சனி, 25 ஏப்ரல், 2020

வெட்ட வெளிப்பொட்டலிலே,,,,

அப்பொழுதுதான் கடையிலிருந்து வெளி வருகிறான்.

பாத்திரக்கடையது, செய்து வைத்த சிற்பமும்,செதுக்கி வைத்த ஓவியமும் ஒன்றாய் கைகோர்த்திருக்கிற வித்தை வெளீப்படும் கடையில்,,,,,/

வெளீயீடுகளும்,உள்ளிருப்புமான வாழ்க்கை பிடித்துப்போகிறதுதான்,

சமயங்களில் சொல்வாள் அவள்.அவளென்றால் இந்த நேரத்தில் வேறு யாராக இருந்து விட முடியும், மனைவி தவிர்த்து,,,,,?

”எட்ட இருந்து பார்த்து பரிமாறிய பார்வையும்,பரிவிசும் காதலர்களுக்கு மட்டுமே கைவரக்கூடியதா,எங்களுக்கு வராதா,,,?”ஏன் மனைவின்னா ஒரு படிக்கும் கீழயா,,,?எட்டி வைக்க வேண்டியவளா,,,? கீழ் படியில உக்காத்தி வைச்சி அதுக்கு மேல வரவிடாத படியா கிங்கரர்கள நிறுத்திவைச்சிகாக்க வேண்டியவளா,,,?நீளமான பல்லும், ஜடாமுடியும் முரட்டுத் தோற்றமுமா காமிச்சி பயமுறுத்தப்படவேண்டியவளா,,,,,?

”இச்சைக்கும்,இன்னதுக்குமாய்மட்டும்பயனாககடமைப்பட்டவளா,,,?கூட்டவும் தெளிக்கவும், கோலமிட்டு போர்த்திக்கிட்டு திரியவும் மட்டும்தானா,பொத்தி வச்ச மனசுக்குள்ள சின்னதாய் சுடர்விடுற விளக்கை கையிலேந்தி நேர் பாதையில நடந்து நேர்பாதையில போயி அதே கோடு தப்பாம வா,தப்புனா கற்பிக்கப்படுற களங்கத்துக்கு ஆளாகிருவ,,,,,,

”பொங்கிப்போட்டது நல்லாருக்கு.பொடவை கட்டுன நறுவிசுல நீ அழகு. உன் னைய மாதிரி நெத்திக்கு இட்டுக்குற இன்னொருத்தி பொறந்துதான் வரணுமா க்கும். நீ நடந்து வர்ற அழகுல இந்த ஊரு கோயில் தேரு தோத்துப் போகும்” ங்குற பேச்செல்லாம் கூட ஒருகட்டுக்குள்ள வைச்சிருக்குற சூட்சுமமில்லாம வேறென்ன,மனசும் மந்திரமும் சொல்லும் செயலும் எழுத்தும் ,பேச்சும் 
வசப்பட்டுத் திக்கிற மாதிரி வீட்டு மனுசாளையும் வசப்படுத்தி  வைச்சிருக்கீ ங்க,  அதுல கட்டுனவன்னா சக்கரைப்பாகு,,,/

இருபது வருஷம் அம்மா அப்பாவோடயும்,சொந்த பந்தத்தோடயும், பள்ளிக் கூட ஸ்நேகித்தோடயும் அக்கம் பக்கத்தோடயுமா வளந்து வேர் ஊனிப்போன பழக்கத்துலஇருந்து புடுங்கிக்கொண்டு வந்து புதுசா ஒண்ணு காமிச்சி இனிம இதுதான் ஓங் சொந்தம்,பந்தம் ,உறவு,,,இங்கதான் இனி நீ காலூனனும், வேர் விடணும்,இலை வச்சி,பூப்பூத்து காய்காய்ச்சி, கிளைபரப்பி அடர்த்து காட்டி விழுது விட்டு குஞ்சு குழுவான்கள தங்க வைச்சி கூடு கட்டிக்காட்டணும், ங்குற பேச்சுக்குப்பின்னாலதான் எங்க அடையாளம் இருத்தி வைக்கப்படுறதா தெரியுது, இதுல ஊனுற நெலத்தையும் மனசுல இருத்திக்க வேண்டியதிருக்கு.

“கேள்வி கேக்கவும் பதில் சொல்லவும் விவாதிக்கவுமா இருக்குற நாக்க நாலா மடிச்சி ரிவிட் அடிக்கணுமுன்னு தோணுதுல்ல.கட்டமைச்சி வைச்சிருக் குற எண்ணங்களை மீறி அது தாண்டி யோசிக்கிற மனசும் மூளையும் இருக்கக்கூடாதுங்குற நெனைப்பு எங்கள பிரேம் அடிச்சி உள்ளுக்குள்ள கட்டி வச்சிருதாம.

”சாப்புட்ட தட்டும்,குடிச்ச டீக்கிளாஸீம் வச்சது வச்ச யெடத்துலயே இருக்க அடுத்த வேளைய பாக்க நகர்ற கெட்டி தட்டுப்போன ஆம்பளத்தனம்.என்ன தான் படிப்பு,எழுத்து,மேடை,பேச்சின்னு,,,,,இருக்குற ஒங்ககிட்ட இருந்தும் படிதாண்ட மாட்டேங்குதுல்ல,,,,,

”கட்டுனவளுக்கு புவும் பொட்டு பொடவையும் மட்டும் குடுத்தா போதுமுங்குற நெனைப்பு மனசு பூராம் கொடி படர்ந்து நிக்கிறப்ப என்னோட உடல் நலன்ல இருந்து மத்தது மத்ததெல்லாம் பேச மறந்துர்றீங்க,

”தலைவலின்னா நெத்திய புடிச்சி விட ,ஒடம்பு சரியில்லைன்னா பக்கத்துல உக்காந்து நாலு பேசி ஆத்திவிட,பீரியட் டயத்துலநாப்கின் வாங்கீட்டு வரன்னு, ஒங்க கிட்ட ஆறுதல் தேடுறது பொய்யாப்போயி ஒங்களோட ஆம்பளைத் தனம் மீசை முறுக்கி நிக்கிதுதானே அது சமயத்துல.

கட்டுனவனே கதின்னு வந்துட்ட நாங்க வேற எங்க போயி என்ன பேசீற, மடக்கி அடிக்கப்படுற பந்து போல சொவத்துகுள்ளயே சுத்திச் சுத்தி வர்ற வாழ்க்கை வழமைதான எங்களது,/

கடையிலிருந்து இறங்கினான்,

வச்சதையும்,வாய்ச்சதையும் வச்சி சமாளிச்சி குடும்பம் நடத்த கத்துக்க என்கிறபரிந்துரை,,,,இல்லாதும் அல்லாதுமாய் அற்ற தினமொன்றின் நகர்வில் பொய்த்துப்போகிறது.

