம் மீது கவனம் வைக்கும்,என நம்பிக்கை சொன்னாலும் கூட பாதங்கள் கேட்கிற வழியைக் காணோம்,

காலை மாற்றி வைக்கிற போது வேப்ப மரத்தின் அடியில் ஊர்ந்த எறும்புகள் ஒன்றன் பின் ஒன்றாக வரிசை கட்டியும் இரை தேடியுமாய்/

தேடிய வையும் தேடிச் சென்றவையுமாய் செல்கிறது வாழ்க்கை, எனச் சொன்ன எறும்பு ஓன்று வரிசை உடைத்து விலகி வந்து சொல்கிறதாய்/

நானும் எனது நட்புகளும் ஒட்டிய வயிறுடன் தேவைக்காய் இரை தேடிச் செல்கிற வழியில்தான் தாங்கள் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருக் கிறீர்கள், ஒன்று அதன் பாகங்களின் மீதேறி நாங்கள் பயணிக்க வேண்டிய திருக்கிறது, இல்லை அதன் அடியில் பாதை அமைத்து ஊர்ந்து செல்ல வேண்டியதாகிப் போகிறது,

அவ்வாறு செல்கிற பல சமயங்களில் இடைஞ்சலாகிப்போகிறது,அல்லது பாதையில் சென்ற திருப்தி இல்லாமல் எங்கோ கண்ணை கட்டிவிட்ட நிலையில் தட்டுத்தடுமாறி செல்கிறது போல் இருக்கிறது.அதில் எங்களுக்கு திருப்தி இல்லை,

”நாங்கள் ஒன்றும் இழிவாய் கிடக்கிற இனம் இல்லை,எங்களுக்கென ஒரு கூட்டம் இருக்கிறது, வசிப்பிடம் உண்டு,எங்களுக்கானப் பொறுப்புகள் தனி,அன்றாடம் உணவு தேடி எவ்வளவு தூரம் சென்று மிகவும் கஷ்டப்பட்டு சேகரித்து வருகி றோமோ அவ்வளவு தூரம் அதை பாதுகாத்தும் வருகிறோம், உங்களைப் போல் சாக்கிலும் பாத்திரங்களிலும் இன்ன பிறவற்றிலுமாய் உணவை போட்டு வைத்து பாதுகாக்கிற பழக்கம் எங்களில் இல்லை. அதற்கென மண்ணில் அடியில் நாங்கள் தோண்டி சீராககட்டி வைத்துள்ள புற்றுக்குள்ளாய்இருக்கிறஅறைகளில் பாதுகாக்கிறோம் எந்த மழையாலும் ,வெயிலிலாலும்,இயற்கை சேதத்தாலும் உணவு பறிபோய் விடுமோ என்கிற பயமில்லை எங்களுக்கு,மாறாக மனிதர்கள் வேட்டையாட வருகிற சமயங் களில் எங்களது வசிப்பிடத்தை தோண்டி நாங்கள் சேகரித்து வைத்துள்ள உணவை எடுத்துச்சென்று விடுகிறார்கள், காக்க வேண்டியகைகள் களவு செய்யும் போது நாங்கள் விதியை நோவது தவிர்த்து வேறென்ன செய்து விட முடியும் பெரிதாய்,,,?

அதற்காகத்தான் கேட்கிறோம்,எங்களுக்கென நாங்கள் தனியாய் வசிப்பிடம் அமைத்துக்கொண்டதைப்போல நாங்கள் உணவு தேடி போய் வர தனி ஒரு பாதை வேண்டும் ,எங்களுக்கென ஒரு சிக்னலும் அதை ஒழுங்கு செய்ய காவலர்களும் இருக்க ஆசைப்படலாம்தானே,,?என எறும்பு பேசிச்சென்ற நேரத்தில் வேப்பமரத்தின் உச்சியிலிருந்து குரலொன்று கிளம்பி வந்து இவன் கவனம் கிளறுவதாய்/

”கத்துவதும், கீதமிசைப்பதுமாய் மாறி மாறி தென்படுகிறதான எங்களது அடையாளம் குயிலாயும்,காக்கையாயும் அடைகொண்டு கூடு கட்டு குஞ்சு பொரித்து வாழ்க்கை நடத்தி அன்பும் காதலும் மிக வாழ்கிறதாய் இருக்கிறது தான். விளைச் சலற்ற வெற்று நிலங்களின் மீது அத்துவானம் காட்டிப் பறக்கையில் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் தென்படாத இரையை அரிதாக காண்கிற போது கொத்திக் கொண்டு வந்து நாங்கள் தின்றது போக எங்களை எதிர்பார்த்து காத்திருக்கிற குஞ்சுகளுக்காய் கொடுத்து விட்டு மிச்சமிருந்தால் நாங்கள் உண்டு ஜீவிக்கிற பாக்கியம் மட்டுமே கிடைத்திருக்கிறது/”

அதைக் கொண்டு வாழ்கிறோம் திருப்தியாய் அவ்வளவே எனச் சொல்லிய பறவையின் பேச்சு மீறி தெரிந்த வேப்ப மரத்தின் வளர்ச்சியும் ஆகுருதியும் பார்க்க பிரமிப்பாய் தெரிந்தது,

ஐம்பது வருடத்திற்கு மேலான சரித்திரம் இருக்கலாம் இந்த மரத்திற்கு என்றவாறே சாப்பிடச்சென்ற திருமூர்த்தி கடையில் அமர்ந்திருந்தவர் சொல்கி றார்,

“சார் நீங்க சொல்றது போல இல்ல,இந்த மரத்துக்கு வயசு ஐம்பதுக்கும் கூடவே இருக்கும் என்கிறார்.

எனக்குத் தெரிய ஏங் பிராயத்துல இந்தப்பக்கம் போகையில சின்னதா இதப்பாத் துருக்கேன்,இப்ப முண்டும் முடிச்சும் யெலையும், காயும், கனியுமா நிக்குது என்றார்,

”இப்ப ஒரு கனிப்புல அந்த மரத்துல எத்தனை கொப்புக எத்தனை முடிச்சுக, எவ்வளவு காய்க காய்ச்சிருக்கும் ,அதுல எவ்வளவு பழுத்து நிக்குமுன்னு சொல் லீற முடியும்,மரம் நிக்கிற மண்ணு ,அதோட தன்மை,பரப்பு மரத்தோட உறுதி ,அதோட வயசு எல்லாம் வச்சி அது இன்னும் எத்தனை நாளைக்கு தாங்குமுன்னு என்னால சொல்லீற முடியும்.ஆனா ஒங்கள் மாதிரி ஆள்களால அது வெறும் வேப்ப மரம்ன்னு மட்டும் சொல்லீற முடியும் அவ்வளவுதான், வித்தியாசம் ஒங்க பார்வைக்கும் ஏங் பார்வைக்கும்,

“அதுக்குத்தான் எந்த ஒண்ணுக்கும் பெரிய ஆள்கள கலந்தாலோசனை பண்ணுங்கண்ணு சொல்றாங்க,இப்ப தலை முறை என்ன பண்ணுறீங்கன்னா கையகலம் இருக்குற செல்போன்ல சமைச்சி சாப்புடுறது தவிர்த்து மத்த தெல்லாம் பண்ணீக்கிறீங்க,வாழ்க்கையே அதுதான்னு ஆகிப்போச்சி, பெத்த வுங்கள்ல இருந்து மத்தவுங்க வரைக்கும் அவுங்க கிட்ட பேசுறத மறந்து ட்டு செல்போன பாக்குறது மட்டுமே வாழ்க்கையின்னு நெனைச்சிக்கிட்டு இருக்குறீங்க,எங்க காலங்கள்லயெல்லாம் புதுசா கல்யாணம் ஆன ஜோடிக பஸ்ஸீல போனா பஸ்ஸே குலுங்கும்,கூட பிரயாணம் பண்ணுறவுங்கள்ல இருந்து டிரைவர், கண்டக்டர் வரைக்கும் ஒரே வெக்கமாகிப்போகும்,ஆனா இப்ப அப்பிடியா புருசனும் ,பொண்டாட்டியும் பக்கத்துல பக்கத்துல ஒக்காந் துருந்தாலும் கூட ஆளுக்கு ஒரு செல்போன கையில வச்சிக்கிட்டு ஊர் வந்து சேர்ற ஐம்பது கிலோ மீட்டர் தூரமும் ஒண்ணுமே பேசிக்கிறாம வர்றாங்களே, சரி பஸ்ஸீலதான் அப்பிடின்னா வீடு போயி சேர்ற வரைக்கும் கூடவும் இப்பிடித்தான் பேசாம போறாங்க,

”இப்பிடித்தான் புதுசா கல்யாணம் ஆன ஜோடிக ஒரு ஊருக்கு விருந்துக்கு போயிருக்குறாங்க,அது கிராமம், வழக்கம் போல ரெண்டு மூணு மணி நேரத்துக்குஒருபஸ்ஸீதான்,பஸ்ஸீக்காக காத்திருக்குறநேரத்துலசெல்போன பாப்பமுன்னு பாத்துக்கிட்டே இருந்துருக்காக, அந்த நேரத்துல பஸ்ஸீ போயிருச்சி, அதக்கவனிக்காத அவுங்க பஸ்டாண்டு ஹோட்டல்லேயே சாப்பு ட்டுட்டு சொந்த ஊருக்கு திரும்பி வந்துட்டாங்க,மறு நாளு பாத்தா இவுங்கள விருந்துக் குக் கூப்புட்ட சொந்தக்காரங்க வீட்டுக்கு வந்து சண்டை போட ஆரம்பிச் சிட்டாங்க,அப்புறம் பெரியவங்க பேசி சமாதானம் பண்ணி நடந்த ச்சொல்ல ஒரே சிரிப்பு,நல்ல வேளை திரும்பி வந்ததாவது சொந்த ஊருக்கு வந்தாங்க, செல்போனபாத்துக்கிட்டே வேற எந்த ஊரு பஸ்ஸீலயாவது ஏறாம போனா ங்கன்னு,

“இப்ப அது போலதான் ஆகிப்போச்சி எல்லாம்,பெரியவங்க அருமை தெரியி றதில்ல, பெரியவுங்கள மதிக்கிறதில்ல,பெரியவுங்கள முன்னாடி விட்டு பின்னாடி பேசுறதுன்னு எல்லாம் நடக்குது,சொல்லுல பேச்சுல நடத்தை யில நிதானம் இல்லை,படக்கு படக்குன்னு என்னத்தையாவது ஒண்ண பேசீற்றா ங்க,படக்கு படக்குன்னு நிதானமிழந்து நடந்துக்குறாங்க,படக்கு அதுஏதாவது ஒரு நேரத்துல வந்து கசந்து நின்னுக்கிருது. அந்தக் கசப்புக பின்னாள்ல விரிசல் கண்டு பெரிய சுவரா தடிச்சி நிக்குது, என்ற பெரியவர் தான் சாப்பிட்ட இரண்டு பூரிக்கும் வடைக்குமாய் காசு கொடுத்து விட்டு நகர்கிறார்,

பெரியவர் எழுந்து சென்ற சீட்டுக்கு எதிர் சீட்டில் அமர்ந்தவன் இரண்டு பூரிகளும் ஒரு வடையும் கொண்டு வரச்சொல்கிறான்,

நினைவுகளில் கிளறலில் மனம்வழியாய் இறங்கி பாதங்களில் வேர் விட ஆரம்பி த்திருந்தது,

படர்ந்தடர்ந்த மர இலைகளின் ஊடறுத்து மாலை நேர மஞ்சள் நிற சூரிய வெளிச்சம்.

மரத்திலிருந்து எழும்பிப்பறந்த பறவைகள் கத்தலுடனும்,கீதமிசைத்துமாய்,,,/

திங்கள், 6 ஜூலை, 2020

காற்றுக்கென்ன,,,,




நல்ல இசையும்,நல்ல காற்றும் எத்திசையிலிருந்து வந்த போதிலும் உவப்பா னதாயும் ஏற்புடையதாயும்/

வேலி போட்டு நிறுத்தவும்,கை கொண்டு மறைக்கவும் சுவர் எழுப்பி தடுக்கவும் காற்று ஒன்றும் கட்டுக்குள்ளாய் இருக்கிற பொருள் அல்லவே?

அது போல்தானே தண்ணீரும் பரந்து பட்ட வெளியில் உறை கொண்ட நீர் பரப்பை எது கொண்டும் மூடி விட முடியாதுதான் என்பார் இவனுடன் பணிபுரிந்த வர்,

அவரை அங்கு வைத்து பார்ப்பான் என இவன் எதிர்பார்க்கவில்லை,மாதம் பிறந்த ஒரு வாரத்திற்குள்ளாய் வீட்டுக்கு பலசரக்கு வாங்கி விடுவது இவன் வழக்கம்,

அது போலான நாட்களில் அலுவலகத்திலிருந்து வருகிற சாயங்காலங்களில் நேரம் ஒதுக்கி விடுவான், வீட்டிற்கு வந்ததுமாய் தோள்பட்டையிலிருந்து பையை இறக்கி வைப்பதுதான் தாமதம் ,பலசரக்கு பையை எடுத்துக் கொண்டு மனைவி யுடன் கிளம்பி விடுவான்,

மனைவியுடன் கிளம்ப அரசாங்க உத்தியோகஸ்தர்களுக்கென தனியாய் விடுப்பே தரலாமே,,,,?

பெரியவள் கூட கேலி பண்ணுவாள்,அம்மாவும் அப்பாவும் ஊர் சுத்த கெளம்பீ ட்டாங்க என /அவள் சொல்வதில் பெரிதான தப்பொன்றும் இருப்பதாய் தெரிய வில்லை,

“கடைக்கிப்போகிறேன்”,,,எனச்சொல்லி விட்டு இரு சக்கர வாகனத்தில் மனைவியின் இருப்பு அருகில் இருக்க இருபது அல்லது முப்பது கிலோ மீட்டர் வேகத்திற்கு மீறாமல் வண்டியை ஓட்டிக்கொண்டு போவதும் அதனூடாய் பரஸ் பரம் பேச்சையும் வீட்டின் தேவைகளையும் அவசியத்தையுமாய் பரிமாறிக் கொள்வதும் ஒரு வித அழகாயும்,மனமிதப்பாயும்தான்,

அன்று அவள் வரவில்லை வீட்டில் வேலை இருக்கிறது என இருந்து விட்டாள், சின்னவளைத்தான் கூட்டிக்கொண்டு போயிருந்தான், அவள் கொஞ்சம் கவனமாய் கவனம் வைப்பவள்,செய்கிற வேலையிலிருந்து தப்பித்தவறி கூட கவனம் திசை திரும்ப அனுமதிக்க மாட்டாள்.இரு படித்து விட்டு வருகிறேன் எனச்சொல்கிறவளை டீவி நிகழ்ச்சியோ,சமையல் வாசனையோ கவனம் கலைத்து விட முடிந்ததில்லை இது நாள் வரை/

படிப்பில் மட்டும் என இல்லை ,அவள் பார்க்கிற வேலைகள் எல்லாவற்றிலும் அப்படித்தான்நிலையூன்றுவாள், கவனம் வைப்பாள்,கண்விரிப்பாள், படபடக் கிற இமைகளைப்போல்மனதையும்,வைத்திருப்பாள்.

அவள்தான் கடையில் சிட்டை வாசித்து எழுதச்சொல்லி சரி பார்த்துக் கொடுத் தாள். எழுதுன சிட்டையை எல்லாரும் காசு குடுக்கும் போதுதான் வாங்கி சரி பாப்பாங்க, யெடையில வாங்கி சரி பாக்குறது நீ ஒருத்திதான் தாயி,ஒரு வகையில ஒங்க அம்மா அப்பா குடுத்து வச்சவுங்க தாயி,என்பார் கடைக்காரர் சிரித்துக் கொண்டே/

“அவுங்க எங்க குடுத்து வச்சிருக்காங்க,நாங்கதான் மாசா மாசம் ஒங்ககிட்ட குடுத்து வைக்க வேண்டியதாகிப்போச்சி என்பாள் பதிலுக்கு/

சரக்கு வாங்கி முடிக்கும் போதுதான் அவரைப்பார்க்கிறான்,முதலில் புடிபட வில்லை, எங்கோ பார்த்த முகம், எப்பொழுதோ பேசி உறவாடிய மனிதர், அன்பையும்,வாஞ்சையுயையும்,அதற்குமேலானஒட்டுதலையும்தனதுபேச்சின் மூலமும் செய்கையின் மூலமுமாய் இவனில் விதைத்த அருமையா ன மனிதர். அவர் போல் எவரிங்கு என சொல்லி விட முடியா விட்டாலும் கூட இதுவரை பார்த் தறிந்ததாய் ஞாபகமில்லை,

பக்க வாட்டில் பார்க்கும் போது உறுதியாய் அவராய்த்தான் தெரிந்தார், ஆனால் நேர் படப்போய் பார்க்கிற தைரியம் இல்லை,அவருக்கும் இவனுக்கு மான இடை வெளி ஐந்தடி இருக்கலாம்,

வாங்கிய பலசரக்குகளுக்கு காசு கொடுத்து விட்டு பையை மகளிடம் தந்துவிட்டு நகர்கிறான் அவரை நோக்கி,அவர் சரக்கு வாங்குவதிலும் வேறு ஒன்றிலுமாய் கவனமாய் இருந்தார்,

அவரது தோள் தொட்டு திரும்பிப் பார்க்க வைக்க இவனுக்குக்கொஞ்சம் தயக்கமாய் இருந்தது,சரி எப்படியாவது பார்க்க வைக்க வேண்டும்,அவருடன் பேச வேண்டும் என நினைத்தவனாய் தோள் தொட்டான்,

தொட்ட தோளை தோள்பட்டையாலேயே தட்டி விட்டுவிட்டு திரும்புகிறார், அவரேதான்,

“சார் தங்களை இங்கே எதிர் பார்க்கவில்லை,இவ்வளவு பழுத்த வயதில்” என்கிற அவனது பேச்சை எதிர் கொண்டவர் லேசாய் சிரித்து விட்டு இந்நேரம் நான் இறந்து போயிருப்பேன்னு எதிர்பாத்தவுங்கதான் அதிகம்,ஏங் காது படவே எத்தனையோ பேரு பேசிருக்காங்க,அவுங்க பேச்சு ஒண்ணும் தப்புன் னு சொல்ல முடியாது. என்றவர் போயிருப்பேன் எப்பொழுதோ, ஓங் போன் றவர்களை பாக்குற பாக்கியம் இன்னும் ஏங்கிட்ட நிலை கொண்டு இருக்கும் போது எப்பிடி போறது சொல்லு.எனப்பேசியவர் வாங்கிய இரண்டு மூன்று சரக்குகளுக்கு காசு கொடு க்கப் போன இவனைத் தடுத்து பணம் கொடுத்து விட்டு இன்னும் அந்த நெலைமைக்கு வரலை,தம்பி எனச்சிரித்தவாறே நகர்கிறார், இவனிடம் விடை பெற்றுக்கொண்டு/

விடை பெற்றவரை இடை நிறுத்தி “சார் எனக்காக ஒரு உதவி செய்வீங்களா, எங்க கூட வந்து ஹோட்டல்ல டிபன் சாப்புட்டுப்போகணும்” என்றான்.

என்ன நினைத்தாரோ மறுக்காமல் வந்து விட்டார்,ஹோட்டலில் திறந்த வாய் மூடாமல் பேசிக்கொண்டிருந்த இவன் மகளை அருகில் அழைத்து சாப்பிடும் போது பேசுனையின்னா ,ஒன்னு விக்கல் எடுக்கும் இல்ல வயித்துல காத்து அடைச்சிக்கிரும் என்றார்,ஆனாலும் அவள் பேசிக் கொண்டிருந்தாள் அவரிடமே/

ஆச்சரியமாக பார்த்த அவர் அம்மா பழக்கமா என்றார் இவனிடம்,அவளும் அப்படித்தான் பலசரக்கு வாங்க வருகிற நாட்களில் வழக்கமாய் போய் விடுகிற ஹோட்டலில் சாப்பிடுகிற பொழுது டிபன் பாதி,பேச்சு பாதி என அவளதுவயிற்றுக்குள்போய்க்கொண்டிருக்கும்,பரிமாறுபவர்கூடச்சொல்லுவார், பேசுறதுல தப்பில்ல, ஆனா சாப்புடறத மறந்து பேசிக்கிட்டு இருக்குறதுதான் தப்பு என்பார்,

வழக்கமாக செல்கிற ஹோட்டல் என்பதால் இவர்களைப் பார்த்ததும் ஹோட்டலுக்குள் எந்த டேபிளுக்கு பரிமாறிக்கொண்டிருந்தாலும் இவர்களது மேஜைக்கு வந்து விடுவார்,

இவனது மனைவி அவரை அப்பா என்றுதான் அழைப்பாள்,அவளது தந்தையின் வயதிருக்கும் அவரைப்பார்த்ததும் தந்தையின் ஞாபகம் வந்துவிடுகிறது என்பாள்,

அவருடன் சாப்பிடப்போன அன்றும் அவர்தான் பரிமாறினார்,”என்ன சார்,ஏங் மக வரலையா,சார் யாரு புதுசாத்தெரியுது இது நாள் வரைக்கும் ஹோட்டல் பக்கமே சாரைப்பாத்தில்லையே என்றவர் பரிமாறிவிட்டு நகர்கிறார்,

பழையதாய் தெரிந்த ஹோட்டலுக்கு கண்ணை உறுத்தாத வர்ணத்தில் பெயிண்ட் அடித்திருந்தார்கள், பார்க்க அழகாய் இருந்தது, அங்கங்கே ஒட்டி யிருந்த ஜிகினா பேப்பரும் டிசைன் பேப்பரும் ஹோட்டலுக்கு அழகு சேர்த்தது, வேகமெடுத்துச் சுற்றிய நான்கைந்து காற்றாடிகளில் ஒன்று கிரிச்சான் கிரிச்சான் என சப்தமெழுப்பியது,பளிச்சிட ட்யூப் லைட்டுகள் சிலவற்றில் சுற்றியிருந்த கலர் பேப்பர் கடையின் டைல்ஸ் தரையில் பட்டுப் பளிச்சிட்டது,

பேசிக்கொண்டே சாப்பிட்டுக்கொண்டிருந்த இவர்களுக்கு முன்னாய் சாப்பி ட்டு விட்டவர் கையை கழுவி விட்டு வந்தார்,

அப்பொழுது போல் அதே ரேமண்ட் பேண்ட்,அதே முழுக்கை சட்டை,இன் பண்ணி டக் விட்டிருந்தார், சட்டைப்பையில் இரண்டு விரல் தடிமன் கொண்ட மரக்கட்டைப் பேனாவை சொருகியிருந்தார்,

வேலையிருக்கிறது என சொல்லி விட்டுக்கிளம்பியவரை ஆச்சரிமாய் பார்த்தவன், வீட்டுவரை கொண்டு வந்து விடட்டுமா சார் என்றான், வேண் டாம் என மறுத்தவராய் கடையின் நடையை தாண்டி போய்க் கொண்டிருந் தார்,வேகமாக/

இவனுக்கு சீனியர், அவர் பணிபுரிந்த அலுவகத்தின் கிளைக்கு இவன் பணி மாறுதல் செய்யப்பட்டிருக்கிறான் என அறிந்த நாளில் சந்தோஷப்பட்டதும் விரைந்து வா உடனே எனச் சொல்லி அகமகிழ்வு கொண்டதும் அ வரே/

அப்பொழுதெல்லாம் இது போல செல்போன் இல்லை,அலுவலகத்தின் லேண்ட் லைன் போன்தான்.அதில்தான் எல்லாம்,அலுவலகப்பயன் பாடு தவிர்த்து சொந்த பயன் பாட்டிற்கும் அதுவெனவே ஆகிப்போகிற சாஸ்வதம். வேறென்ன செய்ய இருக்கிற இடத்தில் தானே பயன் படுத்திக்கொள்ள முடியும்,,,,?

ஒரு பணிநாளின் மும்பரத்தில் இருந்த மத்தியான வேளையில் போன் வருகிறது,ரெஸ்டாக இருப்பான் போலும் என நினைத்திருப்பாராய் இருக்கும், ஆனால் நிலைமை தலைகீழாய் இருந்தது,ஆளை அமுக்கிற வேலையிலிரு ந்து தன்னை பிய்த்தெடுத்துக்கொண்டுதான் வந்தான் வேண்டா வெறுப்பா யும், போன் பேசவுமாய் /

அது அப்படித்தான் ஆகிப்போகிறது,பணி மிகுதியாய் இருக்கிற தினங்களில் வீட்டிலிருந்து அம்மா அழைத்த போதும் கூட எரிச்சலாகி விடுவான். அது எப்படி அவனில் முளைக்கிறது,எப்படி கட்டுப் படுத்த ,, ,? இன்று வரை அதற்கு விடை தேடி அலைகிறான் கிடைக்கவில்லைதான், சிலரானால் போன் வந்து விட்டால் போதும்,எந்தக்கவலையுமற்று அந்த உலகத்திற்குள் போய் விடுகிறார்கள் ”அக்கம்பக்கம் அலுவலகம்,பப்ளிக்,கூட்டம் வரிசை,”,,ம்ஹீம் அது பற்றியெல்லாம் கிஞ்சித்தும் கவலைகொள்ளாமல் அடித்து நகட்டிக் கொண்டிருப்பார்கள்,

இவன் அது போல் எப்பொழுது ஆவான் என கடவுளிடம்தான் கேட்க வேண்டு ம், அல்லது கடவுளிடம் சொல்லி இவனை அப்படி மாற்றி விடச் சொல்ல வேண்டும்அதுஆகாதுபோலிருக்கிறது,இப்போதைக்கு,,/என நினைத்தவனாய் போனை எடுத்த போது எதிர் முனையில் அவர்,

“என்ன தம்பி நல்லாயிருக்கையா என்பதுதான் அவரது முதல் பேச்சாய் இருந்தது.இவன் பணிக்குச் சேர்ந்த நாள் முதல் இவ்வளவு ஒட்டுதலாய் யாரும் இவனிடம் பேசிக் கேட்டதில்லைஅவ்வளவு ஒட்டுதலான பேச்சு,அவ்வளவு வாஞ்சையான விசாரிப்பு, அவ்வளவு தொடுதலான உணர்வு,எல்லாம் சேர்ந்து இவனைக்கொஞ்சம்கிரங்கடித்ததுதான்,சுதாரித்து நின்றுஅவசரஅவசரமாய் பேசிவிட்டுஅன்று மாலையே அங்கிருந்து ரிலீவாகி பணிமாறுதலான கிளைக்குச் சென்ற போதுதான் தெரிந்தது பேசியவரின் பேச்சு மட்டுமில் லை, செய்கைகளும் அப்படித்தான் என/.

வார்த்தைகளுக்கும்,செய்கைகளுக்கும் இடையே சுவர் எழுப்பிக் கொள்ளாத நிஜம் அவரில் தென்பட்டது,அவரது வயது அவரது அனுபவம், எல்லாமும் சேர்ந்து அவரை எங்களிடமும்,இல்லை எங்களை அவரிடமுமாய் நெருங்கி பழகிவிட்டி ருக்கவில்லை.ஆனாலும் கூட மிகவும் விலகி நிற்க மாட்டார், தூரத்தில் நின்றாலு ம் கூட எங்கள் மனம் படித்து அருகாமையில் வைத்திருப் பார்.

காத்துக்கும் தண்ணீக்கும் பேதமில்லப்பா,நல்லதா கெடைக்கும் போது ஏத்துக்கக்கத்துக்கணும் என்பார்.

”ஏத்துக்க கத்துக்கிடணுன்னு சொல்ற நீங்க அன்னைக்கி ஒரு நா ராத்திரி வேலை பாக்குற கிராமத்துல தங்குனப்ப நீலப்படம் ஓடுது ஒரு யெடத்துல , நாங்கள்லாம் போயி பாத்துட்டு வந்துர்றமுன்னு வேலை பாக்குற அத்தன பேரும் கேட்டப்ப எல்லாரும் போனா நீயும் அவுங்க கூடப் போவையா, அவுங்க பாதை வேற ,ஓங் பாதை வேறைன்னு,, எனக்கு தடுப்பு வேலி போட்டவ றில்லையா நீங்க”,,,,எனச் சொன்ன இவனை ஏறிட்டுப்பார்த்தவர் ”ஆமாம் இப்பயும் சொல்லுறேன் அவுங்கள்லாம் வேற,நீ வேற,ஓங் ஒயரம் வேற, நீ எட்டித் தொடப்போற எல்லை வேற, ஒன்னோட ஆகுருதி வேற,,, இப்பிடி எல்லாமே உன்னில்ல வேற,வேற தம்பி ,அதுனாலத்தான் அப்பிடிச் சொன்னேன், நல்லது கெடைக்கும் போது ஏத்துக்குற கத்துக்கணு முன்னு சொன்னேனே ஒழிய இது போல நீலப்படம் பாக்குற வாய்ப்பு கெடைச்சா விடாதன்னு சொல்ல வரலையே, தம்பி,ரெண்டாவது அதெல்லாம் ஒரு வாய்ப்புன்னு நெனைக்காத,நரகல மிதிச்சிட்டு காலக்கழிவிக்கிறது வாய்ப்புன்னு நெனைப்பையா தம்பி என கேள்விக்குறியிடுவார்,

போற போக்குல ரோட்டுல கெட்டது ரெண்ட பாக்க வாய்ச்சது போலன்னு நெனைச்சுக்கயே என்பார்,கூடவே/

”கெட்டத பாக்காததுனால பெரிசா நஷ்டமாகிறப்போயிற்றதில்ல,ஆனா நல்லத பாக்காம தவற விடும் போது பலத்த நஷ்டம் ஏற்பட்டுப்போகுதான் நமக்கு, இதுல நீலப்படம் பாக்கலைன்னு பெரிசா வருத்தம் எதுக்கு,,? நீலப்படம், தலை கிறுகிறுக்குற போதை ,சிகரெட்டுப் பொகை, எல்லாம் இந்த வயசுல நல்லாத் தான் இருக்கும் ,ஆனா இதெல்லாம் சேர்ந்து ஒன்னைய ஒக்குட்டுருமே ஒழிய பாதுகாக்காது, பாலும் வெள்ளைதான்,பாலோட கலந்த தண்ணியும் வெள்ளை தான்.நாமதான் அதை பிரிச்சரியிறபக்குவம் கத்துக்கணும்” என்றார்,

அவர் அன்று சொன்னது போது உதாசிக்காமல் பாலையும் தண்ணீரையும் பிரித்தரியும் பக்குவம் கற்றுக் கொண்டான், ”பால் பருக வேண்டிய நேரம் எது? தண்ணீர் பருக வேண்டிய நேரம் எது”,,,? என பிரித்து வரிந்து கொண்டான்,அதி முக்கியமாய் பாலை,பாலாகவும் தண்ணீரை,தண்ணீராக மட்டுமே பார்க்கப் பழகிக் கொண்டான், கூடவே வெண்மை நிறத்திலான கள்ளையும்/

’ஓங் வயசு ஏங் அனுபவம் தம்பி,ஏனோ ஓங்கிட்ட சொல்லத்தோணுது சொல்றேன், சும்மா சொல்லுவான் அவனவன்,நீ அதெல்லாம் கணக்குல எடுத்துக்காத ,நாந்தான் உலத்துலயே நல்லவன்,அவன் கெட்டவன், மோசமா னவன், ஒரு மாதிரியான ஆளுன்னு பேசுவான்,அப்பிடிச் சொல்றவனை நெருங்கிப்போயி பாக்கும் போதுதான் தெரியும், அவனோட கேடு கெட்டத் தனத்த மறைக்கிறதுக்காக பக்கத்துல இருக்குற ஆளு மேல சேறு அள்ளி பூசுவான் ஈஸியாங்குறது,,/ அவன் கிட்ட இருக்குற நாத்தத மறைக்கிறதுக் காக அடுத்தவன் மேல மலம் அள்ளி வீசுவான், நம்ம அந்த மாதிரி நேரத்துல சேறையும்,மலத்தையும் ஒதறி விட்டுட்டு போயிக்கிட்டு இருக்கணுமே ஒழிய ஒறைஞ்சி நின்னுறக்கூடாது,பன்னி ஒரசுறதுங்குறதுக் காக பதிலுக்கு நாம போயி ஒரச முடியுமா சொல்லு”என்பார்,

சரி சார் பன்னி ஆளக்கொல்ல வந்தா என்கிற இவனது கேள்விக்கு தயங்காமல் சொல்லுவார்,கதம்,கதம்,,,தான் என/

அவருக்கு தீராத முழங்கால்வலி இருந்தது,என்னனென்னமோ வைத்தியம் செய்த பார்த்தவர் கடைசியில் ஹோமியோபதி மருத்துவம்தான் பார்த்து வந்தார்,

அலுவலகம் முடிந்தஒரு மழை நாளின் மாலையில் அர வேண்டிய பேருந்து வரவில்லை,ரிப்பேர் என்றார்கள்,பக்கத்து ஊரில் பீ,டியாகிக்கிடக்கிறது என்றார்கள்,

அது போக்குவரத்து மொழி,பீ,டி என்றால் இவனுக்கு நீண்ட நாட்களாய் தெரிய வில்லை,ஒரு நாள் ஜன்னலோர இருக்கையில் ஓய்வாய் அமர்ந்திருந்த கண்டக்டரிடம் கேட்ட பொழுது பிரேக் டவுனின் சுருக்கம் அது என்றார், ஆகா,,இது தெரியாமல்தானா இத்தனை நாள்,,,,,?இவனின் முகக்குறிப்பு அறிந்தவராய் சார் எல்லாருக்கும் எல்லாமும் தெரிஞ்சி இருக்காது,அதே போல யாருக்கும் எதுவும் தெரியாம இருக்காது தெரியுதா என்றார்,கொஞ்சம் உரிமை எடுத்து பேசுபவர் ,சமயத்தில் ஒட்டுதலாயும், கூட/ஒரே பேருந்தில் பயணிப்பதால் வேர் விட்ட பழக்கம்,

பேருந்தில் பயணிக்கிற அனைவரிடமும் மிகை மீறாத நட்பும்,பேச்சும், சிரிப்பும் அவரிடம் இருந்தது இவனுக்கு மிகவும் பிடித்திருந்தது,

இன்று காலையில் பயணித்த பொழுது அவர் இடத்தில் வேறு ஒரு நடத்துனர் ,சிரிப்பும் பேச்சும் கலகலப்பும் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்டார்,

சரி வேணாம் வம்பு என அவரிடம் தூரமாய் இருந்து டிக்கெட் மட்டும் வாங்கிக் கொண்டு அமைதியாய் உட்கார்ந்து கொண்டான்,

இப்பொழுது அந்த பேருந்து வராததது ஓரு வகையில் ஆறுதல்.அவரது முகத்தில் முழிக்க வேண்டிய வேலை கட்டாகி விடும்தானே,,,,,?

இப்பொழுது வர வேண்டிய பஸ் வராவிட்டால் இரவு ஒன்பது முப்பதுக்குத் தான் பஸ்,ஆனால் அதுவும் உறுதியில்லை,வந்தால் ஏறிக்கொள்ளலாம்,

என்ன செய்ய,,?இது போலான பேச்சிலும் யோசனையிலுமாய் ஒரு மணி நேரம் ஓடிப்போனது,

உள்ளூரில் இருக்கிற ஒரு லோடு வேனை பேசினார்கள்,வருகிறேன் எனச் சொன்னார், சம்மதித்த டிரைவர் பஸ் டிக்கெட்டை விட ஐந்து ரூபாய்க் கூடக் கேட்டார் டிரைவர்.

அதற்கே சில பேர் முக்கலும் முனகலுமாய் இருந்தார்கள்,முடிவு பண்ணிச் சொல்லுங்க என டிரைவர் வேனைக்கொண்டு வந்து நிறுத்திவிட்டு சாப்பிட்டு வருகிறேன் எனப்போய் விட்டார்,

பஸ்ஸீற்காய் நின்றிருந்தவர்கள் ஏறி அமர வேனில் தாராளமாய் இடம் இருந்தது, வேன் ஊர் போய் சேர எப்படியும் ஒரு மணி நேரம் ஆகும்,வண்டி ஓடுகிற ஓட்டதில் நேரம் போவது தெரியாது,ஆனால் முட்டிக்கொண்டு வருகிற ஒண்ணுக்கு அது தெரியாது,போக வேண்டிய நேரத்தில் போய்த்தான் ஆக வேண்டும், அப்பொழுதுதான் பஸ்ஸீற்காய் காத்திருந்த ஒரு பெண் சொன்னாள்.ஐம்பதுவயதைநெருங்கியதோற்றம்,கட்டியிருந்த புடவையிலும், தலைக்கு வாரி நெற்றிக்கு இட்டிருந்ததிலும் நேர்த்தியாய் தெரிந்தாள்.
 
ஐயா,ஆம்பளைங்கெல்லாம் ஒவ்வொருத்தரா தனித்தனியா போகா மொத்த மா போயிட்டு வந்துட்டீங்கன்னா,நாங்க நிக்கிற அஞ்சாறு பொம்பளைங்க அப்பிடியே போயிட்டு வந்துருவம் என்றதும் இவரது சீனியர் ஸ்டாப்புடன் இவனும் சென்றான்,வரும் போதே காலை தாங்கித்தாங்கிதான் நடந்தார், இவன் தோளில் கை போட்டுக்கொண்டு,ஒண்ணுக்கும் முட்டிக்கிட்டு வருது, பசிக்கவும் ஆரம்பிச்சிருச்சி, வயசான ஒடம்பில்லையா தாங்கல, கையில பிஸ்கட்டு வச்சிருக்கேன்,ஒன்னுக்கிருந்துட்டி போய் வேனுகெளம்புறங்குள்ள ரெண்டு பிஸ்கட்ட சாப்புட்டு தண்ணியக் குடிச்சிட்டா வீடு போற வரைக்கும் வயிறு கொஞ்சம் தாங்கும்,என்ன மழை நேரம்ங்குறதுனால தண்ணி குடிச்ச ஒண்ணுக்கு வந்துருமோன்னு யோசனை யா இருக்கு,உள்ள படி ஆகுது என்றவராய் அவர் ஒண்ணுக்கு போய் விட்டு வந்து அவர் சொன்ன படி செய்தார்,

வேன் செல்கிற வழியில் இருந்த ஊர்களிலெல்லாம் ஆட்களை ஏற்றிக் கொண்டு முழுவதுமாய் சென்று கொண்டிருந்தது.

ஊரை நெருங்க ஐந்து கிலோ மீட்டர் இருக்கும் போது வே டயர் வெடித்து நின்று விடுகிறது,

பசிய கிராமங்களின் வயல்வெளிகளும்,காடு கரைகளும்,பயிர் பச்சைகளு மாய் கண்னை குளிவிக்க இறங்கி நடந்தார்கள்,

இவனது சீனியர் சிறிது தூரம் தெம்பாய் நடந்தவர் வர வர தவங்க ஆரம்பித்தார், இவந்தான் சொன்னான் ,சார் ஏங் தோள்ல கை போட்டுக் கிருங்க, பேசிக்கிட்டே போயிரலாம் அப்பிடியே என்றவனாய் அவரை தோளில் சாய்த்துக்கொண்டு நடந்தார்,

“இந்த மாதிரி தோள்ல சாய்ச்சிக்கிற ஒரு மனசு வீட்டுல இருந்தா நாந்தான் இந்த உலகத்தின் முழுபாக்கியவானாயிப்போவேன் என பேசிக்கொண்டு வந்தவர் சிறிது மௌனமானார்..

அவரது பேச்சில் எப்பொழுதும் மிதமிஞ்சி இருக்கிற அருகாமையும், அரவணைப் பும் மௌனத்தில் கரைந்து போகிறது,

மற்றபடி அவரது பேச்சில் இருந்த உயிர்ப்பின் அளவு எப்பொழுதும் இருந்தது தான்,

அந்த அளவை அலுவலகத்திற்கு டீக் கொண்டு வருகிற பையனிலிருந்து ,ஊர் பெரியவர் வரை அப்படியே நீட்டித்துக் காப்பாற்றுவார், அதுதான் அவரை பணி ஓய்வு பெற்றுச் செல்லும் வரை மதிப்புடன் வைத்திருந்தது,

டீக்கடையிலிந்துதான் பாடல் வந்தது.

பாடலில் பொழிந்த அந்தி மழை காற்றுடன் கலந்து வந்ததாய்,/

நல்ல இசையும் நல்ல காற்றும் எத்திசையிலிருந்து வந்த போதிலும் உவப்பா னதாயும், ஏற்றுக்கொள்ளக்கூடியதாயும்,,,,/

ஞாயிறு, 24 மே, 2020

இறகசைவு,,,,,

இறகு போல லேசாகவும் பூப்போல மிருதுவாகவும் இருந்தால்தான் இப்படியாய் பேசவும் சிரித்து விடவுமாய் முடியும் போலிருக்கிறது,

இறகு என்பது ஒரு உயிர்,உயிர் என்பது உடலின் மையம்,மையமாய் உருக் கொண்ட உடல் உயரப் பறக்கிறது,தாழ்கிறது,அமர்கிறது,கைகோர்க்கிறது, கோர்த்த கைகளும், மனமுமாய் சேர்ந்து செய்விக்கிற வித்தை ஒன்றாய் பத்தாய் நூறாய் முளைத்துக் கிளைத்து பூவும் பிஞ்சும் காயும் கனியுமாய் காட்சிகொண்டு படர்கிறதுதான்.