குக்கரும் மிக்ஸியும் மட்டுமில்லை சமையலறை,அதோட இணைஞ்சி ஒடுற நானும்தான்,வறுக்குறது,பொறிக்கிறது,தாளிக்கிறதுலஎன்னோடமனசும்கலந்து ருக்குதான,

அந்த கலத்தலுக்கு ருசி கூட்டணுமுன்னா சமையலுக்கான சாதனங்களும் கொஞ்சம் நல்லா இருக்கணும் என எழுந்த பேச்சின் கீழ் படர்ந்த மென் உணர் வாய் கிரைண்டர் எடுக்க வந்திருந்தார்கள்,

டேபிள் டாப் கிரண்டர்,ஆறாயிரத்து ஐநூறு விலை, பழையதை போட்டது போக நான்காயிரத்து ஐநூறு ரூபாய் என்றார்கள்,

கிரண்டைரை எடுத்துக்காட்டிய கடை வேலையாளுக்கு வலது கை கொஞ்சம் திருகியிருந்தது,

“அம்மா சொல்வா அடிக்கடி, ஜாக்ரதடா அடி,கிடி பட்டுறாம வெளையாடு” என/

”அம்மா சொன்னப்ப எனக்கு பதினைஞ்சி வயசு,ஒன்பதாவது படிக்கிறேன், வீட்லயிருந்து ரெண்டு கிலோ மீட்டர் தூரம் இருக்குற பள்ளிக்கூடத்துக்கு நடந்துதான் போவேன். பள்ளி வாசல் தெருவழியாத்தான் போவேன், அந்தத் தெருவில இருக்குற கூடப் படிக்கிற பசங்க எனக்கு நல்லா ஸ்நேகிதகாரங் களாயிட்டாங்க,

”அதுலஇப்ப தேர் முட்டிக்கிட்ட புரோட்டாக்கடை வச்சிருக்கானே,சலீமு அவன் தான் ஏங்கூட அடிக்கடி நொரண்டு இழுப்பான்,

எவ்வளவுக்கெவ்வளவு நொரண்டுக்குச் சொந்தக்காரனோ அவ்வளவுக்கவளவு உசிரா இருப்பான் ஏங் மேல/எனக்கு ஒன்னுன்னா அவனுக்கு அடிச்சிக்கிரும் மனசு.

”ஏண்டா நீயி மட்டும் பி,டி பீரியடுல நல்ல வெளையாடி நல்ல பேரு எடுத்துருவ வாத்தியாருகிட்ட,நாங்க மட்டும் என்ன அவத்தப்பையலுகளா, ஆளாளுக்கு ரெண்டு மூணுன்னு மட்டும் புல்லப்ஸ் எடுத்துட்டு முடியாம யெறங்கீட்டப்ப நீ மட்டும் மயிறு பத்துவரைக்கும் எடுத்தா எப்பிடி,,,?

அப்ப ஒனக்கும் நாங்க மட்டம்தான காட்டீட்ட,வாடா இப்ப தைரியமிருந்த ஒத்தைக்கு ஒத்தை நின்னு பாப்போம் வாடா என அவன் விடாமல் பேசிய சொல்லின் சூடு எட்டிப்பட்டுவிட சட்டென பாய்ந்து அவனை தரையில் வீழ்த்து கிறான்,

வெட்டுக்கால் கொடுத்து விட்டான்,அவன் கற்றுக்கொடுத்த டெக்னிக்தான், இவனது வகுப்பில் முன் டெஸ்க் மகேஷை கேலி பண்ணிய அடுத்த கிளாஸ்க்காரனை இண்டர்வெல் பீரியடில் அடிக்கப்போகும் போது சலீம்தான் வந்து அருகில் வந்து சொன்னான்,”டேய் வெட்டுக்கால் குடுத்து மடக்கிப்போடு” என,,,/

இவனுக்கு ஒன்ரென்றால் விட மாட்டான் அவன்,பள்ளிக்கூடத்தில் மட்டுமி ல்லை,அவன் தெருவை கடக்கிறது வரை அவன்தான் இவனுக்கு பாதுகாப்பு,

உடல் காத்து உயிர்வரை ஊடுருவுவான்.அவனின் மனது இவனிடமும் இவனின் மனது அவனிடமும் கட்டுகொண்டிருந்த ரம்மியப்பொழுதுகள்,அது கல்கோணா வாங்கினாலும்,சேமியா ஐஸ் வாங்கினாலும் பாதிகடித்து பகிர்ந்து கொள்கிற மனம் இருவரிலுமாய் உரை கொண்டிருந்த நேரம்.

எந்த அளவிற்கு உறை கொண்டிருந்தார்களோ அந்த அளவிற்கு நொரண்டும் இழுப்பான் சலீம் இவனிடம்,

சமயங்களில் சலித்துக்கொள்கிற அளவிற்காய் ஊடாடி விடுகிற நொரண்டில் இன்று கொஞ்சம் விரிசல் விட்டுப்போனதாய்,புல்லப்ஸ் அதற்கு காரணியாய்/

இரண்டுபேரும் கிரவுண்ட் முழுவதுமாய் அரை வட்டம் காட்டி உருண்டு வந்த போது இருவரிலுமாய் எறிப்போன மூர்க்கத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது போல் அப்பொழுதுதான் இவர்கள் முன் வந்து நின்றார் பி.டி வாத்தியார்/

”டேய் எந்திருங்கடா ரெண்டு பையலுகளும் என இரண்டு பேரின் தலை முடியை பிடித்துத் தூக்கியவர்,,,”என்னடா நெனைச்சிக்கிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும் என்றவராய் இருவரையும் பி.டி ரூமுக்குள் செல்கிறார்,

ஏண்டா என்னடா ஆச்சி ஒங்களுக்கு,,,,,?என்றவர் எப்பயும் ஒட்டிக்கிட்டும் ஒரசிக்கிட்டும் திரியிரவுங்கதான நீங்க,,,?

”டேய் இவனே இங்க பாரு இவனை அருகில் அழைத்து சலீம் இருக்கானே நீயி பத்து புல்லப்ஸ் எடுக்க னுங்குறதுக்காக அவன் நாலோட யெறங்கீருவான், அவன் ஒரே நேரத்துல நிக்காம இருபது புல்லப்ஸ் வரைக்கும் எடுக்கக் கூடிய வன்னு எனக்குத்தான் தெரியும்.என்றவர் நீ கெட்டிக்காரன்னு காமிக்க அவன தன் நிலையிலயிருந்து தாழ்த்திக்கிட்டவண்டா, அவனோடப்போயி கிறுக்கா,, போடா இனிம இது போல அடிச்சிக்கிறாதீங்கடா,,,

”என்ன சலீமு அவனோட உசுரு அரணா இருக்குற நீ கூட இப்பிடியா பண்ணு வ,,,?  என்றவர் பிளாஸ்கிலிருந்து டீ ஊற்றி கொடுத்தார் இருவருக்கும்,

”இன்னைக்கி சாய்ங்காலம் ஸ்கூல்விட்டுப்போகும் போது ரெண்டு பேரும் ஒண்ணா போகணும்,போங்கடா,,,,,,”என அன்று அவர் அனுப்பிய நாளில் இறை வன் ஆசீர்வாதத்தோட நல்லாயிருக்கணும் என்றார்,

சலீமை பார்க்கிற நாட்களில் அதே பதினைந்தின் பகிர்வு,

பையன்களுடன் கபடி விளையாடுகையில் கீழே விழுந்து கை ஒடிந்து வந்த நாளில் அம்மாவின் பேச்சை உதாசீனப்படுத்தி விட்டோமா எனத் தோனியது,

கையை சரியாகக்கட்டவில்லை நாட்டுவைத்தியத்தில்.எலும்பு முறிவிற்காய் எடுத்த வைத்தியம் சரியாகிப்போன பின் கை அப்படியே நின்று விட்டது, திருகிக்கொண்டு,

”அன்னைக்கி தட்டி விட்ட அம்மா சொல்லு இப்ப வெனையா வந்து நிக்குது என்றார்.இனிம ஒண்ணும் செய்யிறதுக்கு இல்ல,இத்தனை வயசுக்கு மேல போயி,,,அப்பிடியேவிட்டுட்டேன்,இருக்கட்டுமுன்னு,,,,பழகிப்போச்சி,ஒங்களப் போலஉள்ளவுங்க பேசும் போதுதான்ஞாபகத்துக்கு வருது,எனக்குகை ஒடிஞ்சி  போனது,

வாங்கிய கிரண்டரை அட்டைப்பெட்டிக்குள்ளாய் வைத்து பார்சல் பண்ணும் போது கூட நின்றான்.