பூ என்பது மொட்டு,விரிவு,மலர்வு,மணம்,,,என எல்லாம் தாங்கியதுதான் , என்கிற நண்பனிடம் இவனால் ஒன்றும் பேசி விட முடியவில்லை,

சிரிப்பு வாய்க்கப் பெறுகிற வரம் தான், தினங்களின் வழக்கத்தில் காலை யில் டீக்குடிக்கச்செல்கிற கடைக்கு வருகிறவர்களில் அவர் மட்டுமே சற்று வித்தி யாசம் காட்டி சிரிக்கிறார், பேசுகிறார், பழகுகிறார், ஓரு வார்த்தை பேசும் முன்னதாய் ஓராயிரம் தடவைகள் சிரிக்கிறார், வேண்டுமென்றோ வலியப் புனைந்ததாகவோ, ஒட்டவைக்கப்பட்டதாகவோ, பட்டுத்தெரிந்து விடவில்லை அவரது சிரிப்பு, உண்மையும் யதார்த்தமுமாய் பட்டு பிரதி பலிக்கிற பெருஞ் சிரிப்பாய் அது.அவர் சிரிக்கச்சிரிக்க சிரிப்பு வருகிறது, அவர் பேசப் பேச பேச்சும் கூடவே நெய்த சிரிப்பும் கலந்து வருகிறது,

இதில் பேச்சிற்கு தனி ட்ராக், சிரிப்பிற்கு தனி ட்ராக் என்பதெல்லாம் இல்லை, இரண்டும் கலந்து விட்ட மகாத்மியமாய் இருக்கும்,அவர் கடைக்கு வந்து விட்டாலே அவரைச் சுற்றி இறகு முளைக்காது பறந்து வந்தமர்கிற கூட்டமாய் மனிதங்கள், அவரது பேச்சிற்கோ இல்லை சிரிப்பிற்கோ மட்டும் கூடுகிற கூட்டமாய் இருக்காது அது, மாறாக அவரிடமிருக்கிற உண்மைக்காய் கூடுகிற கூட்டமாய் இருக்குமேயன்றி வேறில்லை,

பாய் கடைக்கு போவோம் என்பது இவன் எதிர்பாராத ஒன்று.பாய் கடை இவனுக்கு பல் முளைத்த காலத்திலுருந்து பழக்கம்,வாடகைக்கு சைக்கிள் இத்தனை மணி,இந்த இடம் எனச் சொல்லி விட்டுப்போவான் லீவு நாட்களில்,

ஒரு மணி அல்லது இரண்டு மணி நேரம் என்பது இவனுக்கு விடுமுறை தினங்களில் வாடிக்கை,பாய் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேரமும் கடை திறந்திருக்கும்,

அவரது கடை இருக்கிற ரோடே காலியாகிக்கிடக்கிற இரவு வேளைகளில் ஏழு அல்லது எட்டு மணிவரை கூட இவரது சைக்கிள் கடை பள்ளிப்பிள்ளைகளால் நிரம்பியிருக்கும்,

ஞாயிறுகளில் நடமாட்டம் குறைவாக இருக்கிற சாலையில் சைக்கிள் கற்றுக் கொள்வது ஈஸியாக இருக்கும் என்பது சைக்கிளை வாடகைக்கு எடுக்கிற பிள்ளைகளின் நம்பிக்கை,

அவரது கடையிலேயே எடுத்து அருகில் இருக்கிற ரயில்வே ஸ்டேஷன் சாலை யில் சைக்கிள் பழகிக்கொள்வது ஈஸியாக இருக்கும் உடன் வந்து பழகிக் கொடுப்பவருக்கும் தொந்தரவு இல்லாமல் இருக்கும்.இதற்காகவே பள்ளிப் பிள்ளைகள் சனி ஞாயிறின் விடுமுறைக்கு ,பாய் கடையில் வாடகை சைக்கி ளையும் ரயில்வே பீடர் ரோட்டையும் குத்தகைக்கு எடுத்துக்கொள்வது ண்டு,  அதற்காக அவர்கள் வீடுகளில் பிடிக்கிற அடம் கண் கூடு,

பாய் கடை யாரை நம்பி ஓடியது என்கிற வாதம் இங்கு தேவயற்றது என்ற போதிலும் கூட சனி ஞாயிறின் விடுமுறை தினங்களில் அவரது சைக்கிள் கடை யின் ஓட்டம் பள்ளிப்பிள்ளை களை நம்பியே என தெளிவுறச் சொல்லி விடலாம்,

இதில் நம்மாழ்வாரின் பிள்ளைகளுக்கு பாய் சைக்கிளை தனியே எடுத்து வைத்து விடுவார்,

அந்தப் பிள்ளைகள் மற்ற பிள்ளைகளைப்போல என்னா பாய் சைக்கிள் இருக்கா என காசை எடுத்து கையில் வைத்து நீட்டுக் கொண்டு அதிகாரம் பண்ணுவதில்லை.அந்தப் பிள்ளைகளுக்கு அந்தப் பழக்கம் சுட்டுப்போட்டா லும் வராது,

தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்.நல்ல வேளை நம்மாழ்வாரின் பிள்ளைக ளுக்கு அது வாய்க்கவில்லை,வாய்க்கவும் வாய்க்காது என நினைக்கிறார், தொட்டில் பழக்கத்தை இப்பொழுதெல்லாம் சூழலும் கொஞ்சம் மாற்றி விடுகிறதுதானே?

வளர்ப்பு, படிப்பு, குடும்பம், பழக்கம், சூழல், எல்லாவற்றின் கூட்டிசைவில் பிள்ளைகள் பிசைந்து உருவாக்கப்பட்ட உருவம் நடப்பு சாட்சியாய் நிற்கிற போது நம்மாழ்வாரின் பிள்ளைகள் மட்டும் சற்று விலகியே,,,/

அண்ணனும் தங்கையுமாய்த்தான் வருவார்கள்,காலை பதினோரு மணி தாண்டி வருகிறவர்கள் சைக்கிள் கடையின் ஓரமாக கைகட்டிக்கொண்டு நின்று கொள்வார்கள், பாய் பார்த்து சைக்கிள் ஒதுக்கிக்கொடுக்கும் வரை அவர்களது பள்ளிப்பாடங்கள்,வீட்டு வேலைகள் பற்றி பேசிக்கொண்டிருப் பார்கள்,

“அம்மாவுக்கு மருந்து வாங்கிக்கொண்டு போக வேண்டும் போகும் பொழுது” என்பது அவர்களது பேச்சின் முடிவாய் இருக்கும்,ரெண்டு பேரும் வந்து இப்பிடி கையக் கட்டிக்கிட்டு செவத்தோரமா நின்னுக்கிட்டா எங்களுக்கு எப்பிடித் தெரியும்நீங்க வந்துருக்கீங்கன்னு,சொல்ல வேணாமா,என கடைக் காரர் கேட்கிற கேள்விக்கு மௌனமே அவர்களது பதிலாய் இருக்கும்,அல்லது ஒரு மென் சிரிப்பு,

“இப்பிடியே சிரிப்பையும் மௌனத்தையும் மட்டுமே வச்சிக்கிட்டு வண்டிய ஓட்டீற முடியாது தெரிஞ்சிக்கங்க,,,,,” என சொல்கிற பாய் ”கொஞ்சம் சீக்கிர மா வரக்கூடாது ,இந்நேரம் வந்தீங்கன்னா இப்பிடித்தான் ஆகிப் போகும், சைக்கிள் வெளியில போயிரும்,காத்துக்கிட்டில்ல கெடக்கணும்,

”அம்மாவுக்கு மருந்து வாங்கணுமுன்னு சொன்னீங்கல்ல,போயி வாங்கிக் குடுத்துட்டுக்கூட வாங்க, சைக்கிள் வந்தா நிறுத்தி வைக்கிறேன்,என்பவர் பாவம் இந்த வயசுல ஒங்கம்மாவுக்கு வந்த சுர நோயி வேற யாருக்கும் வரக்கூடாது , அவ பண்ணுன பாவமோ ,ஒங்கப்பாவும் நீங்களும் செஞ்ச புண் ணியமோ அவள இன்னும் கொண்டு போகாம உசுரோட வச்சிருக்கு, ஒங்கம் மாவ காப்பாத்த ஒங்கப்பன் கொஞ்ச நஞ்ச பாடா பட்டான், கௌவர் மெண்டு ஆஸ்பத்திரியே கதின்னு கெடந்தான்,இங்க இருக்க ஆஸ்பத்திரியில இதுக்கு மருந்து இல்லைன்னு மதுரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகச் சொல்லீ ட்டாங்க,

“இப்ப இருக்குற மாதிரி அப்பயெல்லாம் மதுரைக்கு நெனைச்ச ஒடனே போயிட்டு வந்துர்ற வசதியெல்லாம் கெடையாது,ரெண்டாவது இத்தனை பஸ்ஸீ ங்களும், நால்வழிச் சாலையும் கெடையாது,இருந்துகூட எல்லாம் ரெடி பண்ணி யாச்சி, மதுரை ஆஸ்பத்திரிக்கி போறதுக்கு /

ஒங்கப்பன் ஏங்கூட படிச்சவங்குறது ஓங்களுக்கு நல்லாத்தெரியும்,அது போல இன்னும் பத்துப்பேரு இந்த ஊர்லதான்இருக்கோம்.

நாங்களெல்லாம் பெரிசா ஆகா,ஓகோன்னு பொழச்சிறல, நான் எப்பிடி சைக் கிள் கடை வச்சிருக்கேனோ அது போல அவுங்கெல்லாம் ஒவ்வொரு வேலை யில இருக்காங்க,ஒரு தொழில் பண்றாங்க,,,,நாங்க எல்லாம் ஏதாவது குடும்ப விஷேங் களப்ப மட்டும் இல்ல,ஏதாவது அவசரம் ஆத்திரம், ஆஸ்பத்திரின்னா ஒண்ணு கூடிருவோம்,

எங்கள்ல நல்ல காரியங்கள்ல ஒண்ணு சேராம போனவுங்க கூட ஏதாவது துக்க நிகழ்வுகன்னா,இல்ல ஏதாவது நாங்க வந்தாத்தான் ஆகணுமுன்னு ஒரு சூழ்நிலை இருந்தா வந்து கைகோர்த்துருவோம்.

அப்பிடித்தான் ஒங்க அம்மாவ ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கிட்டு கூட்டிக்கிட்டுப் போகும் போது நடந்துச்சி,ஒங்க அம்மா விஷயத்துல மட்டும் இல்ல,நாங்க பத்துப் பேரும் பத்து பேரு வீட்டுல ஏதாவது நல்லது கெட்டது நடந்தாலும் ஒண்ணுக் கொண்ணு கைதூக்கி விட்டுக்குருவம்.பண விஷயத்துல இருந்து மத்த எல்லாத்துலயுமா ஒண்ணுக்கொண்ணு கைதூக்கி விட்டுக்கிட்டது போல அன்னைக்கும் எல்லாருமா சேந்துதான் ஒங்க அம்மாவை மதுரை ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைச்சோம்,

“அப்ப ஏறிட்டுப்பாத்த ஒங்கப்பனோட பார்வைய புரிஞ்சிக்கிட்ட நானு இப்ப என்ன கொழந்தைகளப்பத்திதான யோசிக்கிற ,அதுக ரெண்டையும் ஏங் கிட்ட விட்டுப்போ,ஏங்புள்ளைகளோட புள்ளைங்களா அதுகளும் இருந்துட்டு ப் போகட்டும். இருக்குறப்ப அள்ளித்திங்கட்டும்,இல்லாதப்ப கரைச்சிக் குடிக் கட்டும், அவ்வ ளவுதான,விடு கவலைப்பாடாம போயிட்டு வா, கூடிருக்கு தாங்கிக்கிற,வீடிருக்கு பொங்கிக்கிற,பள்ளிக்கூடம் இருக்கு படிச்சிக்கிற நாங்கெல்லாம் அப்புறம் எதுக்கு இருக்கோமுன்னு நெனைக்கிற,இந்த மாதிரி பொழுதுகள்ல கூட ஒருத்தருக்கொருத்தரு தோள்குடுக்காட்டி அப்பறம் நம்ம பழகுன பழக்கத்துல சூத்த விழுந்துரும்டான்னு,,,” சொன்ன மறு நாளே ஒங்கள கூப்பிட்டுக்கிட்டு வந்து எங்க வீட்ல விட்டுட்டு மதுரை ஆஸ்பத்தி ரிக்கி கெளம்பீட்டாங்க,அன்னைக்கி ஒங்க அம்மா அழுத அழுகைக்கும், வடிச்ச கண்ணீருக்கும் அளவில்லைப்பா, விட்டா வீதியில ஆறா ஓடிருக்கும் கண்ணீரு,

”நான் என்ன புண்ணியம் பண்ணுனேன்னு தெரியல,இது போல நண்பர்கள கொண்ட புருசன் அமைஞ்சதுக்குன்னு சொல்லி கண்ண கசக்கீட்டே நின்னது இன்னைக்கி வரைக்கும் கண்ணுலநிக்குதுப்பா” என்றார்.

அன்னைக்கி போயிட்டு பத்து நா கழிச்சித் தான் வந்தாங்க ,அப்பிடி வரும் போது ஒங்கம்மா ஓரளவுக்கு கொஞ்சம் கொணமாகி வந்தாங்க,அப்பிடி வந்தவுங்க இன்னைக்கி வரைக்கும் மருந்து மாத்திரைகதான் தாங்கிப் புடிச் சிக்கிட்டு இருக்கு,என்றவர் வீட்டிற்கு போய் வந்த பிள்ளை களுக்கு சைக்கிள் கொடுத்தார்.

இரு சக்கர வாகனத்தின் முன் சக்கரத்தில் சற்று காற்று குறைந்திருந்தது, வண்டி ஓடுகிற ஓட்டத்திலேயே வண்டியின் உலட்டல் தெரிந்தது.சரி சமாளித் துக் கொள்ளலாம்,

ஐந்து கிலோ மீட்டர் தூரம்தானே ஓட்டுக்கொண்டு போவோம் இடையில் ஏதாவது ஒர்க் ஷாப் அல்லது காற்று அடிக்கும் கடை திறந்திருந்தால் செக் பண்ணிக்கொண்டு போவோம் என நினைத்தவனாய் வண்டியை ஸ்டார்ட் செய்தான்,

தெரு முனையில் திரும்பும் போது மூட்டப்பட்டுக்கிடந்த காம்ப்ளக்ஸ் கடை வாசலில் நான்கைந்து பேர் அமர்ந்திருந்தார்கள்,அறிமுகமற்ற நபர்கள்,இந்த நெருக்கடி கால வேளையில் நிறையப்பேரை இப்படியெல்லாம் பார்த்து விட முடிகிறது, அறிமுகமற்றமுகங்கள், அறிமுகமற்றவர்களின் பேச்சுக்கள் அறிமுகமற்றவர்களின் உரையாடல்கள் என கேட்டு விடவும் பார்த்து விடவு மாய் முடிகிறது,

செல்கிற வழியில் சிறிது நின்று பையில் இருக்கிற தண்ணீர் பாட்டிலை எடுத்து தண்ணீர் குடிக்கவோ இல்லை வேறேதற்கோ நின்றால் பரிதாபம் காட்டிய பார்வையுடன் யாராவது வந்து உதவி என கைநீட்டுகிறார்,

சங்கடமாய் இருக்கிறது,நேற்று வரை அவர் நிச்சமாய் கை நிறைய சம்பாதித் தவராய் இருக்கவேண்டும்,சூழல் இன்று அவரை கையேந்த வைத்திருக் கிறது, இவர் ஒருவருக்கு இவன் செய்கிற உதவி போதலாம் ,அல்லது காணா மல் போகலாம், வீட்டில் இருக்கிற அவரது பெண்டாட்டி பிள்ளைகளுக்கு,,,?

இப்படி உதவி கேட்பவர்களில் உண்மையில் கேட்பவர்கள் யார், பொய் சொல்லி வாங்கியவர் யார் எனத்தெரியவில்லை,நேற்றைக்கு முந்தினம் புது பஸ்டாண்டு க்கு சமீபமாய் போய்க்கொண்டிருந்த வேளையாய் வண்டியை மறித்த பெரியவர் ”ஐயா வீட்டுல அரிசி பருப்பு ஒண்ணும் இல்லையா உதவுங் கய்யா,,” என்றவரிடம் ”அரிசி வாங்கித்தர்றேன் கொண்டு போறீங்களா,, ” எனக்கேட்க இல்லை பணமாக் குடுங்க என்றார்,

இவனும் இறக்கம் பார்த்து குடுத்து விட்டு வர மாலை அலுவலகம் முடிந்து திரும்பும் போது போதையில் தள்ளாடிக்கொண்டிருந்தார் தன் நிலையற்று,

உதவி எனக்கேட்டு வருகிறவர்களில் நல்லவர் யார் கெட்டவர் யார் என பிரித்துப் பார்க்கமுடியவில்லை.

அது போல் காம்ப்ளெக்ஸ் கடைகளின் வாசலில்களிலும், இன்னபிற இடங்க ளிலுமாய் அமர்ந்திருப்பவர்களை பார்க்கிற பொழுது சிறிதளவில் மனக் கிலேசம் ஏற்பட்டு விடுகிறதுதான்,

இது அப்படியே வளர்வது சமூகத்திற்கும் நமக்கும் நல்லதில்லைதான். கெஞ் சிக் கேட்டவைகள் எத்தனை நாள்வரை கையை ஏந்திக் கொண்டிருப்பார் கள், பிழைக்க ஏதும் கதியற்ற போது ,ஏந்திய கைகள் ஓங்க ஆரம்பித்தால்,,,,? அல்லது தட்டிப்பறிக்க ஆரம்பித்தால் ,,,,,,நிலைமை மிகவும் மோசமாகி கரடு தட்டிப் போகும் சமூகம்,வலுத்தவன் கை ஓங்கும், இளைத்தவனின் கை இறங்கும், என்கிற நினைப்பூடே சென்று கொண்டிருந்தவன் இப்பொழுதெல் லாம் அலுவலகத்தில் உடன் பணிபுரிகிற எல்லோரிடமும் சொல்கிறான், தனியா வண்டியில போகும் போது செயின், மோதிரம்,பிரேஸ்லெட்டுன் னு போட்டுக் கிட்டு வராதீங்க,ஓத்தையில் டூ வீலர்ல வர்றீங்க அம்பது அறுபது கிலோ மீட்டர்ன்னு,,கொஞ்சம் நாம தான் பாதுகாப்பா இருந்துக்கிறனும்” என்றான்,

காலை நேரத்திற்கு இந்த வெயில் அதிகம்தான்,சுள்ளிட்டுச்சுட்டது. அலுவல கத்தின் முன்னால் நின்ற வேப்ப,மர நிழலில்தான் வண்டியை நிறுத்தினான், வேப்பமர நிழலும் அதிலிருந்து வீசிய காற்றும் இதமளிப்பதாகவே/

இசைவாகிப் போகிற இதங்கள் சற்று ஆறுதலாகவே/ரோட்டில் பட்டுச்சுட்ட வெயில் மர நிழலில் நின்று கொண்டிருந்தவனுக்கு தெரியவில்லை.

அண்ணாந்து பார்க்கிறான் மரத்தை.கூடு கட்டி குஞ்சு பொரித்த பறவைகள் இரண்டு காதல் பாஷை பரிமாறிக்கொண்டதாய்.பேசிக்கொண்ட பாஷை யின் தேவபாவங்கள் இழைந் தோடிய மென் ராகங்களாய்/

கிளை படர்ந்த இலைகளினூடாய் பூவும் பிஞ்சும் காயும் கனியுமாய் கட்டித் தெரிந்தவைகளினூடே நாங்களும் இருக்கிறோம்தானே உயிர்ப்புடன் ஒன்று சேர்ந்து என்பதாய் சேதி சொன்ன பறவைகள் காதல் ஜோடி என அறியப் பட்டது,

மர நிழலிலிருந்து வெளி வருகிறான்,எதிர்பட்ட காற்று முகத்தில் மோதி இதமளிக்கிறதாய்,,/

லேசாகிப்போகிறதுதான் மனமும்,உடலும்,,,,/

சனி, 16 மே, 2020

பொய்யற்று,,,,,,,



மணியைப்பார்க்கிறான் சற்றே எட்டி,

சடுதியாய் யாரோ சட்டையைப்பிடித்திழுத்த பாவனையாய் அவரசமாய் பார்த்த வன் உள் நுழைந்து கொள்கிறான் திரும்பவுமாய்/

”கிட்டக் கிட்டவச்சி பக்குவமாப்பாத்தாலும் எட்ட எட்ட வெலகிப்போயி திருட்டுத் தனம் காண்பிக்கிறதுதான ஒங்க ஆம்பள மனசுபாக்க பதவிசா காமிச்சிக்கிட்டு அங்கிட்டுப்போயி திமிருத்தனம் காட்டி வெளையாடுறதும், தாண்டித்தாவுறதும் நடக்கலைன்னா சொல்றீங்க,

“கொழஞ்ச சாதமும்,மெளகு ரசமும் போதும் ,கறி காய் ஆகாது ,ஒத்துப் போறதுல ஒடம்புக்கு சிக்கல் வருமுன்னு சொன்னத ஏத்து பதனமாப்பாத்து வடிச்சி இது வேணும்,இது வேணாம், இது போதும்,இது போதாது,இவ்வளவு வேக்காட்டுக்கு இந்தக்காயி,இவ்வளவு வேக்காட்டுக்கு இந்தக்கறி, இதுக்கு இதுதான் பக்குவம், அதுக்கு அந்தப்பக்குவந்தான் ஏத்தது குக்கர்ல ரெண்டு விசிலு,ஸ்டவ்வ சிம்முல வையி,மிக்சி அரவை வேண்டா முன்னுருவாரு,நான் கை அரைவையே அரைச்சி க்கிறேன்னு பாத்துப்பாத்து பண்ணிப்பண்ணி செஞ்சி வச்சாலும் கூட எந்தக் கடையில எது நல்லாயிருக்கு,இன்னிக்கி ஸ்பெசல் எங்க என்னன்னு தேடித் திரியிற ஒங்களத் தெரியாதா எனக்கு என்றவள் சொன்ன போது பகீரென்று சிரித்தவன் அலையுற மனசுக்கு வெந்தது ஏது,வேகாதது ஏது, பக்குவம் ஏது,? அது அல்லாததது எது,,?ன்னு தெரிய ஞாயமில்ல,“மலை, மலையா கொட்டி வச்சி சாப்புடச்சொன்னாலும் எச்சச் சோத்துக்கு அலையிற கொணம் இருக்குதுதான அப்ப தொட்டு,,,, சூழ்நிலையும் தைரியமும் கை கோர்க்கும் போது அது ஒரு தனி உலகமாத் தெரியுது, என்றவனின் பேச்சிற்கு இல்லை இல்லை அப்படியெல்லாம் என உறுதி குடுத்து விட்டாலும் கூட போகிற போக்கில் எட்ட இருப்பதை படம் பிடித்துப் பார்ப்பதுதானே மனது,என்பது உறுதியாகிப்போகிறது,