ஊனம் என்கிற சொல் உருப்பட்டுத்தெரிவது உங்களைப் போன்றவர்களின் செய்கையால்தான்,மற்றபடி எங்களுக்கு பெரிதாக உறுத்துவதில்லை.

பெட்டியைக்கொண்டு வந்து இருசக்கர வாகனத்தின் கடையின் வாசலில் வைத்து விட்டு வண்டியை எடுத்துட்டு வாங்க,நான் வச்சி கயிறு கட்டி விடுறேன் எனச்சொன்னவரை கை அமர்த்தி விட்டு இல்லை பார்த்துக்கொள் கிறேன் நான் என்றவனாய் எடுத்து கொண்டு வந்தான் பணம் கட்டி விட்டு.

சித்திரையின் உக்கிரம் வெயிலாய் போர்த்தியிருந்தது சாலையை/

வெயில் பிடித்துப்போகிறதுதான் சமயங்களில்/
அத்துவான வெளியில் சோவென அடித்துப்பெய்கிற வெயில் உடல் முழுவ தையும் சடுதியில் நனைத்துச் சென்று விடுகிற முரட்டு உக்கிரம் பிடித்துப் போகிறதுதான் மனதிற்கு/

வெப்பப்பிரதேச மனிதர்களிடம் வேறைதை எதிர்பார்க்க,,,,,

பார்த்துப்பார்த்து பண்ணிப்பண்ணி வளர்த்த உடம்பு,இன்ன நாளில் சைவம் ,இன்ன நாளில் அசைவம்,இன்ன நாளில் சேர்க்கை இன்ன நாளில் விலக்கம் என்கிற கட்டுடலில் இருந்தவர், நீங்க யோகாவெல்லாம் பண்ணுவீங்களா மே,,,,? அப்ப பஸ்கி தண்டாலெல்லாம் எடுப்பீங்களா,,,,?மனைவி கேட்ட போது எல்லாந்தான் செஞ்சேன்,அப்ப பிராயம் அது,அதுக்காக மெனக்கெட்ட மனசு, அதுக்காக மெனக்கெட்ட ஒடம்பு,அதுக்காக இருந்த பிடிவாதம்,,எல்லாம் வாய்ச்சிச்சி, கூடவே கட்டி வைச்சிருந்த கட்டுப்பாடு கொஞ்சம்,தண்ணி வெந்நி, பீடி சிகரெட்,எல்லாம் தள்ளியே,,,,,,டீகூட அளவோடுதான்,

இப்ப அதெல்லாம் இல்லைன்னு ஆகிப்போச்சி.தூக்கம் முழிக்கிற மறு நாள் யோகாவுக்கு பகைன்றாங்க.என்னைக்கி கல்யாணம் கட்டுனேனோ ,அன்னை க்கே தூக்கத்த கட்டி எட்ட வைச்சாச்சி.காதோரமா முடிய தொங்க விட்டுட்டு அதத் தளையத்தளைய சுழிகொண்டு ஓட விட்டா மனசு திக்கிப் போகுதுதா னே,,,?

”திக்குற மனசுக்கு திக்கேது ,திசையேது,வரப்பேது வாய்க்கா ஏது,திக்கட்டும், திக்கெட்டுமாய்,,,,” என அடைவு கொண்டு ஓடிவந்தான்,

அதுவும் கட்டுனவனுக்கு கூடுதலா கொஞ்சம் திக்கும்தானே,,,?என்றவனின் காதருகில் சென்ற பொழுது”ம் சும்மாயிருங்க,தலைக்கு மேல வளந்த புள்ளை ங்க வீட்டுக்குள்ள நிக்கிது. என்றவளை ஏறிட்டவன்……எத்தனை வீடுகள்ல ”தலைக்கு மேல”தடுத்து நிக்குதுன்னு தெரியலையே,,,,,,/

கண்ணைஎரித்தது வெயில்/ வைத்த கண்வாங்காமல் பார்த்துத் திரிய சாலை யோர காட்சிகளும் நிறைந்து தெரிகிற பிம்பங்களும் கொண்ட நகர்வின் அடர் த்தி நன்றாகவே/

தோத்துப்போற மனசு என்னது,ஜெயிச்சி நிக்கிற மனசு உங்களது,ஒட்டி ஒப்பிவிச்சி உறவாடி சிலாகிக்கிற சமயங்கள்ல தோத்துப்போயி நிக்கிறது நீங்களாவும் தெரியிறீங்கதானே,,,?

இரு சக்கரவாகனம் கடை நடையிலிருந்து வெகுதூரம் விலகி நின்றது,

விலகி நிற்பதும் அருகாமையாய் அணைப்பதும் சமயம் பொறுத்துத்தானா,,,,,? எட்ட நிறுத்தி,தள்ளி வைத்து, புண்படுத்தி புறக்கணித்து,,,,,எல்லாமையும் சேர் த்துக் கூட்டி என்னில் ஏற்றி வைக்கிற சூட்சுமம் உங்களிலும் சேர்ந்திருக்கிறது தானே,,,?

நேர்எதிர் வரிசையில் இரு சக்கர வாகனம் நின்றது. ஒரு பிரிண்ட்டிங் பிரஸ் முன்னால், அந்த வரிசைக்கடைகளின் முன் எல்லாவற்றிலும் ”வாகனங்களை நிறுத்தாதீர்கள்” என எழுதிய தொங்கிய அட்டை அந்த பிரஸ் முன் மட்டும் இல்லை.

வண்டியை எடுக்கும் போது பிரஸ் முதலாளியிட கேட்கிறான்.

“சார் உதவி செய்யிறவன் உபகாரியும் இல்ல,செய்யாதவன் கஞ்சப்பிசுனா ரியும் இல்லை, என்னைய உதவி செய்யிறவனா வச்சிருக்குற சமூகம் அவன செய்யாதன்னு சொல்லுது,அவ்வளவுதான் என்றவரை வியந்து நோக்கியவன் வண்டியின் இருக்கை மீது கொஞ்சம் தண்ணீரை ஊற்றி துடைத்து விட்டு நகர்கிற விநாடியில் எதிரே திருநங்கைகள் சிலர் பாட்டுப்பாடி கடையாய் காசு வாங்கிக்கொண்டு வந்து கொண்டிருந்தார்கள்,

வியாழன், 16 ஏப்ரல், 2020

ராம்குமார்,

இத்தனை ஆண்டுகள் ஆகியும் என்னில் உறைகொண்ட பெயராயும், நபராயும் அவர் இருக்கிறார்.


உளிகொண்டு செதுக்காது வரை கொண்ட உயிர் ஓவியமாய் என்னில்! இத்தனை ஆண்டுகள் கழித்தும் நான் நினைக்கிற பொழுதுகளில் என் மனதை இம்சிக்கிறவராகிப்போகிறார்.வானில்வந்துபோகிற எரி நட்சத்தி ரம் போல் சட்டென வந்து மறைந்துபோன அவர் ராம்குமார். அவர் இப் பொழுது நம்மில் இல்லை.ஆனால் அவர்பற்றிப்பேச,எழுத விஷயமிருக்கி றது நண்பர்களே….!


அது ஆகிப்போனது வருடங்கள் இருபத்தைந்திற்கும் மேலாக! வயிற்றுக்கு அரசுப் பணி மனதிற்கு,,,,,,?என்ன……?என்கிறகேள்வி என்னிலும் என்னைப்

போன்றே பலரிலும் உரைகொண்டிருந்த நேரம் அது.

நேரங்கள்,நொடிகளாய்,நிமிடங்களாய், மணிகளாய் முன்நகர்வுகொண்ட பொழுதொன்றின் புலர்தலில் அகில இந்திய எழுத்தறிவு இயக்க கலைப் பயணித்திற்கு நீவித்திடப்பட்டிருக்கிறாய் என 90 களின்பிற்பகுதியில் அசரீரி யாய் அல்லாமல் நிஜம் சுமந்து ஒருஅழைப்பு. அந்த அழைப்பில் கை கோர்த்தவர்களாய் நான் செல்வம்,நாராயணன்,அழகு,ஆறுமுகப்பெருமாள் ,முத்துச்சாமி,இந்திரஜித், மதனகோபால், உமாசங்கர் மற்றும் வெங்கடே ஸ் வரி மேடம்,பிரேமா மேடம்,பூங்கோதை மேடம்,விஜிலா மேடம் ஆகி யோர் கை கோர்த்தோம். உடன் அன்பின் உருவான ராம்குமாரும்/

திருச்சுழியில் ட்ரெயினிங்நாடகக்குழுவிற்கு.பத்துநாட்களோ,ஒருவாரமோ என்கிறதாய்ஞாபகம்.ஏற்கனவே பாண்டிச்சேரிஅறிவொளி இயக்ககலைக் குழுவில் பங்கேற்று பணியாற்றிய உலைக்களமாக்கல் எங்களுக்கு சிறிது போதுமானதாய்இருந்தது. பின் ஒரு வார காலத்தின் பட்டை தீட்டலில் மெரு கேறி நாற்பத்தைந்து நாட்கள் இம்மாவட்டம் முழுவதும் கல்வியின் அவசியம் குறித்த நாடகங்களைபகலில் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளிலும்,மாலை கிராமங்களிலுமாய் நடத்தி வந்தோம்.பதினைந்துபேர் வரை கொண்ட ஒரே குழு.

அது பயணித்தநாட்கள்.,பயணத்தினூடேசுமைகொண்ட எண்ணங்கள், எண்ண ங்களைச் சுமந்து உறை கொண்ட இடங்கள் சாப்பாடு தங்குமிடம் தூக்கம் என இன்னும் இன்னுமாய் நகர்வுகொண்ட மென் மனங்களில் நடத்திய நாடக ங்கள். பேசியவசனங்கள் சென்று வந்த இடங்கள் பார்த்துப் பேசிய மனிதர்கள் என அனைவரையும் பற்றி நாங்கள் பேசிய நேரத்திலும், உரையாடிய பொழுது களிலும் என் மனதிற்கு மிகவும் நெருக்கமாகிப் போனவராய் ஆகிப்போகிறார் ராம்குமார் என்கிற ராம்குமார்.

மெலிந்து ஒடுங்கிய தேகம். யாரோ மிகமிக அவசரமாய் ஓடிவந்து இதற்கு மேல் உன் உடம்பில் சதை போட்டால் நன்றாக இருக்காது எனச்சொல்லி விட்டுச்சென்றது போல் பாரிய உடம்பு.ஒட்டிப்போய் குழி விழுந்த கன்னம்,ஒடுங்கி உள்ளடங்கிய கண்கள். ஏறியநெற்றி.,தலையில் நட்டு வைத் தது போலாய் அலசலாய் இருந்த முடிகள்.அளவிற்கு மேல் இருந்தால் வலிக்கும் உடலுக்கு என்பதாலோ என்னவோ மிகச்சொற்பமாய் எலும்புக ளையும் அதை மூட சதையையும் கொண்டவராய் தெரிந்தார். அதனாலெ ன்ன எலும்பும்சதையும் மட்டுமல்லவே உடல். உள்ளமும் உயிரும் மேலோங்கிய உணர்வுகளின் கலவையும்தானே உயிர்,,,,,, இல்லையா? என ராம்குமாரிடம் உரிமையுடன் கேட்கும் நாட்களில் அவரைஒருமையில் பேசி அழைக்கிற நெருக்கம் பெற்றிருந்தேன்.அந்த நெருக்கத்தினூடான நாட்களில் வழக்கம் போல ஒரு நல்ல மாலையில் நாடகங்கள் நடத்திவிட்டு கிளம்பலாம் எனநினைத்த வேளை கனிந்து நின்றிருந்த வானம் யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் அவிழ்ந்து கொள்கிறது.

பின் என் செய்ய. மழை பெய்த ஒரு மணி நேரமும் ஒருஅரசுஉயர்நிலைப் பள்ளியின் தாழ்வாரத்தில் நிற்கிறோம். பெய்து கொண்டிருந்த மழையின் அடம் குறைந்து பூவானம் தூவி நின்ற நேரம்.பள்ளியின் தாழ்வாரத்தில் நாங் கள் அனைவரும் நின்று கொண்டிருக்க எங்களின் பின்னே யாருக்கும் தெரியாமல் தூசி படர்ந்தசிமெண்ட் தரையில் கையது கொண்டு மெய்யது போர்த்தி அமர்ந்திருந்தான்.மேலில் போர்த்தப்பட்டிருந்ததுண்டு அவன் உடல் நடுக்கத்தை கூட்டிக்காட்டியது.புரிந்து போகிறது எனக்கு. வழக்கம் போல் அவருக்கு உடல்நிலைசரியில்லை என்பதை டீம் கேப்டன் செல்வம்

அவர்களிடம் கூறிவிட்டு எங்களை ஏற்றிச்செல்ல வரும் வேனுக்காய் காத்தி ருந்தோம்.

நாங்கள் நின்ற பள்ளிக்கும் வேன் நிற்கிற இடத்திற்கும் ஊடாய் வாறுகால் தோண்டப்பட்டுக்கிடக்கிறது.ஆகவே நீங்கள்அனைவரும் வாறுகால் கடந் து வந்து விடுங்கள் வேன் நிற்கிற இடத்திற்கு என்றொரு சமிக்சை வருகிறது. சரி கடந்து விடலாம்.

தினந்தோறுமாய் கல்வி கற்க பிள்ளைகள் கடந்துவருகிற வாய்க்காலை கல்வியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு நாடகங்கள் நடத்துகிற நாம் கடக்கமுடியாதாஎன்ன?என்கிறமன மேவியில் ராம்குமாரைப் பார்க்கிறேன்.