எத்தனைதான் திரை போட்ட போதும் கூட விலக்கிப்பார்க்கிற சூட்சுமம் லேசாய் வாய்க்கப் பெற்றிருக்கிறதுதானே சிறுவயதிலிருந்து,இது மாதா பிதாவிடமிருந்து வந்ததா இல்லை குருவிடமிருந்தா அதுவுமில்லையெனில் கற்றுக் கொடுக்கிற சமூகத்திலிருந்தா,,? கற்றுக் கொள்வதும் கற்றுக் கொடு ப்பதும் நம் தேவையை யும் அவசரத்தையும் பொறுத்ததுதானே இல்லையா என்றவளின் முன் நின்றவன் சமையலறையில் இருந்தான்,

வீட்டுக்குள் எத்தனை ரூம்கள் இருந்த போதும் இவனுக்கு உடை மாற்ற வாய்த்தது சமையலறைதான் என ஆகிப்போகிறது,

வீட்டில் இவனுக்குப் பிடித்தஇடங்களில் சமையலறை மிக முக்கியமாகிப்  படுகிறது / வெறும் சமையல், அரிசி பருப்பு பண்டம், பாத்திரம், அரிசி, பருப்பு, அரசலவு அஞ்சறைப் பெட்டி மிக்ஸி,கிரைண்டர்,,,,,மட்டும் குடி கொண்டது சமையலறை இல்லை,

மாறாய் ஊன் உருக்குகிற உன் நினைவுகளும் உருவமும் ரத்தமும் சதையு மாய் அன்றாடம் உனது அர்த்தங்களை எழுதிச் செல்கிற சமையலின் உயர் அழுத்தமும் கொண்டதல்லவா அவ்விடம் ,ஆகவே அது பிடித்துப் போகிறது தான், எனக்கு என மனம் பிடித்தவளின் இளம் புன்னகையும், மெல்லிய பார்வையும் ஒரு சேர மனதிற்கு கிடைத்து விட்ட திருப்தியை சமையலறை கள் ஏற்படுத்தி விடுகிறதுதான், அதனால்தான் தஞ்சமாகிப் போகிறான் அடிக்கடி.அவளின் உள்ளர்த்தங் களை ஏற்றுக்கொண்டு/

மணி ஒன்பது தாண்டி ஒன்பது ஐந்தை எட்டித்தொட்டு விடப்போன வேளை வலது ,காலில் மாட்டிய பேண்ட்டை போட்டவாறே ஹாலுக்கு வந்தான்,

”கடைசி ரூமில் பெரியவள் படுத்திருந்தாள்,அடுத்த ரூமில் சின்னவள் படுத்திருந் தாள், ஹால்தான் எப்பொழுது இவனுக்கு வாய்த்தது,அதெல்லாம் இருக்கட்டும் கூட. இவ்வளவு பெரிய வீட்டை கட்டிப்போட்டு விட்டு ஆத்திர அவசரத்திற்கு உடை மாற்றக்கூட சமையலறையில் போய்த்தான் நிற்க வேண்டியிருக்கிறது எனும் போதுசங்கடமாய் இருக்கிறதுதான்” என்கிறான்

“இன்னும் புள்ளைங்க ரெண்டு பேரும் எந்திரிக்கலையா,,என்றவாறே, ராத்திரிக்கு சீக்கிரம் படுத்தாத்தானே காலையில சீக்கிரம் எந்திருப்பாங்க,/ எல்லாம் இங்க இருந்து வர்றது, ஒங்களச்சொல்லணும் மொதல்ல,அவுங்க ரெண்டு பேரும் கெட்டுப் போறதே ஒங்களாலத்தான் என்ற மனைவியை ஏறிட் டவன் சும்மா இரு நீ,ஒடனே ரொம்பத்தானா குத்தம் சொல்ல ஆரம்பிச் சுருவ, லேசுசுக்குள்ள குத்தம் சொல்ல மாட்ட,ஆனா ஆரம்பிச்சிட்டயின்னா விடமாட்ட ,ஊர விட்டு தள்ளி வைக்கிற அளவுக்கு போயிறுவ”,,,,,,,,என்பான் சிரித்துக்கொண்டே,,,/

கண்டிக்கிற இவனின் குழி விழுகிற கண்ணத்தில் லேசாய் கிள்ளி விட்டு எட்டப் போய் சொல்லுவாள் ஊர விட்டு தள்ளிப்போறப்ப என்னையும் கூட்டிக்கிட்டுப் போயிருங்க,அப்பிடியே கோயிச்சிட்டுப்போனது போல அங்கிட்டுப் போயி இருந்துட்டு வருவம், கொஞ்ச நாளைக்கி என்கிற அவளது சிரிப்பிற்கும், பேச்சிற் கும்,, செய்கைக்கும்,,, அட போங்கப்பா வாழ்க்கை மொத்தத்தையும் எழுதி வைத்தால் கூட காணாதுதான்,எழுதி வைக்கிற பேரேடு முடிந்து பரஸ்பரம் இருவரது மனங்களிலுமாய் மாறி மாறி எழுதி வைத்துக் கொள்ள வேண்டியது தான்,

வட்ட வடிவ கடிகாரத்திற்குள் சின்னதும் பெரியதுமாய் களைப்பு காட்டாமல் ஓடிய சின்னதும் பெரியதுமான முட்கள் விநாடி முள்ளை துணைக்கு அழைத்துக் கொண்டு காலனை கண்ணாடியாய் பிரதிபலித்துக் கொண்டி ருந்தது,

சுவர் கடிகாரம் வாங்க வேண்டும் என முடிவான நாட்களில் சற்று வித்தியா சமாய்,நல்லதொரு டிசைனில் இருக்குற கடிகாரமாய் வாங்க வேண்டும் என முடிவெடுத்தான்,

வாங்கி பத்து வருடங்களுக்கும் மேலாகி விட்டது,இன்னமும் பெரிய அளவிற் கானரிப்பேர்ஏதுமில்லாமல்ஓடிக்கொண்டிருக்கிறது,அவ்வப்பொழுதுபேட்டரி போடு வதை ரிப்பேர் கணக்கில் வைக்க முடியாது,பாவமாகிப்போகும்,பின் காலன் பஸ்ஸேறி வந்து கண்டனம் தெரிவித்து விட்டுப்போவான், இப்போ தைக்கு அதற்கும் வழியில்லை,பின்கண்டனத்தை ஆதரிப்பவர் எதிர்ப்பவர் இரு பிரிவுகள் உண்டாகி அவர்களுக்குள்ளான பெரும் பிளவிலும் சர்ச்சை யிலுமாய் காலமும் நேரமும் மறைந்து சர்ச்சை மட்டுமே மேலோங்கி நிற்பதாக ஆகிப்போகும். ஆகவே வேண்டாம் என சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு சாகஸம் நிகழந்ததாய் மன நிமிர்வு கொண்டு திரிந்த நாட்களில் சத்தம் போட்டாள் மனைவி,

சப்தம் போடுவதற்கும் குறை சொல்வதற்கும் ஏற்றவளாகிப் போனவள்தான் மனைவி போலும்,

‘அப்பிடியெல்லாம் சுருக்கமா நெனைக்காதீங்க, நீங்க நெனைக்குறதான் வாஸ்தவமுன்னா இவ்வளவு பெரிய வீட்டை கட்டி இழுக்குறது யாரு,,? நீங்க ளா,,,,? ஒங்களுக்கு காலையில எந்திரிச்சி ஆபீஸ் கெளம்பவே நேரம் சரியாப் போகுது,,,,இதுல நீங்க குடும்பத்த இழுத்துட்டாலும்,,என்கிற அங்கலாய்ப்பு அவளைச்சார்ந்ததாய்.

அவளது சொல்லிலும் செயலிலும் வாஸ்தவம் தட்டுப் படாமலும், அடையாளப் பட்டுத் தெரியாமலும் இல்லை, காலையிலெழுந்து பிள்ளைகளுக்கு டீப் போடுறதுல இருந்து அவுங்க ரெண்டு பேரையும் ஸ்கூலுக்கு தயார் செய்வது வரை ஏங் வேலைதான,அதுக்கு என்ன தனியா சம்பளத்துக்கு ஆள்போட்டா வச்சிருக்குறீங்க, இல்லையே, ஓசியான வாசிங்க் மிஷினா, ஓசியான மிக்ஸி யா, ஓசியான கிரைண்டரா, இன்னும்,இன்னுமான ஓசியான வேலை செய்யிற மிஷினா இருக்கு றோமே தவிர்த்து,கட்டிக்கிட்டு வந்தவளா இல்லை,

ஒன்பது மணிக்கெல்லாம் பஜாரில் இருக்க வேண்டும் என நினைத்தான், போகிற வழியில் ஓரு டீ ,வடை சாப்பிட்டுப்போகலாம் என்கிறதான நினைப்பில்,

ரொம்ப நாட்களாகிப்போனது அப்படியாய் சாப்பிட்டு/

டீக் கடை அவசர ஆத்திரத்திரத்திற்கு சாப்புடுகிற ஹோட்டல் டிபன், சாப் பாடு எல்லாம் மறந்து போனது ,கண்முன் இருந்து மறைந்தும் போனது, நேர் கோட்டு நிகழ்வு போல் வீட்டிலிருந்து கிளம்பி அலுவலகம் செல்ல, அலுவல கத்திலிருந்து கிளம்பி வீடு வர என தினசரிகளிலான காலை மாலை நிகழ்வுகள் இதுவே என சாஸ்வதமாகிப்போகிறது,யாரையும் பார்த்து பேசி உறவாடி மனம் கலந்து நீண்ட நாட்கள் ஆகிப்போனது,உறைந்து கிடக்கிற வீட்டையும்,பிள்ளைகளையும்,அக்கம்பக்கத்தையும்தெருக்களையும்,ஊரையும் பார்க்க சற்று சங்கடமாய் இருக்கிறது

காலில் சக்கரம் கட்டிக் கொண்டு நகர்வு கொண்டிருந்த சமூகம் ஓரிடத்தில் நின்று கொண்டு அசைய மறுக்கிறதாய்,சமூகத்தின் காலில் எப்பொழுது சக்கரம் கட்டப்போகிறார்கள் எனத் தெரியவில்லை,

சமூகம் சடுதியெடுத்து ஓடுகிற ஓட்டத்தையும் இசைக்கிற கீதத்தையும் கேட்கஆசைதான்,கேட்ககாத்திருப்போம் என்கிறதான நினைப்புடன் சென்று கொண்டிருக்கிறான் இரு சக்கர வாகனத்தில்/

வாகனத்தை மாற்ற வேண்டும்,ஐந்து வருடங்கள் கூட ஆகியிருக்கவில்லை, வாங்கி, மூன்று வருடங்கள் கூட முழுமையாக எட்டி இருக்காது என்றே நினைக்கி றான், நான்கு சர்வீஸ் விட்டு விட்டான்,ஆனாலும் கூட வண்டியை ஓட்டுகிற திருப்தி இல்லை,சக்கட்டான், சக்கட்டான்,,,,என கட்டை வண்டியை தலையில் சும்மாடு கட்டிதூக்கிக்கொண்டு நடக்கிற கொடுமையாய் இருக்கி றதுதான்,

“கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனா அங்க ரெண்டு கொடுமை தங்கு தங்குன்னு ஆடுன கதையாய் ஆகிப் போகிறது இந்த வண்டியை ஓட்டுகையில்/

ஆனால் தினசரி தங்குதங்குதான்ம்,தினசரி கொடுமைதான்,விற்று விட்டு ஸ்கூட்டி அல்லது பெரிய வண்டி வாங்கலாம் என்கிற நினைப்பிலேயே சிறிது காலம் போயிற்று,

வீட்டில் பெரிய,பெரிய செலவுகள் இருக்க இதில் கொண்டுபோய் பணத்தை முடக்குவானேன் என்கிற எண்ணம் ஒரு பக்கம்,இல்லை ஆத்திர அவசரத் திற்கு ஒரு வண்டி அவசியம் என்கிற எண்ணம் மறுபக்கம்,வெவ்வேறாய் பரிணாமம்கொண்ட எண்ணங்கங்களின் துளிர்ப்பும் வேர்விடலுமாய் இருந்த சமயங்களில் பிள்ளைகளுக்கு இவன் பெரிய வண்டி வாங்குவதில் இஷ்டம் இருந்திருக்கவில்லை,ஏறிப்போனவயது,தப்பிப்போகிறநினைவுகள், தளர்ந்து போன உடல், எல்லாம் ஒன்று சேருகையில் வண்டியை கட்டுப்படுத்துவதற்கு மிகவும் சிரமம் கொள்வீர்கள், ஆதலால் வேண்டாம் பெரிய வண்டி,அதை வாங்குகிற எண்ணத்தை அடியுடன் கைவிட்டு விடுங்கள் என்றார்கள் ,சரி இருக்கட்டும் அவ்வாறே,,,/ என்கிற எண்ணத்துடன் ஸ்கூட்டி வாங்கி விடலாம் என்கிற நினைவுடன் இருந்த பொழுது நெருக்கடி வந்து விட பழையதையே ரிப்பேர் பார்த்து ஓட்டிக்கொண்டு இருக்கிறான்.

தெரு முக்கு திரும்புகையில்தான் அவரை கவனிக்கிறான்,

லோடு மேனாக அறிந்திருக்கிறான் அவரை.இவன் அறிந்து அவர் சோம்பி இருந்து பார்த்ததில்லை, எந்தப் பக்கமிருந்தாவது எந்தப்பக்கமாவது சென்று கொண்டி ருப்பார் அல்லது வந்து கொண்டிருப்பார்,அப்படி செல்கிற நேரங்களில் சைக்கி ளில் மூட்டை கட்டிக் கொண்டு போவார்,என்ன மூடை இது என்றால் அரிசி மூடை அல்லது பருப்பு மூடை என்பார் ,அரிசி மூடை என்றால் ஒரு கடையிலிருந்து இன்னொரு கடைக்கும், அதேது பருப்பு மூடை என்றால் ஒரு மில்லிருந்து இன்னொரு கடைக்குமாய் கொண்டு போகிறேன் என்பார்,

இப்படியாய் நாள்தோறும் உழைப்பு உழைப்பு உழைப்பிற்கு மட்டுமே உடலையும் மனதையும் ஒப்புக் கொடுத்து விட்டுப்பெரிய அளவிற்காய் வேறெந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் உழைப்பிற்கான ஊதியத்தை மட்டுமே பெரிதாக நினை த்து வாழ்பவர்,

அவரின் உழைப்பும் ஊதியமுமாய் நின்று போன இந்த நாட்களில் வேலை க்குப் போகாமல் இருக்கிறேன் வீட்டில் என்றார்,வேலையும் அதற்கேற்ற ஊதியமுமாய் இருந்த நாட்களில் சாலையில் செல்கிற வேலையும் ஊதிய மும் அற்ற பெரும்பாலோனரைப் போலத்தான் அவரும் இவனைப் பார்த்தார்,

ஒரு நாளின் பிற்பகல் வேளையாய் கடைக்குப் போய்க்கொண்டிருக்கும் பொழு தில் இவனைப்பார்த்து வண்டியை நிறுத்தி விட்டார்,”தம்பி தப்பா நெனைச்சிக்கி றாதீங்க,வேலைக்குன்னு போயி ஒரு மாசத்துக்கு மேல ஆகிப் போச்சி. கையில ஒரு நயாப்பைசா கெடையாது, செலவுக்கு ஏதாவது இருந்தா குடுத்துட்டுப்போ தம்பி” என இறைஞ்சலுடன் கேட்கிறார்,மனம் தொட்ட அவரது இறைஞ்சலுக்கு அன்று இறங்கியது இன்று தப்பு என நினைக்கத் தோனி விட்டது,

“ஒரு தடவை குடுத்தால் உதவி ,ஓயாமல் கேட்டால் அதற்கு பெயர் என்னவாய் இருக்கும் நீங்களே சொல்லுங்கண்ணே,,,,,” என மூன்றாவது தடவையாய் அவர் இவனிடம் கையேந்தி நின்ற நாளில் கேட்ட பொழுது இல்ல தம்பி திரும்பத்திரும்ப ஓங்கிட்டயே வர்றேன்னு தப்பா நெனைச்சிக்கிறாத தம்பி, எனக்கு ஒன்னைய விட்டா யாரு தம்பி இருக்கா சொல்லு,நீயும் ஒன்னையப் போல இருக்குற ரெண்டு மூணு பேரையும்தான் எனக்குத்தெரியும். சுருக்க மான ஒலகத்துக்குள்ளயே வாழ்ந்து பழகீட்டவன் தம்பி, அதுனாலத்தான் தம்பி ஒங்களயே சுத்திச்சுத்தி வர்றேன் ,எனக்கு ஒங்கள விட்டா யாரு தம்பி சொல்லுங்க என்றவரின் பேச்சில் பொய் தெரியவில்லை,

ஞாயிறு, 10 மே, 2020

நட்ட கல்லு,,,

வருகிற வழியில் அவரைப்பார்க்கிறேன்.சலூன் கடை வாசலில் அமர்ந்திருக் கிறார்.

ஆளரவமற்ற வீதி,வீதியெங்குமாய் வழக்கமாய் குடிகொண்டிருக்கும் கடை கள் இல்லை,டீக்கடை,ஹோட்டல்,பலசரக்குக்கடை,டெய்லர் கடை வாட்ச்க் கடை ,,,,ம்ஹீம் எதுவும் விழிப் படலத்திலிருந்து விலகியே/

விழி கழண்ட பார்வை உருண்டோடி பார்த்த இடம் யாவுமாய் காலி பட்டுத்தெரிய ஓடோடி வந்து ஒட்டிக்கொண்ட விழிகள் இரண்டும் ஊர்ஜிதம் செய்து விட்டுச்செல்கிறது எதுவுமற்றுக் கிடக்கிறது வீதி என,,,/

மணி ஆறு இருக்கலாம்,

ஒரு மணியுடன் மூடி விட்டிருந்தார்கள் எல்லாவற்றையும்.மூடப்பட்டிருந்த கடைகள் யாவும் மனித முகங்களின்றி வெற்றுக் கூடுகளாய் காட்சியளிக் கின்றன.

தராசும், படிக்கல்லும், மீன்காரம்மாவும், காய்கறிக்கார அக்காவும் ,கோழிக் கடைக்காரரும் இன்னும் இன்னமுமானவர்களும் வெறுமனே நிமிட நேர இடை வெளிகளில் காணாமல் போனார்கள்.

சரி, எல்லாம் தீர்ந்து போகிறது, காய்கறி கடைக்காரியின் பேச்சு,சிரிப்பு, உசாவல்,விசாரிப்பு,அவர்களின்பிழைப்பு,ஆதங்கம்,,,வடைக்கடைக்காரரின் சிரிப்பு மாறா முகம்,பெரியண்ணனின் பலசரக்குக் கடையில் குடிகொண்ட மனம்,,இன்னும் இன்னமுமான எல்லாவற்றிற்குமாய் நேரம் நிர்ணயித்து கால அடைப்பு போட்டது போல மனதிற்கு போட முடியவில்லைதான்.

”அதுவரைக்கும்தான் சொல்லும், செயலும்,பேச்சும் உறவும் என்றால் அன்றாடம் முளைத்துக் கிளைத்தவைகளை தீயிட்டு பொசுக்கி விடுவதா,,,? தெரியவில்லை.

காலையில் பணிக்குச் செல்லும் போது திறந்திருந்த கடை இப்பொழுது பூட்டி இருக்கிறது.

காலையில் கடை வாசலில் இருந்த குதூகலம் இப்பொழுது யாரோலோ பிடுங்கி எறியப்பட்டது போல் தெரிகிறது.

மண்பிளந்து துளிர்த்து வளர்ந்து கிளைத்து பூவும் பிஞ்சும் காயும் கனியுமாய் நிற்கிற நிறை மரம் ஒன்றை அதன் மணத்துடன் சடுதியில் யாரோ தட்டி எடுத்து வெட்டிக்கொண்டு போய் விட்டதாக தோணியதுதான்,

கடைக்கு எதிர்த்தாற் போல் இருந்த வீட்டில் வாசலில் தெளித்த தண்ணீர் காயும் முன்னதாகவே வரைந்திருந்த கோலம் தரையில் அழுந்தப்பதிந்து காணப் பட்டது,

அழுந்திய பதிவுகளை காண கண்கள் கோடி வேண்டும்.இட்ட புள்ளிகளும் அதைச்சுற்றிவரையப்பட்டகோடுகளுமாய்நகன்றுகொண்டிருக்கிறவாழ்க்கை இது என்று சொன்னால் மிகையாய் தோணி விடப்போவதில்லை,

பார்த்துப் பார்த்து பண்ணிப்பண்ணி நல்லது எது கெட்டது எது,யார் அருகாமை வேண்டும் யாரிலிருந்து விலகி இருக்க வேண்டும்,எந்த வீதியில் வீடு பார்த்து குடி போகலாம்,செல்கிற வீடும் அருகாமை மனிதர்களும் பழக்கமும் பாங்கும் மனதிற்கும் மற்றவைக்கும் ஏற்றதுதானா அல்லது அது அற்றதா,,வயசுப்பிள்ளையை வைத்துக்கொண்டு மடியில் கட்டிய நெருப்பை எப்பொழுது கீழே இறக்கி வைப்பது எனத்தெரியாமல் முழித்துக்கொண்டு திரிய வேண்டிய கட்டாயம் எத்தனை நாளைக்கும் எத்தனை பொழுதுக்கும் ஆட்பட்டதும் விதிக்கப்பெற்றதும் எனத்தெரியவில்லை,

என் வீடு என் மக்கள் என் வாழ்க்கை என இருப்பது தாண்டி எதுவும் யோசிக்க சூழல் அனுமதிக்குமா தெரியாது, மிகைப்படுத்தப்பட்டதாய்அன்றி சாதாரண ங்களில் நகன்றாலே நல்லதுதானே,,,?