நீங்கள் இருக்கையில் எனக்கென்ன மனக்கவலை என்கிறவனாய் என்னைப் பார்க்கிறவன் கையூன்றியும் என்கை பிடித்துமாய் எழுகிறான். தோண்டிப் போடப்பட்டிருந்த வாய்க்கால்வரை என் தோள் பிடித்து வந்தவன் வாய்க் கால் பள்ளத்தை நோக்கியதும் மலைக்கிறான்.

என்ன செய்வது இப்பொழுது என நின்ற சமயம் அதோ அங்கே கொஞ்சம் மேடாய் தெரிகிறது வாய்க்கால் அங்கே சென்று ஏறிக் கொள்ளலாம் என

மேடேறிய ஓடைப்பகுதியில் இறங்கினால் இதற்கு அதுவே தேவலை என்றாகிப் போகிறது என்ன செய்ய பின்னே? சற்றும் யோசிக்காமல் நான் ராம் குமாரை எனது முதுகில் உப்பு மூட்டை ஏறச்சொல்லி கறையிறக்கி விடுகிறேன்.எங்களது நாடகக்குழுவினூடாய் ஒரு பழக்கம் இருந்தது.

நாடகம் நடத்திவிட்டு இரவு எந்நேரம் வந்தாலும் ரவுண்டாய் அமர்ந்து அன்றைய நாடகங்கள். நடத்திய இடங்கள் அதன் குறை நிறை எல்லாம்

கலந்து பேசுவோம் .அப்படிப் பேசுகையில் எனதருகில் அமர்திருந்த ராம் குமார் அண்ணா உங்கள் மடியில் படுத்துக்கொள்ளட்டுமா சிறிது நேரம் எனக் கேட்கிறான்.

மடியில் என்னடா தம்பி. என் மனதிலேயே உனக்கு மெத்தையிட்டு வைத்திருக்கிறேன். இப்போதைக்கு எனது மடியில் படுத்துக்கொள்ளடா என் தம்பி என்கிறேன்.

அவன் அன்று படுத்த மடி இன்றும் கனக்கிறதாகவே,/

இத்தனைக்கும் அகில இந்திய எழுத்தறிவு விழிப்புணர்வு கலைக்குழுவிற்கு செல்லும் வரை நான் அவனைப்பார்த்ததில்லை,அவன் முகம் எனக்கு பரிச்சயம் இல்லை, அவன் கறுப்பா சிவப்பா தெரியாது,அவன் யாரெனக் கூட அறிந்ததில்லை.
பின் எப்படி அவன் பற்றிய கழிவிரக்கம்,அதுவும் இத்தனை வருடங்கள் கழித்து./

தன் வாழ்தலில் சாதனை என இனி ஏதும் இல்லை.தனக்கு வாழ்நாள் என இனி இருப்பது அபூர்வமே,உடல் கொண்ட நோய் உதிரம் குடித்து உயிரை போக வைப்பது உறுதி ,ஆகவே நாம் மறையப்போகும் முன்னாவது இப்பூ உலகிற்கும் அதில் குடிகொண்ட மனிதர்களுக்குமாய் எதாவது செய்து விட்டுப் போக வேண்டும் என்கிற அவனது நினைப்பு அவனை அகில இந்திய எழுத்தறிவு இயக்க பிரச்சார கலைப்பயணத்தில் பங்கேற்கச் செய்கி றது, தான் நடித்துக் கொண்டிருக்கும் போதும்,தன் மறைவிற்குப்பின்னாலும் தான் நடித்த கல்வி குறித்த விழிப்புணர்வு பேசப்படவேண்டும் என நினைத்த அந்த எளிய மனதினன் என்னில் உயர்ந்து நிற்கிறான், ஆண்டுகள் இத்தனை ஆகியும்,,,,./ 

என்னிலும் இயக்கத்திற்கான அர்ப்பணிப்பிலும் உயர்ந்து நின்ற ராம்குமாரின் நினைவைப் போற்றுவோம்.

ஞாயிறு, 12 ஏப்ரல், 2020

பிரயாணக்காத்து,,

     ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து பயணிப்பது மிகவும் பிடித்தமானது என்பது எவ்வளவு தூரத்திற்கு பொய்யில்லையோ அவ்வளவு தூரத்திற்கு உண்மை.

பிழைப்பதற்காய் விதிக்கப்பட்டிருக்கிற எத்தனையோ வேலைகளில் இவன் செய்து கொண்டிருந்த அரசு பணி நிமித்தமாக முப்பதும் முப்பதும் அறுபது கிலோ மீட்டர் தூரம் தினமும் பயணப்படுகிறான்.

மனதிற்கான பணிகள் தினந்தோறுமாய் பிணைகொண்டு காத்திருந்த போதும் வயிற்றுக்கானதே இங்கு முதன்மையானதாயும் ஜெயிக்கக்கூடியதாயும்/

அதற்கிணங்கியவனாயும்,தலை வணங்கியவனாயும் அன்றாடங்களின் அத்து வானங்களில் தன்னை கரைத்துக்கொள்கிறவனாய்/

சீவலூர் தாண்டி விட்டான்.இன்னும் பதினைந்து கிலோ மீட்டர் பயணித்து விட்டால்இவன் வேலை செய்கிற ஊரை அடைந்து விடலாம்,இவன் பேருந்து ஏறியதிலிருந்து நான்காவது ஊர்.நீண்டு விரைந்து செல்கிற சாலையின் இரு மருங்கிலுமாய் முளைத்துக்காணப்பட்ட கிராமங்கள் தன்னிறைவு காட்டியும் தன் தனித்த அடையாளம் சுமந்துமாய்…/

பேருந்து நிற்கிற அத்தனை கிராங்களைப்போலவே அவ்வூரிலும் ஆட்கள் எறினார்கள்.மற்ற ஊர்களைபோல் இரண்டு பேர் இறங்கினால் நான்கு பேர் ஏறாமல் இரண்டு பேர் இறங்கினால் இரண்டு பேர் அல்லது ஒருவர் மட்டுமே ஏறிய ஊராக இருந்தது.

அதில்அவளும்கைக்குழந்தையுடன்ஏறினாள்.பேருந்து முழுவதுமாய் பார்வை யை ஓட விட்ட அவள் இவனருகில் வந்து அமர்ந்து கொள்கிறாள்.

ஐயாமன்னிச்சிக்கங்க,பஸ்ஸீல முழுக்க தேடிப்பாத்தேன்,யெடம்கெடைக்கல, அதான் அவரசரத்துல வந்து ஒங்க பக்கத்துல ஒக்காந்துட்டேன்,

கௌவர் மெண்ட் ஆஸ்பத்திரிக்கு போயிட்டு வந்துக்கிட்டிருக்கேன் கொழந் தைக்கி காமிக்கிறதுக்காக.

ரெண்டு நாளா வயிறுசரியில்லாம கொஞ்சம் தண்ணியாபோகுது,இன்னைக்கி காலையிலயோடசேந்து எப்பிடியும் ஆறு ஏழு தடவைக்கு மேலயாவது போயி ருப்பான்,

அப்பப்ப வாந்தி வேற,அதான் காமிச்சிட்டு ஊசி போட்டுட்டு மாத்திரை வாங் கீட்டுப் போகலாம்முன்னு வந்தேன்,

எங்க ஊர்லயிருந்து இங்க வந்து யெறங்கி ரெண்டும்,ரெண்டும் நாலு கிலோ மீட்டர் தூரம் நடந்து போயி வரணும்,

ஆத்திரம்,,,,போயிட்டு வந்துட்டேன்,பெத்த புள்ள இப்பிடிக்கெடக்க பாத்துட்டு சும்மா இருக்க முடியுமா,,?காலையில வேற சாப்புடல,பசிக்கெறக்கம் ஒரு பக்கம் அதான் கேக்காமக்கூடவந்து உக்காந்துட்டேன்,மன்னிக்கணும். திரும்ப வுமாய் சொன்ன அவளை ஏறிட்ட போது இவளது இரண்டாவது மகளின் வய திற்கும் குறைவாகவே தெரிந்தாள்.

சற்று ஒல்லியான தேகம், அணிந்திருந்த சிவப்புக்கலர்டாப்ஸீம், வெளிர்க் காக்கி யில் பேண்ட்டும் அவளது மாநிறத்திற்கு எடுப்பாய் தெரிந்தது. துப்ப ட்டாவை பின் பக்கமாய் முடிச்சுப்போட்டு வைத்திருந்தாள்,அதுவும் பேண்ட் டின்  நிறத்தி லேயே,,,./

பேருந்தின் வேகத்தில் கண்ணை அசத்திகொண்டு வந்தது, தூக்கத்தை மட்டுப் படுத்தி கொண்டு குழைந்தையை வாங்கி தன் மடியில் வைத்துகொண்டான்,

”சார் வேண்டாம்,ஆஸ்பத்திரியிலயே ஒரு தடவை ஆயி போயிட்டான், நல்ல வேளை அங்க இருந்த கொழாயில தண்ணி வந்துச்சி ,கழுவி விட்டுட்டேன், இப்ப ஒங்க மடியில போயிட்டான்னா என்ன பண்ணுறது சொல்லுங்க, அதான் யார்கிட்டயும் கொழந்தைய குடுக்குறது இல்லை,நீங்களாவது பரவாயில்ல சார் கொழந்தைய கேட்டு வாங்க ஆசைப்படுறீங்க,,,ஆனா எங்க வீட்டுக்குப் பக்கத்துல சொந்தக்கார புள்ளைங்க கூட வாங்காதுங்க,கேட்டா ஒண்ணுக்கு கிண்ணுக்கு இருந்துட்டா,,,அப்பிடின்றாளுங்க,சரிதான்னு நானும் அதுலயில யிருந்து  கொஞ்சம் வெலகியே நின்னுகிறது,இப்ப ஒங்களப்போல இருக்குறவு ங்க புள்ளைங்கள கேக்கும் போது சந்தோஷமா இருக்கு,,,”என்றவளை ஏற இறங்கப் பார்த்தவன்,,,,

”கேக்குறேன்னு தப்பா நெனைச்சுக்கிறாதப்பா,ஏங் ரெண்டாவது பொண்ணு வயசுதான் இருப்ப போலயிருக்கு,நீயி.அவ இப்பத்தான் காலேஜீ ரெண்டாவது வருஷம் முடிக்கப்போறா, ஆனா நீ இந்த வயசுல கல்யாணம் முடிச்சி கையில ஒரு கொழந்தையோட இருக்க,,,,,”என்றவுடன் சிறிது விக்கித்த அவள் ”எனக்கு கல்யாணம் முடியும் போது கரெட்க்டா பத்தொம்பது வயசு சார், அம்மா இல்லாத வீடு,அப்பாதான் பாத்தாங்க,அம்மாவுக்கு அம்மாவா,அப்பாவுகு அப்பாவா நின்னு,நல்ல வேளை எங்க அத்தை உள்ளூர்லயே இருந்ததுனால எங்க அப்பாவுக்கு எங்கள வளக்குறதுல கொஞ்சம் செரமம் இல்லாம இருந்து ச்சி, ஆனாலும் என்னையும் ஏன் அண்ணனையும் வளக்க எங்கப்பா பட்ட செரமம் ஒரு அத்தியாயமுன்னு சொல்லலாம்.

நாங்க சின்னப்புள்ளைங்களா இருக்குறது வரைக்கும் ஏனோதானோன்னு என்னத்தையோ சமையல் பண்ண சாப்புட பள்ளிக்கூடம் போகண்ணு இருந் தோம்,

எங்க அத்தையும் அப்பப்ப கூட மாட ஒத்தாசைக்கு வந்து போவாங்களே தவிர்த்து அவுங்க இங்கயே நிரந்தரமா இருந்து எங்களுக்கு ஒதவ முடியாத நெலமை,

அதுக்க்காகஅவுங்கள குத்தம் சொல்றதும் தப்பு,பாவம்அவுங்களும் அன்னாடம் கூலிக்குப் போனாத்தான் அவுங்க வீட்ல அடுப்பெரியும்,

இந்த நெலைமையிலதான் நான் வயசுக்கு வர்றேன்,அப்பத்தான் எங்கப்பாவு க்கு கஷ்டம் தெரிஞ்சிச்சி, எங்க அத்தைதான் எங்கம்மா யெடத்துல நின்னு எல்லாம் செஞ்சாங்க,

அன்னைக்கி ரவைக்கி எங்கப்பா அழுத அழுகைக்கு அளவில்ல,அத்தைதான் செருப்புட்டு நாலு அடி போட்ட மாதிரிசுடு சொல்லு சொல்லி ஆத்துப் படுத்தி ச்சி அவர,,,,,,/

“ஓங் பொண்டாட்டி இருக்குற வரைக்கும் வீடு தங்கல நீ,குடி கூத்தியான்னு அலைஞ்ச, பாவம் ஒன்னைய நெனைச்சி மருகியே மகராசி போயிசேந்துட்டா, இப்ப மருகி அழுகுற, என்ன பிரயோஜனம் சொல்லு,நான் வேணா ஓங் மகளுக்கு கல்யாணம் முடிக்கிற வரைக்கும் ஏங் மகளா வச்சிப் பாத்துக்கிறன ப்பா,நீ பையன ஒழுங்கா காப்பாத்தி கரை சேரப்பாருன்னு” அன்னைக்கி அவ சொன்ன சொல்லு இன்னைக்கி வரைக்கும் நிக்குது,நா கல்யாணம் பண்ணி வந்துட்டேன்,அப்பாவுக்கு பொழப்பகுடுத்த அதே மில்லு இப்ப அண்ணனுக்கு சாப்பாடு போடுது, அடுத்த ஊர்லயே என்னைக் கட்டிக்குடுத்தாங்க, எங்க வீட்டுக் காரருசொந்தம்தான் எனக்கு ,எங்க அண்ணன் வேல பாக்குற மில்லுல தான் வேலை பாக்குறாரு,என்க்கண்ணனுக்கு மில்லு மேனேஜரு நல்ல பழக்கம்,அதவச்சிதான்சேத்துவிட்டாரு,,,,,மேனேஜருக்குஅண்ணனைபிடிக்கும், நல்ல வேலைக்காரனை எல்லாருக்கும் பிடிகிறதப்போல அவருக்கும்  அண்ண னைப் பிடிச்சிருந்துச்சி,,/

இந்தா ஒரு புள்ளையாயிப்போச்சி, இன்னும் ஒன்னு பெத்துக்கலாமுன்னு இருக்கேன் வசதியையும் ,மனசையும்,ஒடம்பையும் பொறுத்து,,,,,,,பாப்போம் என இறங்கிப்போகிறாள் அவளது ஊர் வந்ததும்,,,,/

                                                                    பாகம் 2

”சார் வாங்க,உக்காந்துட்டீங்களா,,,”என கண்டக்டர் கேட்ட நேரமும் இவன் பயணச்சீட்டிற்காய் பணம் நீட்டிய பொழுதும் ஒன்றாகவே ஆகித் தெரிகிறது.