”நல்லதுதான் நல்லதுதான்,ஒங்களுக்கு எல்லாம் நல்லதாத்தான் படுது, கெட்டதா எதையும் பாக்கத்தெரியாத கண்ணுக்கு பாக்குற எல்லாம் நல்ல தாத்தான் தெரியுது,அந்த வகையில நான் குடுத்து வச்ச ஆளு, என்றவளாய் சட்டைக் காலரைப் பிடித்து முன்னிழுத்து கண்ணத்தைக்கடித்து வைத்தாள்.

”சும்மா இரு லூசு,பெரியவ உள்ள படிச்சிக்கிட்டு இருக்கா,சின்னவ அவ பக்கத்துல உக்காந்துக்கிட்டு இருக்கா”,என்கிறான்,

“வழக்கமா இது நீ சொல்ற வசனம்,இப்ப நான் சொல்ல வேண்டியதா இருக்கு” என்கிறான்,

”இப்ப என்ன வசனமும் செய்கையும் ஒங்களுக்கு மட்டுந்தான் சொந்தமா என்ன?கற்பு மட்டுந்தான் ஆணுக்கும் பொண்ணுக்குமான சொந்தமா,,,,,? காதலும் காமமும்கூடத்தான”,,,,,என்றவள் ஓடோடி வந்து தோளில் சாய்ந்து கொள்கிறாள்,,,/

பாவனை நிறைந்த உலகம், உதட்டுச்சாயமும்,தலைக்கு இட்ட மைப்பூச்சும், முக அலங்காரமும் உடை மிகையுமாய் நகர்வு கொள்கிற வாழ்க்கையில் பார்ப்பதும் பேசுவதும் சிரிப்பதும் பரிமாறிக்கொள்வதுமாய் உறை கொள்கிற வாழ்வின் தருணங்கள் மிக மென்மையாகவே,,,/

சென்ற வாரம் முடிவெட்டிக்கொள்ள சென்றிருந்தபோது போது கடைக்கார் சொன்னார்,ரொம்ப கெடுபிடி சார்,கடைக்குள்ள முடி வெட்டிக்கிற ஆள் தவிர்த்து வேற யாரும் உக்காந்துருக்கக்கூடாதுன்னு சொல்றாங்க சார் மீறி யாராவது உக்காரவச்ச ஒடனே கடையப்பூட்டுன்னு சொல்றாங்க போலீஸ் காரங்க,நமக்கு எதுக்கு வீண் வம்புன்னு எவ்வளவு தெரிஞ்ச ஆளா இருந்தா லும் கடைக்குள்ள அனாவசியமா நிப்பாட்டுறது இல்ல,சார் என்றவர் மீறி நிக்க வைச்சா பொழப்புப்போயிரும் சார்,என்றார்,

அப்பொழுது கடைக்குள் நுழைந்த இரண்டு பேரை தம்பி கோவிச்சிக்கிறாம கடையோட வாசல்ல ஒக்காந்துக்கங்க தம்பி,போலீஸ்காரங்க வந்து கேட்டா முடிவெட்டிக்க வந்தேன்னு சொல்லுங்க தம்பி என்றார்,

பையனைச்சேர்த்து மூன்று பேர் கடை வாசலில் உட்கார்ந்து இருந்தார்கள், கடைக்குள் அமர்ந்திருந்த நான் படியில் அமர எழுந்த போது சார் சார் நீங்க உக்காருங்க ,அடுத்தது நீங்கதான் என்றார்,

இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே வெட்டிக்கொள்ள வேண்டிய முடி, கொஞ் சம் முடி கூடி விட்டால் பார்க்க அசிங்கமாகிப்போய் விடுகிறது, தவிர்த்து முடி கூடிப்போகும் நேரங்களில் தலை வலி வந்து விடுவது தவிர்க்க இயலாமல் ஆகிப்போகிறது, இது தவிர்த்து குளித்தவுடன் தலை காயாமல் இருப்பது, தலையில் நிறைந்திருக்கிற முடியிலிருந்து எண்ணெய் வழிவது போலான தொந் தரவுகளை தவிர்க்கவாவது முடி கூடிப்போக விடாமல் பார்த்துக் கொள்வான்,

இந்த பொழப்புக்காகத்தான சார் ஊர்லயிருந்து நித்தம் பதினைஞ்சி கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் மிதிச்சி இங்க வர்றேன் என்றார்,

எப்பயோ வாங்கிப்போட்ட சைக்கிளு, இப்ப ஒதவுது சார்,போக வயித்து ஆத்திரமுன்னு ஒண்ணு இருக்குல்ல சார்,

தினமும் இங்க வராம சொந்த ஊர்லயே தொழில் பண்ணலாமந்தான் சார், அங்கயும் வாய்ப்பு வசதி இருக்குதான்,நம்ம சொந்தக்காரங்கப்பயலுக ரெண்டு பேரு கடை போட்டுருக்கான்,அங்கயின்னா நான் சம்பளத்துக்குப் போயி நிக்கணும்,இங்கயின்னா நாந்தான ஓனரு சார்,

ஏங்வீட்டம்மாவுக்கு சொந்தக்காரப்பயதான் கடை வச்சிக்கிறவன்,நம்ம மேல ரொம்ப மரியாதையான பையன்,நம்ம போயி வம்படியா அவன் மடியில போயி ஒக்காந்துக்கிட்டு மரியாதையக்கெடுத்துக்கக்கூடாது, என்றார்.

நமக்குன்னு சொந்தத்துல ஒண்ணு இருக்கும் போது அது எதுக்கு சார் இழி பொழப்பு, நான் வேர் விட்ட மண்ணு இதுதான்னாலும் கூட விழுத இங்கயில்ல யெறக்கி விட்டுருக்கேன் சார்,என்றவர் எனக்கு முன்பாக அமர்ந்திருந்தவ ருக்கு முடி வெட்டி ஷேவிங் பண்ணி முடித்திருந்தார்,

ஒல்லி யாய் சிவந்து கசலையாய் தெரிந்த அவர்.அரைக்கை சட்டை அணிந்தி ருந்தார், கட்டம் போட்ட ஊதாக்கலர் கைலி சட்டைக்கு பொருத்தமாய் இருந்தது.

கைலியை மடக்கிக்கட்டியிருந்தார்.அவர் தொடைக்கு மேல் கைலியை தூக்கிக் கட்டி எப்பொழுதுமே இவன் பார்த்ததில்லை.மறந்து போய்க்கூட அப்பிடியெல் லாம் செய்ய மாட்டேன் சார் என்பார்,ஏனென்றால் அப்படி தூக்கிக் கட்டுவது எதிர் படுகிறவர்களை அவமதிப்பது அல்லது அவர்களை மரியாதை இல்லாமல் நடத்துவது எனவுமாய் சொல்வார்,

அவர் அப்படி இருக்க அவரது கடைக்கு விடலைகள் சிலர் தொடைக்கு மேல் கைலியை தூக்கி உருட்டுக்கட்டுக்கட்டிக்கொண்டு வருவதை பார்ப்பது தவிர்க்க இயலாமல் போய் விடுவதுண்டுதான்,

அப்படி வர்றவுங்கள ஒண்ணும் செய்ய முடியாது சார்,சொன்னாலும் கேக்க மாட்டானுங்க,யெளவட்ட முறுக்கு,யெளம் ரத்தம்,தாய்மார்க பையன்கள கூட்டிக்கிட்டு முடி வெட்டுறதுக்காக வருவாங்க,அவுங்க வர்ற யெடத்துல இப்பிடி வர்றது நல்லாவா இருக்குன்னு கேட்டா அப்ப எங்கள கடைக்கி வர வேணாமுன்னு சொல்லுறயாண்ணேன்னுட்டு கொஞ்சம் எதிர் வாதம் பண்ணு வாங்க,ரெண்டு வம்பு பேசுவாங்க,அவுங்களுக்கு அதுதான் பொழப்பு,. ஆனா நமக்கு அதுல்ல வேலை,பொழப்பு கெடக்கு சார் நீண்டு போயி,,,,,/ 

கடைக்கு வர்ற ரெண்டு மூணு பெரிய ஆள்ககூட இப்பிடித்தான் வருவாங்க ,நான்கூட அவுங்ககிட்ட சொல்றது உண்டு ,எதுக்கு இப்பிடின்னு ,புரிஞ்சிக் கிருவாங்க.சரியா,சரி தம்பி நீ சொன்னா தப்பா இருக்காதுன்னு ஏத்துக்கிரு வாங்க , என்பார் கடைக்கார்.

எட்ட வந்து கொண்டிருக்கும் போது சலூன் கடை வாசலில் உட்கார்ந்திருப்பது அவர்தான் எனப்புரியவில்லை.

அருகில் வர வர பிடிபட்டுப்போன அவரின் பிம்பத்தை இன்னார்தான் அவர் என நினைத்தவன் இரு சக்கரவாகனத்தின் வேகம் குறைத்து அவரருகில் போய் நிறுத்த வேண்டும் என நினைத்தவனாய் அவரை நோக்கி ஊர்ந்தவன் அவருக்கு பத்தடி தூரத்திற்கு முன்னதாகவே நிறுத்தி விடுகிறேன், ”எண்ண ன்னே நல்லாயிருக்கீங்களா,,,,”என்கிற ஒற்றைவார்த்தையைமுன்னிருத்தி,,,,/

நேற்றைக்கு முன் தினம் காலை அலுவலகம் கிளம்புகிற போது செல்போனை வீட்டில் விட்டு விட்டதாய் நினைத்து சிறிது தூரம் வண்டியில் சென்றவன்  திரும்ப வருகிறான் வீட்டிற்கு.

வீட்டில் வந்து வாகனத்தை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தும் போதுதான் பேண்ட் பை கனக்கிறது,ஆகா தோள்ல ஆட்டைப்போட்டுட்டு தேடுன கதையா ஆகிப் பேச்சே என வீட்டிற்குள் நுழைந்து தண்ணீர் குடித்து விட்டு செல் போனை எடுத்து பேண்ட் பாக்கெட்டிலிருந்து எடுத்து சட்டைபைக்குள்ளாய் போட்டுக் கொண்டு கிளம்புகிறான்,

இவனது தெரு சந்தை கடக்கும் போது இப்பதைக்கு மாச சம்பளக்காரங்க தான் குடுத்து வச்ச ஆளுங்க,எனப்பேசிக்கொண்டிருந்த நான்கைந்து பேரை தாண்டி வருகிறேன்,

இப்போதைக்கி வெறும் பேச்சாக இருக்கிற இந்த சொல் எப்போது பொறாமையாகவும், கோபமாகவும் மாறுமோ தெரியவில்லை, குடிகொண் டி ருக்கிற கோபங்கள் உருக்கொள்கிற போது அதற்கு பலம் ஜாஸ்தி என்பா ர்கள்.மாதக்கணக்கில் நின்று போன வருமானம் ,வீட்டில் பசியுற்று இருக்கும் மனைவி,பிள்ளைகள் புறம் பேசும் சமூகம் அக்கம் பக்கம் என எதைப் பார்க்கிற போதும் கூசிக்குறுகி நிற்கிறவ ர்களின் கோபம் உடனடியாய் மடை மாற்றப்படுவது மாதச்சம்பளம் வாங்குறவர்களை நோக்கியும் அரசு ஊழியர்களின் மீதுமாய் பாய்வதில் ஆச்சரியம் இருந்து விட முடியாது தான்,காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சாய் படுவது போல் எவ்வளவு வறிய நிலையில் வாழ விதிக்கப்பட்டவர்களாய் இருந்த போதும் கூட தன் வாழ்க் கையை தன் கைக்குள்ளாய் வைத்திருக்கிற அழகு தன்னளவில் அவர்களுக்கு வாய்க்கப்பெற்ற வரமாய் இருக்கிறதுதான்.

ஆனால் அதை மீறி வரை பட்டவராய் சலூன் கடை வாசலில் அமர்ந்திருந்தவர் தெரிகிறார்,

”நல்லாயிருக்கீங்களா,,,”எனக்கேட்டிருக்கக்கூடாதுதான்.அது இந்த நேரத்தில் அந்நியப்பட்டு நிற்கிற வார்த்தையாய் தெரிகிறது அவரிடத்தில்,,/

அவரை நான் அதிகம் பார்த்ததில்லை,அவர் இவனது உறவோ இல்லை சுற்றம் என்கிற வளையத்திற்குள்ளாகவோ வந்து விடுகிறவர் இல்லை.

அவ்வப்பொழுதுகளில் டீக்கடை அல்லது வேறு எங்காவது பார்க்க நேரிடுவதுண் டுதான்,

தம்பி ஒரு மாசமாகிப்போச்சி வேலையின்னு எங்கயும் போயி,வீட்டுல அரிசி பருப்பு அரசலவு எதுவும் இல்ல,சும்மா இருந்தாலும் பசிக்கும்தான வயிறு, வீட்டுக் காரி நாலு வீடுகளுக்குப்போயி வீட்டு வேலை செஞ்சி கொண்டு வர்ற காச வச்சிதான் தம்பி வண்டி ஓடுது,போக அவ வேலை செய்யிற வீடுகள்ல இருந்து கொண்டு வர்ற ஏதாவது தின்பண்டம் சாப்பாடு இதுகதான் இப்பதைக்கி வயித்தக் கழுவுது,நல்ல வேளை புள்ளைங்க இல்ல, கட்டிக் குடுத்து வெளியில போயிட்டா ங்க, இல்லையிண்ணா அதுக்கும் சேர்த்துப் பாக்கணும் என்றார், மத்தபடி வேற எதுவும் ஒண்ணும் இல்ல தம்பி, எங்கிட்டாவது வாட்ச்மேன் வேலை இருந்தாக்கூட சொல்லுங்க தம்பி,இப்பிடி தொண்ணாந்து போயி ஒக்காந்துக்கிட்டு யாரையாவது எதிர் பாத்து காத்துக் கெடக்குறது ரொம்ப வெக்கமா இருக்கு தம்பி, என்றவர் கையில் ஒரு நூறு ரூபாய் தாளை தருகிறேன், வாங்க மறுத்தவரின் சட்டைப் பையில் வம்படியாய் ரூபாய்த்தாளை வைத்து விட்டு நகர்கிறேன்,

அவர் எனது உறவினரெல்லாம்இல்லை.ஆனால்இப்போது உறவாகித் தெரிகி றார், அவர்எனது நண்பர் இல்லை,நட்பாகிப்படர்கிறார், அவர் எனது தோழர் இல்லை, ஆனால் தோழமைகளில் பூக்கிறார்,அவர் எனது அக்கம் பக்கமெல் லாம் இல்லை, ஆனால் மனம் கோர்த்து ஆகர்சித்துத்தெரிகிறார்.

சனி, 25 ஏப்ரல், 2020

வெட்ட வெளிப்பொட்டலிலே,,,,

அப்பொழுதுதான் கடையிலிருந்து வெளி வருகிறான்.

பாத்திரக்கடையது, செய்து வைத்த சிற்பமும்,செதுக்கி வைத்த ஓவியமும் ஒன்றாய் கைகோர்த்திருக்கிற வித்தை வெளீப்படும் கடையில்,,,,,/

வெளீயீடுகளும்,உள்ளிருப்புமான வாழ்க்கை பிடித்துப்போகிறதுதான்,

சமயங்களில் சொல்வாள் அவள்.அவளென்றால் இந்த நேரத்தில் வேறு யாராக இருந்து விட முடியும், மனைவி தவிர்த்து,,,,,?

”எட்ட இருந்து பார்த்து பரிமாறிய பார்வையும்,பரிவிசும் காதலர்களுக்கு மட்டுமே கைவரக்கூடியதா,எங்களுக்கு வராதா,,,?”ஏன் மனைவின்னா ஒரு படிக்கும் கீழயா,,,?எட்டி வைக்க வேண்டியவளா,,,? கீழ் படியில உக்காத்தி வைச்சி அதுக்கு மேல வரவிடாத படியா கிங்கரர்கள நிறுத்திவைச்சிகாக்க வேண்டியவளா,,,?நீளமான பல்லும், ஜடாமுடியும் முரட்டுத் தோற்றமுமா காமிச்சி பயமுறுத்தப்படவேண்டியவளா,,,,,?

”இச்சைக்கும்,இன்னதுக்குமாய்மட்டும்பயனாககடமைப்பட்டவளா,,,?கூட்டவும் தெளிக்கவும், கோலமிட்டு போர்த்திக்கிட்டு திரியவும் மட்டும்தானா,பொத்தி வச்ச மனசுக்குள்ள சின்னதாய் சுடர்விடுற விளக்கை கையிலேந்தி நேர் பாதையில நடந்து நேர்பாதையில போயி அதே கோடு தப்பாம வா,தப்புனா கற்பிக்கப்படுற களங்கத்துக்கு ஆளாகிருவ,,,,,,

”பொங்கிப்போட்டது நல்லாருக்கு.பொடவை கட்டுன நறுவிசுல நீ அழகு. உன் னைய மாதிரி நெத்திக்கு இட்டுக்குற இன்னொருத்தி பொறந்துதான் வரணுமா க்கும். நீ நடந்து வர்ற அழகுல இந்த ஊரு கோயில் தேரு தோத்துப் போகும்” ங்குற பேச்செல்லாம் கூட ஒருகட்டுக்குள்ள வைச்சிருக்குற சூட்சுமமில்லாம வேறென்ன,மனசும் மந்திரமும் சொல்லும் செயலும் எழுத்தும் ,பேச்சும் 
வசப்பட்டுத் திக்கிற மாதிரி வீட்டு மனுசாளையும் வசப்படுத்தி  வைச்சிருக்கீ ங்க,  அதுல கட்டுனவன்னா சக்கரைப்பாகு,,,/

இருபது வருஷம் அம்மா அப்பாவோடயும்,சொந்த பந்தத்தோடயும், பள்ளிக் கூட ஸ்நேகித்தோடயும் அக்கம் பக்கத்தோடயுமா வளந்து வேர் ஊனிப்போன பழக்கத்துலஇருந்து புடுங்கிக்கொண்டு வந்து புதுசா ஒண்ணு காமிச்சி இனிம இதுதான் ஓங் சொந்தம்,பந்தம் ,உறவு,,,இங்கதான் இனி நீ காலூனனும், வேர் விடணும்,இலை வச்சி,பூப்பூத்து காய்காய்ச்சி, கிளைபரப்பி அடர்த்து காட்டி விழுது விட்டு குஞ்சு குழுவான்கள தங்க வைச்சி கூடு கட்டிக்காட்டணும், ங்குற பேச்சுக்குப்பின்னாலதான் எங்க அடையாளம் இருத்தி வைக்கப்படுறதா தெரியுது, இதுல ஊனுற நெலத்தையும் மனசுல இருத்திக்க வேண்டியதிருக்கு.

“கேள்வி கேக்கவும் பதில் சொல்லவும் விவாதிக்கவுமா இருக்குற நாக்க நாலா மடிச்சி ரிவிட் அடிக்கணுமுன்னு தோணுதுல்ல.கட்டமைச்சி வைச்சிருக் குற எண்ணங்களை மீறி அது தாண்டி யோசிக்கிற மனசும் மூளையும் இருக்கக்கூடாதுங்குற நெனைப்பு எங்கள பிரேம் அடிச்சி உள்ளுக்குள்ள கட்டி வச்சிருதாம.

”சாப்புட்ட தட்டும்,குடிச்ச டீக்கிளாஸீம் வச்சது வச்ச யெடத்துலயே இருக்க அடுத்த வேளைய பாக்க நகர்ற கெட்டி தட்டுப்போன ஆம்பளத்தனம்.என்ன தான் படிப்பு,எழுத்து,மேடை,பேச்சின்னு,,,,,இருக்குற ஒங்ககிட்ட இருந்தும் படிதாண்ட மாட்டேங்குதுல்ல,,,,,

”கட்டுனவளுக்கு புவும் பொட்டு பொடவையும் மட்டும் குடுத்தா போதுமுங்குற நெனைப்பு மனசு பூராம் கொடி படர்ந்து நிக்கிறப்ப என்னோட உடல் நலன்ல இருந்து மத்தது மத்ததெல்லாம் பேச மறந்துர்றீங்க,

”தலைவலின்னா நெத்திய புடிச்சி விட ,ஒடம்பு சரியில்லைன்னா பக்கத்துல உக்காந்து நாலு பேசி ஆத்திவிட,பீரியட் டயத்துலநாப்கின் வாங்கீட்டு வரன்னு, ஒங்க கிட்ட ஆறுதல் தேடுறது பொய்யாப்போயி ஒங்களோட ஆம்பளைத் தனம் மீசை முறுக்கி நிக்கிதுதானே அது சமயத்துல.

கட்டுனவனே கதின்னு வந்துட்ட நாங்க வேற எங்க போயி என்ன பேசீற, மடக்கி அடிக்கப்படுற பந்து போல சொவத்துகுள்ளயே சுத்திச் சுத்தி வர்ற வாழ்க்கை வழமைதான எங்களது,/

கடையிலிருந்து இறங்கினான்,

வச்சதையும்,வாய்ச்சதையும் வச்சி சமாளிச்சி குடும்பம் நடத்த கத்துக்க என்கிறபரிந்துரை,,,,இல்லாதும் அல்லாதுமாய் அற்ற தினமொன்றின் நகர்வில் பொய்த்துப்போகிறது.

குக்கரும் மிக்ஸியும் மட்டுமில்லை சமையலறை,அதோட இணைஞ்சி ஒடுற நானும்தான்,வறுக்குறது,பொறிக்கிறது,தாளிக்கிறதுலஎன்னோடமனசும்கலந்து ருக்குதான,

அந்த கலத்தலுக்கு ருசி கூட்டணுமுன்னா சமையலுக்கான சாதனங்களும் கொஞ்சம் நல்லா இருக்கணும் என எழுந்த பேச்சின் கீழ் படர்ந்த மென் உணர் வாய் கிரைண்டர் எடுக்க வந்திருந்தார்கள்,

டேபிள் டாப் கிரண்டர்,ஆறாயிரத்து ஐநூறு விலை, பழையதை போட்டது போக நான்காயிரத்து ஐநூறு ரூபாய் என்றார்கள்,

கிரண்டைரை எடுத்துக்காட்டிய கடை வேலையாளுக்கு வலது கை கொஞ்சம் திருகியிருந்தது,

“அம்மா சொல்வா அடிக்கடி, ஜாக்ரதடா அடி,கிடி பட்டுறாம வெளையாடு” என/

”அம்மா சொன்னப்ப எனக்கு பதினைஞ்சி வயசு,ஒன்பதாவது படிக்கிறேன், வீட்லயிருந்து ரெண்டு கிலோ மீட்டர் தூரம் இருக்குற பள்ளிக்கூடத்துக்கு நடந்துதான் போவேன். பள்ளி வாசல் தெருவழியாத்தான் போவேன், அந்தத் தெருவில இருக்குற கூடப் படிக்கிற பசங்க எனக்கு நல்லா ஸ்நேகிதகாரங் களாயிட்டாங்க,

”அதுலஇப்ப தேர் முட்டிக்கிட்ட புரோட்டாக்கடை வச்சிருக்கானே,சலீமு அவன் தான் ஏங்கூட அடிக்கடி நொரண்டு இழுப்பான்,

எவ்வளவுக்கெவ்வளவு நொரண்டுக்குச் சொந்தக்காரனோ அவ்வளவுக்கவளவு உசிரா இருப்பான் ஏங் மேல/எனக்கு ஒன்னுன்னா அவனுக்கு அடிச்சிக்கிரும் மனசு.

”ஏண்டா நீயி மட்டும் பி,டி பீரியடுல நல்ல வெளையாடி நல்ல பேரு எடுத்துருவ வாத்தியாருகிட்ட,நாங்க மட்டும் என்ன அவத்தப்பையலுகளா, ஆளாளுக்கு ரெண்டு மூணுன்னு மட்டும் புல்லப்ஸ் எடுத்துட்டு முடியாம யெறங்கீட்டப்ப நீ மட்டும் மயிறு பத்துவரைக்கும் எடுத்தா எப்பிடி,,,?

அப்ப ஒனக்கும் நாங்க மட்டம்தான காட்டீட்ட,வாடா இப்ப தைரியமிருந்த ஒத்தைக்கு ஒத்தை நின்னு பாப்போம் வாடா என அவன் விடாமல் பேசிய சொல்லின் சூடு எட்டிப்பட்டுவிட சட்டென பாய்ந்து அவனை தரையில் வீழ்த்து கிறான்,

வெட்டுக்கால் கொடுத்து விட்டான்,அவன் கற்றுக்கொடுத்த டெக்னிக்தான், இவனது வகுப்பில் முன் டெஸ்க் மகேஷை கேலி பண்ணிய அடுத்த கிளாஸ்க்காரனை இண்டர்வெல் பீரியடில் அடிக்கப்போகும் போது சலீம்தான் வந்து அருகில் வந்து சொன்னான்,”டேய் வெட்டுக்கால் குடுத்து மடக்கிப்போடு” என,,,/

இவனுக்கு ஒன்ரென்றால் விட மாட்டான் அவன்,பள்ளிக்கூடத்தில் மட்டுமி ல்லை,அவன் தெருவை கடக்கிறது வரை அவன்தான் இவனுக்கு பாதுகாப்பு,

உடல் காத்து உயிர்வரை ஊடுருவுவான்.அவனின் மனது இவனிடமும் இவனின் மனது அவனிடமும் கட்டுகொண்டிருந்த ரம்மியப்பொழுதுகள்,அது கல்கோணா வாங்கினாலும்,சேமியா ஐஸ் வாங்கினாலும் பாதிகடித்து பகிர்ந்து கொள்கிற மனம் இருவரிலுமாய் உரை கொண்டிருந்த நேரம்.

எந்த அளவிற்கு உறை கொண்டிருந்தார்களோ அந்த அளவிற்கு நொரண்டும் இழுப்பான் சலீம் இவனிடம்,

சமயங்களில் சலித்துக்கொள்கிற அளவிற்காய் ஊடாடி விடுகிற நொரண்டில் இன்று கொஞ்சம் விரிசல் விட்டுப்போனதாய்,புல்லப்ஸ் அதற்கு காரணியாய்/

இரண்டுபேரும் கிரவுண்ட் முழுவதுமாய் அரை வட்டம் காட்டி உருண்டு வந்த போது இருவரிலுமாய் எறிப்போன மூர்க்கத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது போல் அப்பொழுதுதான் இவர்கள் முன் வந்து நின்றார் பி.டி வாத்தியார்/

”டேய் எந்திருங்கடா ரெண்டு பையலுகளும் என இரண்டு பேரின் தலை முடியை பிடித்துத் தூக்கியவர்,,,”என்னடா நெனைச்சிக்கிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும் என்றவராய் இருவரையும் பி.டி ரூமுக்குள் செல்கிறார்,

ஏண்டா என்னடா ஆச்சி ஒங்களுக்கு,,,,,?என்றவர் எப்பயும் ஒட்டிக்கிட்டும் ஒரசிக்கிட்டும் திரியிரவுங்கதான நீங்க,,,?

”டேய் இவனே இங்க பாரு இவனை அருகில் அழைத்து சலீம் இருக்கானே நீயி பத்து புல்லப்ஸ் எடுக்க னுங்குறதுக்காக அவன் நாலோட யெறங்கீருவான், அவன் ஒரே நேரத்துல நிக்காம இருபது புல்லப்ஸ் வரைக்கும் எடுக்கக் கூடிய வன்னு எனக்குத்தான் தெரியும்.என்றவர் நீ கெட்டிக்காரன்னு காமிக்க அவன தன் நிலையிலயிருந்து தாழ்த்திக்கிட்டவண்டா, அவனோடப்போயி கிறுக்கா,, போடா இனிம இது போல அடிச்சிக்கிறாதீங்கடா,,,

”என்ன சலீமு அவனோட உசுரு அரணா இருக்குற நீ கூட இப்பிடியா பண்ணு வ,,,?  என்றவர் பிளாஸ்கிலிருந்து டீ ஊற்றி கொடுத்தார் இருவருக்கும்,

”இன்னைக்கி சாய்ங்காலம் ஸ்கூல்விட்டுப்போகும் போது ரெண்டு பேரும் ஒண்ணா போகணும்,போங்கடா,,,,,,”என அன்று அவர் அனுப்பிய நாளில் இறை வன் ஆசீர்வாதத்தோட நல்லாயிருக்கணும் என்றார்,

சலீமை பார்க்கிற நாட்களில் அதே பதினைந்தின் பகிர்வு,

பையன்களுடன் கபடி விளையாடுகையில் கீழே விழுந்து கை ஒடிந்து வந்த நாளில் அம்மாவின் பேச்சை உதாசீனப்படுத்தி விட்டோமா எனத் தோனியது,

கையை சரியாகக்கட்டவில்லை நாட்டுவைத்தியத்தில்.எலும்பு முறிவிற்காய் எடுத்த வைத்தியம் சரியாகிப்போன பின் கை அப்படியே நின்று விட்டது, திருகிக்கொண்டு,

”அன்னைக்கி தட்டி விட்ட அம்மா சொல்லு இப்ப வெனையா வந்து நிக்குது என்றார்.இனிம ஒண்ணும் செய்யிறதுக்கு இல்ல,இத்தனை வயசுக்கு மேல போயி,,,அப்பிடியேவிட்டுட்டேன்,இருக்கட்டுமுன்னு,,,,பழகிப்போச்சி,ஒங்களப் போலஉள்ளவுங்க பேசும் போதுதான்ஞாபகத்துக்கு வருது,எனக்குகை ஒடிஞ்சி  போனது,

வாங்கிய கிரண்டரை அட்டைப்பெட்டிக்குள்ளாய் வைத்து பார்சல் பண்ணும் போது கூட நின்றான்.

ஊனம் என்கிற சொல் உருப்பட்டுத்தெரிவது உங்களைப் போன்றவர்களின் செய்கையால்தான்,மற்றபடி எங்களுக்கு பெரிதாக உறுத்துவதில்லை.

பெட்டியைக்கொண்டு வந்து இருசக்கர வாகனத்தின் கடையின் வாசலில் வைத்து விட்டு வண்டியை எடுத்துட்டு வாங்க,நான் வச்சி கயிறு கட்டி விடுறேன் எனச்சொன்னவரை கை அமர்த்தி விட்டு இல்லை பார்த்துக்கொள் கிறேன் நான் என்றவனாய் எடுத்து கொண்டு வந்தான் பணம் கட்டி விட்டு.

சித்திரையின் உக்கிரம் வெயிலாய் போர்த்தியிருந்தது சாலையை/

வெயில் பிடித்துப்போகிறதுதான் சமயங்களில்/
அத்துவான வெளியில் சோவென அடித்துப்பெய்கிற வெயில் உடல் முழுவ தையும் சடுதியில் நனைத்துச் சென்று விடுகிற முரட்டு உக்கிரம் பிடித்துப் போகிறதுதான் மனதிற்கு/

வெப்பப்பிரதேச மனிதர்களிடம் வேறைதை எதிர்பார்க்க,,,,,

பார்த்துப்பார்த்து பண்ணிப்பண்ணி வளர்த்த உடம்பு,இன்ன நாளில் சைவம் ,இன்ன நாளில் அசைவம்,இன்ன நாளில் சேர்க்கை இன்ன நாளில் விலக்கம் என்கிற கட்டுடலில் இருந்தவர், நீங்க யோகாவெல்லாம் பண்ணுவீங்களா மே,,,,? அப்ப பஸ்கி தண்டாலெல்லாம் எடுப்பீங்களா,,,,?மனைவி கேட்ட போது எல்லாந்தான் செஞ்சேன்,அப்ப பிராயம் அது,அதுக்காக மெனக்கெட்ட மனசு, அதுக்காக மெனக்கெட்ட ஒடம்பு,அதுக்காக இருந்த பிடிவாதம்,,எல்லாம் வாய்ச்சிச்சி, கூடவே கட்டி வைச்சிருந்த கட்டுப்பாடு கொஞ்சம்,தண்ணி வெந்நி, பீடி சிகரெட்,எல்லாம் தள்ளியே,,,,,,டீகூட அளவோடுதான்,

இப்ப அதெல்லாம் இல்லைன்னு ஆகிப்போச்சி.தூக்கம் முழிக்கிற மறு நாள் யோகாவுக்கு பகைன்றாங்க.என்னைக்கி கல்யாணம் கட்டுனேனோ ,அன்னை க்கே தூக்கத்த கட்டி எட்ட வைச்சாச்சி.காதோரமா முடிய தொங்க விட்டுட்டு அதத் தளையத்தளைய சுழிகொண்டு ஓட விட்டா மனசு திக்கிப் போகுதுதா னே,,,?

”திக்குற மனசுக்கு திக்கேது ,திசையேது,வரப்பேது வாய்க்கா ஏது,திக்கட்டும், திக்கெட்டுமாய்,,,,” என அடைவு கொண்டு ஓடிவந்தான்,

அதுவும் கட்டுனவனுக்கு கூடுதலா கொஞ்சம் திக்கும்தானே,,,?என்றவனின் காதருகில் சென்ற பொழுது”ம் சும்மாயிருங்க,தலைக்கு மேல வளந்த புள்ளை ங்க வீட்டுக்குள்ள நிக்கிது. என்றவளை ஏறிட்டவன்……எத்தனை வீடுகள்ல ”தலைக்கு மேல”தடுத்து நிக்குதுன்னு தெரியலையே,,,,,,/

கண்ணைஎரித்தது வெயில்/ வைத்த கண்வாங்காமல் பார்த்துத் திரிய சாலை யோர காட்சிகளும் நிறைந்து தெரிகிற பிம்பங்களும் கொண்ட நகர்வின் அடர் த்தி நன்றாகவே/

தோத்துப்போற மனசு என்னது,ஜெயிச்சி நிக்கிற மனசு உங்களது,ஒட்டி ஒப்பிவிச்சி உறவாடி சிலாகிக்கிற சமயங்கள்ல தோத்துப்போயி நிக்கிறது நீங்களாவும் தெரியிறீங்கதானே,,,?

இரு சக்கரவாகனம் கடை நடையிலிருந்து வெகுதூரம் விலகி நின்றது,

விலகி நிற்பதும் அருகாமையாய் அணைப்பதும் சமயம் பொறுத்துத்தானா,,,,,? எட்ட நிறுத்தி,தள்ளி வைத்து, புண்படுத்தி புறக்கணித்து,,,,,எல்லாமையும் சேர் த்துக் கூட்டி என்னில் ஏற்றி வைக்கிற சூட்சுமம் உங்களிலும் சேர்ந்திருக்கிறது தானே,,,?

நேர்எதிர் வரிசையில் இரு சக்கர வாகனம் நின்றது. ஒரு பிரிண்ட்டிங் பிரஸ் முன்னால், அந்த வரிசைக்கடைகளின் முன் எல்லாவற்றிலும் ”வாகனங்களை நிறுத்தாதீர்கள்” என எழுதிய தொங்கிய அட்டை அந்த பிரஸ் முன் மட்டும் இல்லை.

வண்டியை எடுக்கும் போது பிரஸ் முதலாளியிட கேட்கிறான்.

“சார் உதவி செய்யிறவன் உபகாரியும் இல்ல,செய்யாதவன் கஞ்சப்பிசுனா ரியும் இல்லை, என்னைய உதவி செய்யிறவனா வச்சிருக்குற சமூகம் அவன செய்யாதன்னு சொல்லுது,அவ்வளவுதான் என்றவரை வியந்து நோக்கியவன் வண்டியின் இருக்கை மீது கொஞ்சம் தண்ணீரை ஊற்றி துடைத்து விட்டு நகர்கிற விநாடியில் எதிரே திருநங்கைகள் சிலர் பாட்டுப்பாடி கடையாய் காசு வாங்கிக்கொண்டு வந்து கொண்டிருந்தார்கள்,

வியாழன், 16 ஏப்ரல், 2020

ராம்குமார்,

இத்தனை ஆண்டுகள் ஆகியும் என்னில் உறைகொண்ட பெயராயும், நபராயும் அவர் இருக்கிறார்.


உளிகொண்டு செதுக்காது வரை கொண்ட உயிர் ஓவியமாய் என்னில்! இத்தனை ஆண்டுகள் கழித்தும் நான் நினைக்கிற பொழுதுகளில் என் மனதை இம்சிக்கிறவராகிப்போகிறார்.வானில்வந்துபோகிற எரி நட்சத்தி ரம் போல் சட்டென வந்து மறைந்துபோன அவர் ராம்குமார். அவர் இப் பொழுது நம்மில் இல்லை.ஆனால் அவர்பற்றிப்பேச,எழுத விஷயமிருக்கி றது நண்பர்களே….!


அது ஆகிப்போனது வருடங்கள் இருபத்தைந்திற்கும் மேலாக! வயிற்றுக்கு அரசுப் பணி மனதிற்கு,,,,,,?என்ன……?என்கிறகேள்வி என்னிலும் என்னைப்

போன்றே பலரிலும் உரைகொண்டிருந்த நேரம் அது.

நேரங்கள்,நொடிகளாய்,நிமிடங்களாய், மணிகளாய் முன்நகர்வுகொண்ட பொழுதொன்றின் புலர்தலில் அகில இந்திய எழுத்தறிவு இயக்க கலைப் பயணித்திற்கு நீவித்திடப்பட்டிருக்கிறாய் என 90 களின்பிற்பகுதியில் அசரீரி யாய் அல்லாமல் நிஜம் சுமந்து ஒருஅழைப்பு. அந்த அழைப்பில் கை கோர்த்தவர்களாய் நான் செல்வம்,நாராயணன்,அழகு,ஆறுமுகப்பெருமாள் ,முத்துச்சாமி,இந்திரஜித், மதனகோபால், உமாசங்கர் மற்றும் வெங்கடே ஸ் வரி மேடம்,பிரேமா மேடம்,பூங்கோதை மேடம்,விஜிலா மேடம் ஆகி யோர் கை கோர்த்தோம். உடன் அன்பின் உருவான ராம்குமாரும்/

திருச்சுழியில் ட்ரெயினிங்நாடகக்குழுவிற்கு.பத்துநாட்களோ,ஒருவாரமோ என்கிறதாய்ஞாபகம்.ஏற்கனவே பாண்டிச்சேரிஅறிவொளி இயக்ககலைக் குழுவில் பங்கேற்று பணியாற்றிய உலைக்களமாக்கல் எங்களுக்கு சிறிது போதுமானதாய்இருந்தது. பின் ஒரு வார காலத்தின் பட்டை தீட்டலில் மெரு கேறி நாற்பத்தைந்து நாட்கள் இம்மாவட்டம் முழுவதும் கல்வியின் அவசியம் குறித்த நாடகங்களைபகலில் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளிலும்,மாலை கிராமங்களிலுமாய் நடத்தி வந்தோம்.பதினைந்துபேர் வரை கொண்ட ஒரே குழு.

அது பயணித்தநாட்கள்.,பயணத்தினூடேசுமைகொண்ட எண்ணங்கள், எண்ண ங்களைச் சுமந்து உறை கொண்ட இடங்கள் சாப்பாடு தங்குமிடம் தூக்கம் என இன்னும் இன்னுமாய் நகர்வுகொண்ட மென் மனங்களில் நடத்திய நாடக ங்கள். பேசியவசனங்கள் சென்று வந்த இடங்கள் பார்த்துப் பேசிய மனிதர்கள் என அனைவரையும் பற்றி நாங்கள் பேசிய நேரத்திலும், உரையாடிய பொழுது களிலும் என் மனதிற்கு மிகவும் நெருக்கமாகிப் போனவராய் ஆகிப்போகிறார் ராம்குமார் என்கிற ராம்குமார்.

மெலிந்து ஒடுங்கிய தேகம். யாரோ மிகமிக அவசரமாய் ஓடிவந்து இதற்கு மேல் உன் உடம்பில் சதை போட்டால் நன்றாக இருக்காது எனச்சொல்லி விட்டுச்சென்றது போல் பாரிய உடம்பு.ஒட்டிப்போய் குழி விழுந்த கன்னம்,ஒடுங்கி உள்ளடங்கிய கண்கள். ஏறியநெற்றி.,தலையில் நட்டு வைத் தது போலாய் அலசலாய் இருந்த முடிகள்.அளவிற்கு மேல் இருந்தால் வலிக்கும் உடலுக்கு என்பதாலோ என்னவோ மிகச்சொற்பமாய் எலும்புக ளையும் அதை மூட சதையையும் கொண்டவராய் தெரிந்தார். அதனாலெ ன்ன எலும்பும்சதையும் மட்டுமல்லவே உடல். உள்ளமும் உயிரும் மேலோங்கிய உணர்வுகளின் கலவையும்தானே உயிர்,,,,,, இல்லையா? என ராம்குமாரிடம் உரிமையுடன் கேட்கும் நாட்களில் அவரைஒருமையில் பேசி அழைக்கிற நெருக்கம் பெற்றிருந்தேன்.அந்த நெருக்கத்தினூடான நாட்களில் வழக்கம் போல ஒரு நல்ல மாலையில் நாடகங்கள் நடத்திவிட்டு கிளம்பலாம் எனநினைத்த வேளை கனிந்து நின்றிருந்த வானம் யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் அவிழ்ந்து கொள்கிறது.

பின் என் செய்ய. மழை பெய்த ஒரு மணி நேரமும் ஒருஅரசுஉயர்நிலைப் பள்ளியின் தாழ்வாரத்தில் நிற்கிறோம். பெய்து கொண்டிருந்த மழையின் அடம் குறைந்து பூவானம் தூவி நின்ற நேரம்.பள்ளியின் தாழ்வாரத்தில் நாங் கள் அனைவரும் நின்று கொண்டிருக்க எங்களின் பின்னே யாருக்கும் தெரியாமல் தூசி படர்ந்தசிமெண்ட் தரையில் கையது கொண்டு மெய்யது போர்த்தி அமர்ந்திருந்தான்.மேலில் போர்த்தப்பட்டிருந்ததுண்டு அவன் உடல் நடுக்கத்தை கூட்டிக்காட்டியது.புரிந்து போகிறது எனக்கு. வழக்கம் போல் அவருக்கு உடல்நிலைசரியில்லை என்பதை டீம் கேப்டன் செல்வம்

அவர்களிடம் கூறிவிட்டு எங்களை ஏற்றிச்செல்ல வரும் வேனுக்காய் காத்தி ருந்தோம்.

நாங்கள் நின்ற பள்ளிக்கும் வேன் நிற்கிற இடத்திற்கும் ஊடாய் வாறுகால் தோண்டப்பட்டுக்கிடக்கிறது.ஆகவே நீங்கள்அனைவரும் வாறுகால் கடந் து வந்து விடுங்கள் வேன் நிற்கிற இடத்திற்கு என்றொரு சமிக்சை வருகிறது. சரி கடந்து விடலாம்.