இயல்பாகவே பேச்சில் சிறிது குழைவும்,நடத்தையில் சிறிது அன்பையும் திரட்டி வைத்திருப்பவர்.

அப்படியான நபர்களிடம் இவன் பெரும் மதிப்பும் மரியாதையும் வைத்திருப் பான் இவன்.

ஆனால் அதை பயன் படுத்தி கொஞ்சம் யெசக்கேடாக நடந்து கொள்ள முற் படுகிறவர்களை சமயங்களில் ரத்தம் வர பிராண்டி வைத்தும் விடுவார் கண்டக்டர்.

சாது மிரண்டால் காடு கொள்ளாதுதான்,பேருந்து முதலாளியிடம் அடிக்கடி மிரள்கிற சாதுவாய் உங்களது கண்டக்டர் இருக்கிறார் என அவர் பற்றி சிலர் சொன்னபோதும் கூட அவர் அதை ஒன்றும் பெரிதாய் எடுத்துக் கொள்ளவில் லை,

”இருக்கட்டும்,இருக்கட்டும் இப்பிடி மிரள்கிற சாது ஒண்ணு நமக்கும் வேணும், இல்லைன்னா அந்தப்பக்கம் நம்ம மோட்டார் ஓட்ட முடியாது, சிரிக்கிற நேரத்துல சிரிப்பு,வெளையாடுற நேரத்துல வெளையாட்டு,மத்த நேரத்துல மத்ததுன்னு,,,,இருக்கணும்,அப்பத்தான் சரியா இருக்கும்”என்பார் பேருந்தின் ஓனர்.

சென்ற வாரத்தின் ஒரு நாளில் மாலை நேர டிரிப் வந்து கொண்டிருக்கும் போது வழக்கம் போல் எல்லோரிடமும் சிரித்துகொண்டே டிக்கெட் போட்டுக் கொண்டு வந்தவர் முப்பதைந்து வயதுள்ள அவனிடமும் டிக்கெட் கேட்க அவன் காது கேட்காதவன் போல இருந்திருக்கிறான்,கொஞ்சம் நிதானமற்றும் தெரிந்திருக்கிறான், அவன் தோளைத் தொட்டு திருப்பியவர் டிக்கெட் எடு என்றிருக்கிறார் சிரித்துக்கொண்டே/

அதற்கு அவன் ”போடா இளிச்சவாயி,,,,,,,,,ன்னு யெசக்கேடா வைஞ்சிட்டான்,

கண்டக்டரும் சொல்லி சொல்லிப்பாத்துருக்காரு,அவனும் நிப்பாட்டுற மாதிரித் தெரியல,ஓங்கி அடிச்சிட்டாரு,கையோட விசிலடிச்சி பஸ்ஸ நிறுத்தி அவன பொடதியப்புடிச்சி யெறக்கி விட்டுருக்காரு,

மறுநா அந்த ரூட்டுல போன பஸ்ஸ அவன யெறக்கிவிட்ட அதே யெடத்து லயே மடக்கி பஸ்ஸீக்குள்ள நாலைஞ்சி பேரு ஏறி கண்டக்டரோட சட்டையப் புடிச்சி மல்லுக்கட்டீருக்காங்க,அதுல ஒருத்தன்கத்திய காமிக்கவும்,இவரு முறுக்கீட்டு நிக்கவும், அதுக்குள்ள பஸ்ஸ நிறுத்தீட்டு ஓடிவந்த டிரைவர் அவுங்கள சமாதானப்படுக்கிட்டிருக்க கண்டக்டரும் இடுப்புல வச்சிருந்த கத்தியை எடுத்துக்காட்டவும் ஓடிப்போயிட்டாங்க எல்லாரும், கண்டக்டரும் விடாம கொஞ்ச தூரம் வெரட்டிக்கிட்டுப்போயிருக்காரு.

பஸ்ஸீல கொஞ்ச பேரு கூட கண்டக்டர சத்தம் போட்டுருக்காங்க,அவுங்க சில்லறைப்பசங்க,அவுங்களுக்கு அதுதான் வேலை,ஒங்க வேலை அதுல்ல, மோட்டார்ல போறது ,எங்களக்கொண்டு போயி பத்தரமா சேக்குறதுன்னு சொ ன்னவுங்கள நோக்கி சிரிச்சிக்கிட்டே வாஸ்தவம்தான் அதுக்காக இப்பிடியே விட்டமுன்னு வையிங்க,நம்ம தலையில ஏறி ஒண்ணுக்கடிக்க ஆரம்பிச்சி ருவாங்க,அதுக்காகத்தான்இப்பிடி/ மத்தபடி எனக்கு இப்பிடி பண்ணணுமுன்னு ஒரு ஆசை கெடையாதுன்னு சொல்லீருக்காரு,அப்பிடிச்சொல்லவும் அப்பிடி பஸ்ஸ ஓட்டவும் எங்களுக்கு ஒரு ஆளு வேண்டியதிருக்கு என அன்று சொன்ன பேருந்தின் முதலாளி இன்றும் கண்டக்டர் மீது நன் மதிப்பு வைத்தி ருப்பராய் இருக்கிறார்,

எப்பொழுதும் போல் வணக்கம் சொல்லி விட்டு டிக்கெட்டுக்கான பணத்தைக் கொடுக்கிறான்,இவ்னைப் பார்த்ததும் உற்சாகமாகி விடுகிற கண்டக்டர் அன்பையும் கலந்து புன்னைகையாய் வீசி விட்டு டிக்கெட்டை கிழித்துத் தருகி றார்,

பணத்தைவாங்கி விரலிடிக்கினுள் மடித்துச்சொருகியவராக மிஷினில் டிக்கெட் அடித்துக் கொடுக்கிறார்,

வழக்கத்தை விட உற்சாகம் இழந்து காணப்பட்டவராய் தெரிந்தார், கேட்டிருக் கலாம்,என என்னவென/

கேட்க நினைக்கிற பலவிஷயங்கள் திட்டமிடப்பாடா ஏதாவது மறுகுதலின் காரணமாய் தட்டியும் மறந்தும், மறகடிக்கப்பட்டுமாய்/

காரணம் இதுவென சரியாகத்தெரியாவிட்டாலும் கூட இதுதான் என யூகித்து விட முடிகிறது ஓரளவிற்கேனுமாய்,,,

சாப்பிடவில்லை,தலை வலிக்கிறது,உடல் நிலை சரியில்லை,,, என்கிறது போலான எதனுள்ளும் அடக்கிக் கொள்ளமாட்டார் தன்சோர்வை/ மேற்கண்ட உபாதைகளால் அவர் துன்பப்பட்ட போதிலும் கூட,,,/

அது அவரது சுபாவமா இல்லை, அல்லது அவராய் விரும்பி ஏற்றுக் கொண்ட தா, தெரியவில்லை,

போன மாதத்தின் நிறை திங்களன்று காலை வேளையாய் பஸ்ஸில் டிக்கெட் போட்டு வந்து கொண்டிருந்தவர் இவனருகில் வந்ததும் புன்னகைத்தவாறே டிக்கெட் கேட்டவர் சொல்லி வைத்தாற் போல் மயங்கிவிட்டார்,