தினந்தோறுமாய் கல்வி கற்க பிள்ளைகள் கடந்துவருகிற வாய்க்காலை கல்வியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு நாடகங்கள் நடத்துகிற நாம் கடக்கமுடியாதாஎன்ன?என்கிறமன மேவியில் ராம்குமாரைப் பார்க்கிறேன்.

நீங்கள் இருக்கையில் எனக்கென்ன மனக்கவலை என்கிறவனாய் என்னைப் பார்க்கிறவன் கையூன்றியும் என்கை பிடித்துமாய் எழுகிறான். தோண்டிப் போடப்பட்டிருந்த வாய்க்கால்வரை என் தோள் பிடித்து வந்தவன் வாய்க் கால் பள்ளத்தை நோக்கியதும் மலைக்கிறான்.

என்ன செய்வது இப்பொழுது என நின்ற சமயம் அதோ அங்கே கொஞ்சம் மேடாய் தெரிகிறது வாய்க்கால் அங்கே சென்று ஏறிக் கொள்ளலாம் என

மேடேறிய ஓடைப்பகுதியில் இறங்கினால் இதற்கு அதுவே தேவலை என்றாகிப் போகிறது என்ன செய்ய பின்னே? சற்றும் யோசிக்காமல் நான் ராம் குமாரை எனது முதுகில் உப்பு மூட்டை ஏறச்சொல்லி கறையிறக்கி விடுகிறேன்.எங்களது நாடகக்குழுவினூடாய் ஒரு பழக்கம் இருந்தது.

நாடகம் நடத்திவிட்டு இரவு எந்நேரம் வந்தாலும் ரவுண்டாய் அமர்ந்து அன்றைய நாடகங்கள். நடத்திய இடங்கள் அதன் குறை நிறை எல்லாம்

கலந்து பேசுவோம் .அப்படிப் பேசுகையில் எனதருகில் அமர்திருந்த ராம் குமார் அண்ணா உங்கள் மடியில் படுத்துக்கொள்ளட்டுமா சிறிது நேரம் எனக் கேட்கிறான்.

மடியில் என்னடா தம்பி. என் மனதிலேயே உனக்கு மெத்தையிட்டு வைத்திருக்கிறேன். இப்போதைக்கு எனது மடியில் படுத்துக்கொள்ளடா என் தம்பி என்கிறேன்.

அவன் அன்று படுத்த மடி இன்றும் கனக்கிறதாகவே,/

இத்தனைக்கும் அகில இந்திய எழுத்தறிவு விழிப்புணர்வு கலைக்குழுவிற்கு செல்லும் வரை நான் அவனைப்பார்த்ததில்லை,அவன் முகம் எனக்கு பரிச்சயம் இல்லை, அவன் கறுப்பா சிவப்பா தெரியாது,அவன் யாரெனக் கூட அறிந்ததில்லை.
பின் எப்படி அவன் பற்றிய கழிவிரக்கம்,அதுவும் இத்தனை வருடங்கள் கழித்து./

தன் வாழ்தலில் சாதனை என இனி ஏதும் இல்லை.தனக்கு வாழ்நாள் என இனி இருப்பது அபூர்வமே,உடல் கொண்ட நோய் உதிரம் குடித்து உயிரை போக வைப்பது உறுதி ,ஆகவே நாம் மறையப்போகும் முன்னாவது இப்பூ உலகிற்கும் அதில் குடிகொண்ட மனிதர்களுக்குமாய் எதாவது செய்து விட்டுப் போக வேண்டும் என்கிற அவனது நினைப்பு அவனை அகில இந்திய எழுத்தறிவு இயக்க பிரச்சார கலைப்பயணத்தில் பங்கேற்கச் செய்கி றது, தான் நடித்துக் கொண்டிருக்கும் போதும்,தன் மறைவிற்குப்பின்னாலும் தான் நடித்த கல்வி குறித்த விழிப்புணர்வு பேசப்படவேண்டும் என நினைத்த அந்த எளிய மனதினன் என்னில் உயர்ந்து நிற்கிறான், ஆண்டுகள் இத்தனை ஆகியும்,,,,./ 

என்னிலும் இயக்கத்திற்கான அர்ப்பணிப்பிலும் உயர்ந்து நின்ற ராம்குமாரின் நினைவைப் போற்றுவோம்.

புதன், 18 மார்ச், 2020

வெங்காயத்தோலு,,,,,

வெங்காயம் விற்ற வண்டிகளிலெல்லாம் வெள்ளைப்பூண்டு விற்க ஆரம்பித் திருந்தார்கள்.

கிலோரூபாய் நூறு என்றார்கள்.பரவாயில்லை.பார்ப்பதற்கு நன்றாக தெரிந் தது, இன்னும் புழக்கத்தின் போது எப்படி இருக்கும்,எத்தனை நாள் தாங் கும் என்பது உறுதிபடத் தெரியவில்லை,

கடைகளில் பொதுவாக இவ்வளவு வெள்ளையாக வாங்கியதாய் ஞாபகம் இல்லை,பளீரெனச்சிரிக்கிற மனம் பிடித்த காதலியின் முகம் நினைவுக்குள் வந்து போவது தவிர்க்க இயலாமலேயே/

நினைவில் நிற்கிற நாட்களில் மட்டுமல்லாது மற்ற நாட்களிலும் கூட சந்திக்கப் போவதுண்டு,

சுகாவை இவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.

சுகா என்றால் இவனுக்கு இஷ்டம்,சுகா என்றால் இவனுக்கு அன்பு,சுகா என்றால் மனதில் அலை பாயும் உணர்வு,சுகா என்றால் காற்றில் கலந்து வந்த மிகை,,,சுகா என்றால் இவனின் உயிர்,சுகா என்றால் இவனின் உணர்வு, அவள் இன்றி இவனா,இவனன்றி அவளா நினைத்துப்பார்க்கக் கூட அச்சமாய் இருக் கிறது,,,,என இன்னும் இன்னுமாய் யோசிக்கிற இவனின் உணர்வுகளுக்கு ஈடாய் தெரிந்த அவளை உளமாற நேசித்தான்,

இங்கிருந்து என் ஜி ஓ காலனி போக வேண்டும்,அத்தை வீட்டுக்குப் பக்கத்தில் அவர்கள் குடியிருந்த போது ஏற்பட்ட பழக்கம்,

ப்ரௌசிங்க் சென்டருக்கு வருவாள்.இவன் எப்போதுமே கைதேர்ந்த பைத் தியக் காரனைப்போல பேப்பரும் கையுமாக ஜெராக்ஸ் பிரிண்ட் அவுட், பென் டிரைவ்,,,,என மேட்டரும் கையுமாக அலைபவன்.

பெரும்பாலுமாய் கதைகள் கருக்கொண்டிருக்கும் பென் டிரைவை பிரௌவ் சிங் சென்டரில் கொடுத்து விட்டுப்போய் விடுவான்,பிரிண்ட் அவுட் எடுத்து வைக்கச்சொல்லிவிட்டு ஒரு மணி கழித்தோ அல்லது மறுநாளோ வாங்கிக் கொள்வதுண்டு.

அப்படியான ஒரு நாளில்தான் பழக்கமானாள் அவள்.பிரிண்ட் அவுட் எடுத்த பேப்பரை கையில் வைத்துக்கொண்டு பிரௌசிங்க் சென்டர் வாசலில் நின்ற பொழுது,

நன்கு வளர்ந்து பருத்த மரம்,எப்பொழுது முளைகொண்டது என யாருக்கும் தெரியவில்லை,யாரும் அறியவில்லை.

மூன்றாவது கதையின் நான்காவது பக்கத்தில் அத்தை மகள் என்பதற்குப் பதில் ”அத்தைத்தையின் மகள் என டைப் அடித்து வைத்திருந்தான்,அது இப்போதுதான் புடிபடுகிறது,திருத்தம் வேண்டி உள்ளே கொண்டு போக திரும்பிய பொழுது எதிர்பட்ட அவள் சில்லிட்டு இதம் தந்த வேப்பமர இலைகளின் பூம்பிஞ்சி வாசனையுடனும் மென்மை சுமந்துமாய் காணப் பட்டாள், அப்படி தலைக்குக் குளித்திருந்திருப்பாள் போலும், முடியை அள்ளி முடியாமல் விரித்து விட்டு முடியின் நுனியில் முடிச்சுப் போட்டிருந்தாள், விரிந்து பறந்திருந்த முடி காற்றில் அலைந்து ஒற்றை ஒற்றை யாய் பிரிந்தா டியது பார்க்க நன்றாக இருந்தது,பெரிதாகவும் இல்லாமல் சிறியதாகவும் இல்லாமல் சிவப்புக்கலரில் அவள் வைத்திருந்த பொட்டு நன்றாக இருந்தது, கழுத்தில்தொங்கியஒற்றைச்செயின்அவளது நிறத்திற்கே,,,/வெளிர் மஞ்சளில் அங்கங்கே எம்ராய்டரிங்க் வைத்த டாப்ஸீம், காக்கிகலர் பேண்டும் பார்க்க நன்றாக இருந்தது,ஆ,,,,சூப்பர் அப்படியே தூக்கி ஒரு சுற்று சுற்றி விடலாம் போலிருந்தது,கண் இமைக்காமல் இப்படியாய் ஒரு வயசுப்பிள்ளையை பார்ப்பதும் தவறுதான் என எண்ணியவனாய் பார்வையை திருப்பிக்கொண்டு பிரௌசிங்க் சென்டருக்குள்ளாய் நுழையப்போனவனை தடுத்தாட் கொண்ட குரலாய் அவளது பேச்சு,

கதையெல்லாம் எழுதுவீங்களா நீங்க,நேத்து பிரிண்ட் அவுட் எடுத்து வைச்சி ருந்த பேப்பர்லயிருந்து ஒண்ணு பறந்து வந்து சென்டருக்குள்ள நெழையப் போன ஏங் முன்னாடி விழுந்துச்சி,நான் கூட மொத்தல்ல எதாவது ஜெராக்ஸ் எடுத்த பேப்பரா இருக்குமுன்னு கடந்து போக நெனைச்சப்ப எதுக்கும்  எடுப்போமுன்னு எடுத்துப்பாத்த நல்ல கதையோட ஒரு பக்கம்,ஆகா அப்ப மிச்சம் உள்ள இருக்கான்னு அவரு தரமாட்டேன்னு சொன்னத அவருகிட்ட யிருந்து கேட்டு வாங்கி படிச்சிட்டு இன்னைக்கி ஒங்கள பாக்கலாமுன்னு இருந்தேன்,நல்லவேளையா நீங்களே கண்ணு முன்னாடி வந்து நிக்கிறீங்க, பொதுவா கும்பிடப்போனாலும் சரி குறுக்க போனாலும் சரி தெய்வங்கள் இப்பிடி குறுக்க வந்து நிக்குறது தவிர்க்க இயலாம போயிறது உண்டு தானே,,,, அது போல நீங்க,என்றாள்,

இவனுக்கென்றால் ஜிவ்வும் சிரிப்புமாய் ஒரு சேர்ந்து வர எதை முதலில் வெளிபடுத்துவது என கலங்கி நிற்கிறான்,

இதில் முதலிடம் பெற்றது ஜிவ்வுதான்,மனம் கொஞ்சம் லேசாகியும் குஞ்சரம் கட்டியது போலவுமாய் ஆகித் தெரிந்தது,

ஊலா,லா,லா,,,,,,,,,,ஆகா மேலே மேலே பறக்க ஏதுவாய் றெக்கைகட்டிக் கொள்கிறதுதான் மனம்.

இதற்குத்தானே காத்திருந்தாய் இத்தனை நாட்களாய் என்பது போல் இல்லாமல் இயல்பாகவே அவளில் ஈடு கொள்கிறவனாய்,,,/

அப்பிடியெல்லாம் இல்லை ,நான் தெய்வமும் இல்லை நீங்க பக்தையும் இல்ல,என்கிறஇவனின் சொல்லுக்கு சிரித்தவள் அப்பிடிச்சொல்லல நானு, தெய்வங்கள திடீர்ன்னுதான் பாக்கமுடியும் ,அது போல காத்திருந்துதான் ஒங்கள பாக்கமுடியுது ,அதத்தான் சொல்றேன் என்றாள்.

இவன் எழுதிய கதைகள் பற்றி பேசினான்.அவள் படித்த கதைகள் பற்றி பேசினாள்.பேச்சு பேச்சாகவே இருந்த நேரத்தில் அரும்பிய காதலுக்கு ஏது முன்னுரை,,,,,

அன்றைய முன்னுரையின் முடிச்சு சிறிது நாட்கள் வரை புள்ளியிட்டு கோலம் போடப்பட்டு தொடர்ந்ததாய்,,,,,/

ப்ரௌசிங் சென்டர்க்காரர் கூடச்சொன்னார்.சார் வேணாம் அதெல்லாம் ஒத்து வராது ஒங்களுக்கு,,,உள்ளுக்குள்ள ஏதாவது ஆசைய வளத்து அத பூவும் பிஞ்சுமா காய்க்க விட்டுக்கிறாதீங்க,பின்ன அது வேரோட அறு பட்டு சாயும் போது சங்கடபட்டும் காயப்பட்டும் போவீங்க, பாத்துக்கங்க, நாங்க மூணாவது மனுசன்,அவ்வளவுக்குள்ளதான் பட்டும் படாம சொல்ல முடியும், ஒங்களுக் கென்ன தங்கத்துக்கு நல்லா படிக்கிறீங்க,நல்லா எழுது றீங்க, நல்ல பேரு இருக்கு ,அத விட என்ன வேணும் இந்த வயசுல, எனக்குத் தெரிஞ்சி ஒங்க வயசுக்கு இவ்வளவு யோசிச்சி பேசி,கதை எழுதி அத புத்தகமா போட்ட ஆள நான் பாத்ததே இல்ல,ஒரு பக்கம் காலேஜீ படிப்பு,ஒருபக்கம் மனசுக்குப்பிடிச்ச எழுத்து படிப்பு,,,நாளைக்கு கையில கெடைக்கப்போற நல்ல உத்தியோகம்,,,, இப்பிடியெல்லாம் இருக்கும் போது எதுக்குப்போயி நீங்க,,,,,,,என்றார்,

அவரது பேச்சு பேச்சாக இருந்த நேரத்தில் எ ன் ஜி ஓ காலனி வரை இவனும், டவுனுக்குள் ஏதாவது வேலையை சுமந்தவளாய் அவளுமாய் வந்து போய்க் கொண்டிருந்த நாட்களில் இவன் மனம் ஈர்த்தவளின் தந்தைக்கு டிபார்ட் மெண்டில் இடமாறுதல் என வெளியூருக்குச் சென்று விட்டார் கள்.

அவர்கள் ஊரை விட்டு செல்வதற்கு முதல் தினமாய் பார்த்தது அவளை,,,/ கோயிலில் நின்றவள் குங்குமம்,திருநீருடன் கண்ணீர் கலந்து நின்றாள், வெளியூரின் வரைபடத்தை கையில் வைத்துக்கொண்டு,,/

அன்று பறந்தவள் இன்றுவரை எந்த திசையில் இருக்கிறாள் எனத் தெரிந் திருக்கவில்லை இவனுக்கு,,/

பஸ்ஸை விட்டு இறங்கியவனுக்கு டீக்குடிக்க வேண்டும் போல இருந்தது, ஒரு மணி நேர பிரயாணம்,

தனியார் பஸ் கிடைக்கும் நாட்களில் இளையராஜாவின் இசை மனதையும் செவியை நிறைத்து விடும் என்பது உறுதி,

அது அல்லாது டவுன் பஸ்ஸில் ஏறுகிற நாட்களில் மனமும் இசைக்கு உத்திரவாதமில்லை.

அன்று டவுன் பஸ்ஸில்தான் வந்திருந்தான்,

அலுத்துப் போயிருந்த உடலுக்கும் மனதுக்குமாய் டீ கொஞ்சம் உற்சாகம் ஊட்டலாம்தான்.

டீக்கும் வடைக்குமாய் ரூபாயைக் கொடுக்கும் போதுதான் ஞாபகம் வருகிறது, வெங்காயம் வாங்கிப்போக வேண்டும் எனவும் அதற்காய் கூடுதலாய் பணம் கொண்டு வந்ததும்.

முக்கு ரோட்டில் இறங்கியதும் வழக்கமாய் கேட்கிற ”நாலுகிலோ நூறு ரூபாய்,,,,அஞ்சி கிலோ நூறு ரூபா,” என்கிற குரல் கேட்கவில்லை.

கடையை விட்டு இறங்கியதும் ரோட்டோரமாய் நின்றிருந்த வேனை பார்க்க முடிந்தது.

வேனை நெருங்கும் போதுதான் தெரிகிறது வெங்காயம் இல்லை என.

சாலையின் இடது ஓரமாய் பரந்து விரிந்து குடை போல் நின்றிருந்த வேப்ப மரத்தின் அருகில் நின்றிருந்த மினி வேனில் அடுக்கப்பட்டிருந்த மூடை களின் ஓரமாய் நின்றிருந்தாள்,

வேனின் பின்புறகதவு லேசாய் திறந்திருந்தது,அதன் இடது ஓரத்தில் அமர்ந் திருந்த அவளது அருகில் அவிழ்க்கப்பட்டு வாய்திறந்த நிலையில் இருந்த வெள்ளைப்பூண்டு மூடையின் அருகில் தராசு இருந்தது,

மினி வேன் அது.

”மொத்தமா வாடைகைக்கு பேசிருவோம்.யேவாரத்துக்கு போற வார ஊர்கள்ல பூரா யெடம் கெடைக்காதுல்ல. அதான் இப்பிடி ஒரு ஏற்பாடு, என்ன இங்க யிருந்து நாலைஞ்சி ஊர்களுக்குப்போவம்,நெரந்தரமா எங்களு க்குனு இந்த யெடம்தான்.

”பொறந்தது வளந்தது ஒரு யெடமா இருந்தாலும் எங்களுக்கு சாப்பாடு போடுறது இந்த யெடமாத்தான் இருக்கு”,

ஐம்பது வயதிற்குற்குள்ளாக இருக்கலாம் அவளுக்கு.உடல் தடித்துப்பாரித்தி ருந்தாள்.அழுந்தப்படிய வாரியிருந்த தலையில் நடு வகிடு எடுத்திருந்தாள். நெற்றிக்கு இட்டிருந்த குங்குமத்தை கொஞ்சம் நடு வகிடின் ஆரம்பத்திற்கும் இழுத்திருந்தாள்,வெளிர்க்கலரில் பொடிப்பூக்கள் தூவியிருந்த புடவை பார்ப்ப தற்கு நன்றாக இருந்தது.அதே கலரில் சட்டையின் கை வலது கைநுனி ஓரம் பிரிந்து தொங்கிய நூல் வெள்ளைக்கலராய் இருந்தது,

சிவப்பு சட்டைக்கு வெள்ளைக்கலர் நூல்,காலடியில் சேலைக்கு கீழாக தெரிந்த பாவாடை மஞ்சள் கலராயும் நைந்து கிழிந்துமாய் தெரிந்தது.

”எப்போஎதுகிடைக்குதோ அதக்கொண்டாந்து விப்போம்.மத்தபடி இதுதான்னு” இல்ல,அனேகமா இன்னும் ஒரு வாரம் கழிச்சி வெங்காயம் திரும்ப வந்துரு முன்னு நெனைக்கறோம்.

”எங்களால உறுதியா எதுவும் சொல்ல முடியல,வெங்காயம் இப்பத்தான் முக்கா வெளைச்சல நிக்குதுன்னு சொல்றாங்க,இத்தன நாளா பெரிய வெங் காயம் வித்துக்கிட்டு இருந்தோம்,இப்ப சின்னது வருத்து வருதுன்னு சொல்றா ங்க,அந்த இடைவேளை வரைக்கும் நாங்க எப்பிடி சும்மா இருக்க முடியும்,,,? அதான் சந்தையில் சலுசா கெடைச்சத போட்டு கொண்டாரம், இதுன்னா அன்றாடம் குடும்பத்துக்கும் கடைகளுக்கும் தேவைப்படுற பொருளு, ரெண்டு மூணு நாளு கழிச்சினாலும் பொருள் அழிஞ்சி போகும், ஆனா மத்தது அப்பிடியில்ல,அந்தா கொஞ்சம் தள்ளி ஒரு வண்டியில பழம் விக்கிறாருல்ல. இதுபோலவாரக்கணக்குலயெல்லாம் வச்சிக்கிற முடியாது, ஒரு ரெண்டு நாளைக்கு வேணுமுண்ணா தாங்கும்,அதுக்கு மேல நம்ம கை நட்டமாகிப் போகும்,அதுக்குதான் இந்த மாதிரி யேவாரமா பாத்து எடுக்கு றது என்றாள் வெங்காயம் விற்றவள்.

பஜாரில் வாங்கலாம் என நினைக்கிற நாட்களில் முடியாமல் போகிறது, அது. வேலை முடிந்து அலுப்பையும், சுமையையும் தூக்கிக்கொண்டு பேருந்து ஏறினால் ஊர் வந்து சேர ஒரு மணி நேரமாகிப்போகிறது,

சமயத்தில் இரவு ஒன்பது மணிவரை கூட ஆகிப் போவதுண்டு.

அதற்குப் பின் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே சாத்தியம்,அன்றும் கூட என்ன விலை விற்கிறதோ அதைப்பொறுத்தே வெங்காயம் வாங்கத்தோன்றும்,

சாலையின் இடது ஓரமாய் பரந்து விரிந்து குடை போல் நின்றிருந்த வேப்ப மரத்தின் அருகில் நின்றிருந்த மினி வேனில் அடுக்கப்பட்டிருந்த மூடைகளின் ஓரமாய் நின்றிருந்தாள்,

வேனின் பின்புறகதவு லேசாய் திறந்திருந்தது,அதன் இடது ஓரத்தில் அமர்ந் திருந்த அவளது அருகில் அவிழ்க்கப்பட்டு வாய்திறந்த நிலையில் இருந்த வெள்ளைப்பூண்டு மூடையின் அருகில் தராசு இருந்தது,

கடைசியாய் வாங்கிய போது நாலு கிலோ நூறு ரூபாய் என வாங்கியதாய் ஞாபகம், அலுவலகம் முடிந்து போகிற மாலை வேளைகளில் வாங்கிக் கொள்ளலாம்என்றால் காலையில் விற்ற விலை மாலையில் மாறிப்போகிற து, அதனால்தான் இப்பொழுதே வாங்கிகொள்ளலாம் என வேனின் முன்னால் போய் நின்ற போது அதுவரை வெங்காயம் புடைத்துக்கொண்டிருந்தவள் தனியாய் குவிக்கப்பட்டிருந்த வெங்காயத்தை அள்ளி தராசில் போட்டாள்.

இவனுக்கு முன்பாய் பெண்ணொருத்தி நின்று கொண்டிருந்தாள்,”ஏங் அவுங்களுக்கு போட்டுட்டு எனக்கு போட வேண்டியதுதானம்மா” என இவன் சொன்ன போது ”இருக்கட்டும் சார் நீங்க பல வேலையா போற வுங்க, அந்தம்மா அப்பிடியில்ல,இனி மதியத்துக்குப்போயி வீட்டுல சோறு பொங்குற வேலை மட்டுந்தான் அவுங்களுக்கு,,,”சாங்காலம் அவுங்க புள்ளைங்க காலேஜ் விட்டு வர்ற வரைக்கும் அவுங்களுக்கு பொழுது இங்கதான் என சுட்டிக் காட்டியவளை ஏறிட்டவன் வெங்காயம் வாங்கிக் கொண்டு வருகிறான் மௌனம் காத்த மனதுடன்,,,,/

அவள் சுட்டிக்காட்டிய பெண்ணிடம் வெங்காயம் வாங்கிக்கொண்டு திரும்பி வரும் போதாவது விசாரித்திருக்கலாம் ”என்ன சுகா நல்லாயிருக்கையா” என,/

புதன், 15 ஜனவரி, 2020

எறும்பூர,,,,,



எறும்பு ஒன்று ஊர்ந்து சென்று கொண்டிருக்கிறது தனிமைகாட்டியும் அப்பாவி -யாகவும்,,,/ 

எங்கு செல்கிறது அது,?எங்கிருந்து அதன் வருகை,?அதற்கிட்ட பணிகள் என்ன எதுவுமறிந்திருக்கவில்லைஅவன்,வாசல்விட்டுஇறங்கியவன் அப்பாவியுடன் அப்பாவியாய்எறும்பிடம்நலம்விசாரித்துவிட்டு,,,,என்னஅவலம்இது,,?தனியாகவும் கவலை சுமந்தும் செல்கிறாயே என்கிறான்,

தனியாகச் செல்கிறேன் என்பது வாஸ்தவம்தான் ,ஆனால் கவலை சுமந்தெல் லாம்செல்லவில்லை,தனியாகச்செல்கிறேன்,வெயில்வேளை,வயதாகிப்போன உடல்,இரைதேடிச்செல்கிறபதட்டம்,இரை கிடைக்குமோ கிடைக்காதோ என மனம் சுமந்த எண்ணமெல்லாம் ஒரு சேரவும் எனது குழுவில் வந்து விடுகிற அவ்வப்பொழுதான மனப்பிணக்கின் காரணமாகவும் தனித்துச்சென்று கொண் -டிருக்கிற என் குறுக்கே வந்து மூடப்பட்ட ரயில்வே கேட்டாய் கேள்வி யை இடைநிறுத்தினால் எப்படி,,,,,,?எனச் சொன்ன எறும்பு மேற்க் கூறிய இத்தனை யையும் மனமும் உடலும்தாங்கி சென்று கொண்டிருக்கிற நான் கொஞ்சம் சோர்வுற்றும் தளர்ந்துமாய் போவதில் ஆச்சரியமென்ன இருந்து விடமுடியும் சொல்லுங்கள்,போக உங்களுக்கென ஊராட்சிகளிலிருந்து நகராட்சிகள், மாநகராட்சிகள் அமைத்து தருகிற ஒற்றைச்சாலையிலிருந்து நாற்கரச்சாலை வரை வசதி இருக்கிறது, அதற்கென பாதுகாப்பு வசதியும் போக்குவரத்து சிக்னலும் அமைத்துக்கொடுக்கப்பட்டிருக்கிறது, மீறி நடக்கிற விபத்துக்கள் விதிவசத்துக்குள்ளும் கவனக் குறைபாடுக்குள்ளுமாய்/

எங்களுக்குஅப்படி என்ன இருக்கிறது சொல்லுங்கள், நீங்கள் நடந்து செல்கிற சாலையில்தான் நாங்களும் நடந்து செல்லவேண்டும்,அதுவும் உங்களிடமி ருந்து தப்பியும் பாதுகாப்பாகவுமாய்,கரணம் தப்பினால்மரணம் என்பது தானே எங்களது வாழ்க்கைக்கு விதிக்கபட்டிருக்கிற சாபமாயும் மெய்ப் பிக்கப்படாத வாக்காயும் ஆகித்தெரிகிறது இல்லையா,,,,?

இதோஇன்றுகாலைஎங்களது கூட்டிலிருந்து வெளியேறியஅத்தனை பேரில் எத்தனை பேர் திரும்பி உயிருடன் போய் சேருவோம் என்பது உறுதியில்லை _தானே,நீங்கள் நடக்கிற இடம், நீங்கள்புழகுங்குகிறவெளி,நீங்கள் உறை கொள்கிற வீடு இன்னும் இன்னுமாய் நீங்கள் குடிகொண்டிருக்கிற இடங்களி லும்அதற்கு இடையிலும் தானே எங்களது இருப்பும்,பயணமும் இல்லையா,,,?

“அப்படிருக்கிற போது எப்படி தப்பி உறை கொள்வது நாங்கள் ,நீங்கள் எடுத்து வைக்கிற காலடி ஒவ்வொன்றுக்கும்,நீங்கள் காறி உமிழ்கிற எச்சில்த் துளிகளு க்கும் தப்பித்,தப்பி தற்காத்து,தற்காத்து,,,,,,எங்கே நீங்கள் எடுத்து வைக்கிற ஒவ்வொருஎட்டுக்குள்ளும்மிதிபட்டுமரித்துப்போய்விடுவோமோ,அல்லதுநீங்கள் காறி உமிழும் எச்சிலில் நாங்கள் காணாமல் போய் விடுவோமோ என்கிற பயத்துடன் ஜாக்கிரதையுடனுமாய் பயணித்தும் வாழ்க்கையை கொண்டு சென்றுமாய் இருக்கிறோம்,

“இதில் நாளெல்லாம் உணவு தேடி அலைய விதிக்கப்பட்டிருக்கிற வாழ்க் கை வேறு,பயிர்கள் விளைந்த நிலமெ ல்லாம் இப்பொழுது கட்டாந் தரைகளாயும் கட்டங்களாயும் ஆகிப்போன பிறகு எங்களுக்கென உணவு தரவும் தேடி உறை கொள்ளவும் இடமில்லாமால் போனது,

“தன் மார்மீது விளைந்தவைகளை ஒரு தாயின் உயர் வாஞ்சையுடன் எங்க ளுக்குத்தந்துமகிழ்ந்தவிளைச்சல்கொண்டநிலங்கள்காணாமலும் களவாடப் பட்டுமாய் ஆகிப்போன பின்னாய்பஞ்சடைந்த கண்களுடனும் பசித்து ஒட்டிய வயிறுகளுடனுமாய் பரந்து விரிந்த நிலத்தின் வெளியெங்கும் ஊர்ந்து திரிந்து அலுத்துக்களைத்துஉணவெனஏதோதேடிக்கொண்டுவருகிறோம்,

நாங்கள் பரவாயில்லை, நிலங்களில் இல்லா விட்டால் கூட உங்களைப் போல் வீட்டுக்கார்கள் கழுவி ஊற்றுகிறவற்றிலிருந்து என்களுக்குத் தேவை யானதைஎடுத்துக்கொள்கிறோம்,

ஆனால்விளைச்சலற்ற வெற்று நிலங்களின் மேல் பறந்து திரிந்து தின்ன ஏதும் கிடைக்காமல் ஒட்டிய வயிறும் பஞ்சடைந்த கண்களுமாய் ஊருக்குள் பறந்து திரிந்து கரண்ட் கம்ப வயர்கள் மீதும், வீடுகளின் மொட்டைமாடி மீதுமாய் பறந்து திரிகிற அவலத்தை எந்த வரையறைக்குள்ளாய் அடைத்து விட முடியும் சொல்லுங்கள்.,,,,,?

ஒரு காலத்தில் இதோ நீங்களும் நானுமாய் நின்று பேசிக்கொண்டிருக்கி றோமே அந்த நிலம் நிறை கொண்ட விளைச்சல்க்காடாய் இருந்துக்கக் கூடும், அதிலிருந்து எங்களது மூதாதயர்களும் இதர பறவை இனங்களும் வயிறாறிக் கொண்டிருந்தன,

இப்பொழுது அவைகளை பறித்து தூர எறிந்து விட்டு அதை காணாமல் போய் விட்டுச்செய்துவிட்ட பின் நாங்கள் இப்படித்தான் உணவு தேடி பயணம் மேற் கொள்ள வேண்டியிருக்கிறது சோர்ந்து போன உடலுடனும் மனதுடனுமாய்/

“மனதும் உடலும் சோர்ந்து போனால் வாழ்க்கையே அஸ்தமித்துப்போய் விட்டது என அர்த்தமா என்ன,,,?ஏதோ கொஞ்சம் சோர்ந்து போனோம் அவ்வளவுதானே தவிர்த்து வேறொன்றுமில்லை என அறுதியிட்டுச்சொல்லிக் கொள்கிறேன்”எனச் சொன்ன எறும்பை ஏறிட்டவன் வாஸ்தவம்தான் மறுப் பதற்கில்லை. ஆனால் நீங்கள் இரை தேடச்செல்வதும்,இரைகளை கைக் கொண்டு எடுத்துச் செல்வதும் அதை சேமிப்பதும் நீங்கள் குழுவாய் ஒன்றி ணைந்தும் தோளோடு தோள் நின்றுமாய் செய்கிற வேலையாயிற்றே,பின் ஏன் விடுத்துதனியாகபோய்க்கொண்டிருக்கிறாய்,,,?எனக்கேட்டவனிடம்சுரத்தற்றுச் சொல்லிச் செல்கிறது எறும்பு,

“வேறொன்றுமில்லை,பெரிதாய்,வேகம் கொண்ட நாட்களின் நகர்வின் ஊடாய் என்னைப் பார்ப்பதையும் என்னிடம் பேசுவதையும் எனக்கு தூது அனுப்புவ -தையும் மறந்து போகிறாள் எனது அருமைக் காதலி,

நேற்றைக்கு முன் தினம்தான் பத்து பக்கத்துக்குக்குறையாமல் உயிரை உருக்கி கடிதம் ஒன்றை எழுதி அனுப்பினேன் அவளுக்கு,சென்ற வேகத் தில் கடிதத்தை கொண்டு சென்றவன் திரும்பக்கொண்டு வந்து விட்டான், ஏன் எனக்கேட்டபோது,,”அவளுக்கு தாங்கள் கடிதம் கொடுத்து விடுவது விடுத்து நேரில் வந்து பேசினால் நன்றாக இருக்கும் என்கிறாள்,ஆகவே நீங்கள் போய் நேரடியாகபேசுங்கள்”, என்கிறான் அவன்,

நான் நேரில் போய் பேசச்சென்றால் அதை நடக்க விடாமல் செய்வதற்காய் அங்கே கால் கடுக்கக் காத்திருக்கிற கூட்டம் தனியாய் தவமிருக்கிறது, அவர்களை தாண்டிப் போய் ஒன்றும் செய்து விட முடியவில்லை, சரி நடப்பது நடக்கட்டும் என அவளிடம் கொஞ்சம் கவனமாயிருக்கச் சொல்லி விட்டும், நமது காதலுக்கு தடைச்சுவாராய் எழும்பி நிற்பவர்கள் யாரும் நாளை நம்மை சேர்த்து வைக்கப்போவதில்லை கவனம் கொள் என எச்சரிக்கை செய்து விட்டுமாய் வந்தேன்,

அவளென்றால் எனக்கு உயிர், அவளென்றால் எனது உடலின் சரி பாதி, அவளென்றால் நான்,நானென்றால் அவள்.அது தவிர்த்து அவள் மீது எனக்கு ”சாலப்பிரேமம்”.

இது தெரியாமல் எப்பொழுதும் எங்கும் இயங்குற வில்லன்கூட்டம் போல அங்கும்இயங்கியவர்கள் குயுக்தியுடனும்,குறுக்குப் புத்தியடனுமாய் எங்களை பிரிக்க முனைகிறார்கள்,

நானும் சொல்லிப் பார்த்து விட்டேன் ,கெஞ்சிப்பார்த்து விட்டேன்,காலில் விழாக்குறையாய் முறையிட்டும் பார்த்துவிட்டேன்.

நான் முறையிடும் போது மட்டும் அவர்களது காது கேளாக்காதுகளாகிப் போகிறது, அல்லது காதுகளை கழட்டி வேறெங்காவது வைத்து விட்டு பூட்டி சாவியை தொலைத்தும் விடுகிறார்கள்.காதுகளை வைத்த இடத்தையும் சாவிகளை தொலைத்த திசையையும் கேட்டால் மறந்து போனது என மரத்துப்போய் சொல்கிறார்கள்,

எங்களுக்குள் பல்வேறு வகைகள் உண்டே தவிர இனங்களோ ,இனக் குழுக்க ளோ கிடையாது,எங்களுக்குள் வேறுபாடென்ற ஒன்று முளைத்ததில்லை, எட்டுக் கூடப்பார்த்ததில்லை இதுநாள் வரை,

உங்களைப் போல பாகுபாடு பர்ப்பது,இருப்பவன் இல்லாதவன் என்கிற தார தரமெல்லாம் இருந்ததில்லை எங்களுள்/பின் எப்படி வந்தது இந்தப் பிளவு,,,,? என்றெண்ணிய போது துப்பாய் வந்தது ஒரு செய்தி.

துப்பு சொல்வதற்கும் பற்றவைப்பதற்கும் ஆட்களா குறை இவ்வுலகில்/ உங்களில் அப்படியெல்லாம் நடக்கும் சரி,அது சர்வ சாதாரணம்,ஆனால் எங்களில் இப்படி ஒரு விஷவித்து எங்களுடனே இருந்து வாழ்ந்து உண்டு உறங்கி திரிந்து கொண்டிருந்திருந்திருக்கிறது,

உழைப்பின் முக்கியத்துவத்தில்,தேடலின் தெரிவில் அதை மறந்தோம். மறந்தால்தான்என்ன இப்பொழுது குறைந்து போனது.மறப்பது ஒரு பெரும் குற்றமா, அல்லது குறையா,,?இல்லையே எங்களுள் இருக்கும் மற்ற குணங் களைப் போல மறப்பதும் ஒன்றுதான்,அதற்காகப்போய் இல்லாத ஒன்றை இருந்ததாய் சித்தரித்தது எப்படி சரியாகும்,,,?

அவளை சரியான நேரத்தில் சரியாகக் கண்டு கொண்டு கூட்டத் தலைவனி டத்தில் கொண்டு போய் நிறுத்திய போது கூட்டத்தின் தலைவன் சொன்னது தான் மிகவும் ஆச்சரியமாய் இருந்தது அந்த நேரத்தில்,,,/

அவள் இவ்வாறு செய்யக்காரணம் அவள் உன்னை காதலிக்கிறாளாம்,நீ எங்கே அவள் பக்கம் சாய்ந்து விடுவாயோ என்றெண்ணியும்,அவளிடமிருந்து உன்னைப்பிரித்துதன்வயப்படுத்திக்கொள்ளவும்உன்னைப்பற்றியாய் உனது காதலி அறிவதை தடுத்திருக்கிறாள், நீயும் உனது காதலியுமாய் சந்திப்பதை எந்த வகையிலாவது தடுத்திருக்கிறாள்.உன் மீது அவள் கொண்ட ஆவல் உனது காதலியின் மீதும்,உனது காதலின் மீதுமாய் அவளை பொறாமை கொள்ளச்செய்திருக்கிறது சத்தியமாக, அதனால்தான் அப்படிச்செய்தேன் என மானசீகமாகவும் வெளிப் படையாகவும் ஒத்துக்கொண்டாள்.

பின்என்ன செய்யசொல்,எந்த இ.பி.கோ வில் அவளுக்கு தண்டனை வழங்கச் சொல்,நாங்கள் எல்லோரும் கூடி ஒன்று செய்கிறோம்,அது தலைவனான என்னால் மட்டும் தனித்துச்செய்யக்கூடிய காரியமில்லை,எல்லோரும் கை யும் மனதும் கலந்து கொடுத்தீர்களானால் நான் அறிவிக்கிறேன், உனக்கும் உனது காதலிக்கும் திருமணம் நடக்கும் உறுதியாக,அதை நமது குழு ஒரு சேர இங்கேயே நடத்தி வைக்கும்.என்ன அதற்கு சிறிது காலம் ஆகும் ,அது வரை நீ கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும்.நம்பிக்கையுடன் இருக்க வேண்டும், கடுகளவு பொறுமையும் ,மலையளவு நம்பிக்கையும் உன்னை உயர்த்தி கண்டிப்பாக வாழ்கையில் ஒன்று சேர வைக்கும்,எனதலைவன் அறிவித்த போது என்னுடனிருந்து எனக்கு துரோகம் இழைத்தவன் ஒப்புக் கொண்டாள்,

என்னதான் உடனிருந்த போதும் கூட்டத்தில் ஒருவளாய் நடமாடித் திரிந்த போதும் கூட அவள் என்னை விரோதியாகவே நினைத்தாள், விரோ தியாகவே பாவித்தாள்,என்னதான் அவள் என்மீது தூசனை அள்ளி வீசிய போதும் கூட எனது நட்பு வட்டம் என்னை சரியாகவே புரிந்து கொண்டது,

புரிதலின் வரைபடத்தை எடுத்துக்கொண்டு ஓடோடிப் போய் எனது காதலி -யிடம் போட்டுக்காட்ட நட்பு வட்டம் நெருங்கிய கணம் அவள் எனது காதலியிடம் என்னைப்பற்றியாய் வாரி வீசியிருந்த விஷ விதைகள் கொஞ்சமாய் அரும்பு காட்ட ஆரம்பித்திருந்ததாய்,,/

அரும்பிய விதைகள் வேறெதையும் விட வேகம் கொண்டு முளைக்கிற தாய்,,/

உண்மையை விடபொய்க்கு அதிகம் வலுதானே,,,? ஆழ ஊன்றப்பட்ட பொய் திரும்பத் திருப்ப பதியனிடப்படுகிற போது எனது காதலியும்தான் என்ன செய்வாள் பாவம்,,,? நம்பி விட்டாள்,நம்பி விட்டவள் என் மீது கோபமும் கொண்டு விட்டாள்.

இனி நீயின்றி நானுண்டு,ஆனால் நானின்றி நீயிருப்பாயோ என்னவோ,அது உனது சாமர்த்தியம் என முன்னறிவித்து விட்டாள்.எனக்கு துரோகித்தவளை முன் வைத்தே,,/

பொய்மைக்கு எவ்வளவு சக்தியிருக்கிறது என அன்றைக்குத்தான் புரிந்து கொண்டேன்.

ஆழகாலுன்றிய பொய்மையின் விதைகள் வீரியம் கொண்டு வேறெதையும் விட பன்மடங்கு வேகம் காட்டி வளர்ந்து புதர்க் காடாய் மண்டி கீறிச்செல்ல வழியில்லாமலுமாய் செய்து விடுகிறது.

இது தெரியாத எனது காதலி ஊரெல்லாம் புலம்பிக்கொண்டும் உன்மத்தம் கொண்டும் அலைகிறாள்,அவள் எந்த அளவிற்கு என் மீது பிரியம் வைத்தி ருந்தால் இந்தளவிற்கு புலம்பியிருப்பாள்,,,?என என்னை எண்ண வைத்த அன்று வேண்டாம் இது ஆகாது,வேண்டாம் இது அடுக்காது,நம்மின் நேசம் நம்மை பிரிவு கொள்வதற்கா நம்மை அறிமுகம் செய்து வைத்தது,,,,? வேண்டாம் அன்பே வந்து விடு என் திசைக்கு ,அம்புக்குறியிட்டு விடு என் பாதைக்கு,,,நீ காலால் சொல்வதை நான் தலையால் ஏற்கிறேன்,என எத்தனை சொன்ன போதும் ஏற்காத அவள் அங்கு அப்படியே,நான் இங்கு இப்படியே எனச்சொன்ன எறும்பை ஏறிட்டவன் அதுசொன்ன சுயபச்சாதாப வார்த்தைக ளை தாங்காதவனாய் எறும்பை உள்ளைங்கையில் அள்ளி ஊற விட்டுக் கொண்டு அதன் காதலியிடம் கொண்டு போய் சேர்க்கிறான் ,

ஜீ பூம்பா வித்தை ஏதும் செய்யாமல்/