புன்னைகை வாயிலிருக்க,டிக்கெட் மிஷின் கையிலிருக்க,பணப்பை தோளிலி ருக்க,,,,,அப்படியே சரிந்தவரை கைதாங்கிப்பிடித்துபக்கத்து இருக்கைக்காரரின் துணையுடன் அமர வைத்து தண்ணீர் தெளித்ததும் எந்திரித்தமர்ந்தவர் சிறிது தண்ணீர் குடித்து விட்டு அதே வேகத்தில் டிக்கெட்ப் போட கிளம்பி விட்டார்,

டிக்கெட்ப்போட்டு விட்டு வந்ததும் காலையில் சாப்பிடவில்லை அதுதான் கொஞ்சம் அசத்தி விட்டது என்றார்,

”நல்லா ஆனா சாப்புட ஒரு அஞ்சி நிமிஷம் ஆகுமா,அதுக்குப்போயி சோம்பல் பட்டுக்கிட்டு இப்பிடி கொலை பட்டினியா கெடக்குறீங்களே சார்” என்றவனைப் பார்த்துச் சிரித்தவர் ”அது அப்பிடியில்ல சார்,,,,சாப்புடுறதுக்கு நேரம் தவிர்த்து மனசும் ஒரு காரணம் சார்,

”அது போக பழக்கமும் இதுல முக்கிய பங்கு வகிக்கிது,காலையில வீட்ல குடிச்சிற டீக்களோட எண்ணிக்கை மொத நா ராத்திரி முழிச்சிக்கிட்டு இருக் குறது எல்லாம் இதுல முக்கிய காட்டுது” என்றார்.

ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து பயணிப்பது இவனுக்கு மிகவும் பிடித்த தாகவே/

கொஞ்சமாய் பெயிண்ட் உதிர்ந்து அங்கங்கே திட்டுத்திட்டாய் காணப்படுகிற கம்பிகள் எப்பொழுதும் இவன் கவனம் ஈர்க்கத் தவறியதில்லை,கொஞ்சம் அழுக்கு ,கொஞ்சம் தூசி,கொஞ்சம் வர்ணம்,,,,இதுதான் பேருந்துகளில் உள்ள ஜன்னல் கம்பிகளின் தனித்துவ அடையாளம் போலும்,

அடையாளம் இருந்துவிட்டுப்போகட்டும் ஒருபக்கம்.ஆனால் அதனை உட்கிர கித்து பயணிக்கிற மனோ நிலை என்னிலும்,உன்னிலும் நம் எல்லோரிலு மாய் காணக்கிடைப்பது பெரும் பாக்கியம் என்பான் நண்பன்,

பயணங்களும் பயண வாய்ப்பும் வாய்க்கப்பெற்றவர்கள் நட்புகளும் தோழமை களும் உறவுகளும் அக்கம் பக்கத்தினருமாய்தான் இவனில் பூத்துக்கிடக்கிறார் கள் /

கண்டக்டர் அணிந்திருந்த காக்கிச்சட்டையின் இடது ஓர கீழ்ப்பகுதியில் ஒற்றை நூல் பிரிந்து தொங்கியது,

தொங்கிய நூலின் கீழ்ப்பகுதி அவர் டிக்கெட்க்கொடுக்கையில் இவன் மீது உரசிச்செல்வதாக,,,/

டிக்கெட்க் கொடுத்துவிட்டு நகன்ற கண்டக்டரை தோள் தொட்டு நிறுத்தி சார் சட்டையில நூல் தொங்குது எனச்சுற்றிக்காட்டினான்.

”அது அவ்வளவுதான் சார் தூக்கிப்போட்டுட்டு வேற வாங்க வேண்டியதுதான், எக்ஸ்பெயரிடேட் முடிஞ்சி போச்சி இனி அதைப்போயி வைச்சிக்கிட்டு,,,,” என அவர் சொல்லி முடிக்கும் முன்னாய் அவரது அனுமதியுடன் நூலைப் பிடித்து இழுத்து அறுத்து விட்டான்,இழுத்த வேகத்தில் வந்த நூல் கொஞ்சம் சட்டை யின் கீழ்ப்பகுதியை பிரித்து விட்டு விட்டது,

சட்டையைப்பார்த்த கண்டக்டர் பிரிந்து தொங்கிய சட்டையின் பிரிவை ஊக்கு கொண்டு மாட்டிக்கொண்டு”சார் இப்பத்தான் திருப்தியா இருக்கு,இப்பிடி ஏதாவது ஒண்ணு ஆனாத்தான் சட்டையை தூக்கிப்போட மனசு வருது, இல்லைன்னா வருதுல்ல,அப்பிடியே போட்டு சமாளிச்சி ஓட்டிறலாமுன்னு தோணுது”

ஆர்.எஸ்.நகர் பாலத்து ஓரமாய் இருக்கிற பேருந்து நிலையத்தில்தான் இவன் பஸ் ஏறினான்.

எட்டு நாற்பதிற்கு பஸ்,இவன் வந்து சேர்ந்து விட்ட எட்டு முப்பதை கடக்க இன்னும் பத்து நிமிடம், கஷ்டம் கொண்டு பிடித்துத்தள்ள வேண்டும்.

ஸ்கூட்டியில் கொண்டு வந்து இறக்கிவிட்டுப்போன சின்ன மகளிடம் இதை சொன்ன போது ”டேக் இட் ஈஸிப்பா,,,,உங்களுக்குத்தான் இருக்கவே இருக்கே, டீக்கடை அதுல பொழுத தள்ளீரலாம்ல,,,,” என்றாள்.

அவள் சொல்லிலும் அனுமானத்திலும் தப்பில்லை,டீ,டீ,டீ,,,, டீக்குடிக்க ஒரு டீ,  அதன் முன் ஒரு டீ,அதன் பின் ஒரு டீ,,,,என்கிற ரகத்தில் ஓடிக் கொண்டிரு ப்பவன்.

அதற்கு அவசியமில்லை அது சுலபமே,பேருந்து நிறுத்தத்தின் அருகில் உள்ள கடையில் டீயும்,வடையும் சாப்பிட்டால் கடந்து போய்விடும் பத்து நிமிடங் கள்.

ஊதாக்கலர் இருக்கைகள் ,வலது பக்கம் வரிசை சீட்டுகள் போல் இடது பக்கமுமாய் இரண்டு வாசல்களுக்கும் சம இடைவெளி விட்டு ஒன்றன் பின் ஒன்றாய் அடுக்கப்பட்டிருந்த சீட்டுகள் கொஞ்சம் அழகு காட்டியும் அதன் நிறம் காட்டியும்,கூடவே கொஞ்சம் கவனிக்கத் தவறியுமாய்,,/

பூப்பின்வாய்ப்பும்,புஷ்பித்தலின் சந்தர்ப்பங்களுமாய் கைகோர்க்கிற வேளை வாய்க்கப் பெறுகிற பயணங்கள் ஜன்னலோர இருக்கை கொண்டதாய் இருந் தால் நன்றாக இருக்கும் எனத்தோணுகிறது.

பேருந்து முழுவதுமாய் பரவிப்பாவி இழையோடிய மெல்லிய இசை மனம் கொண்டதாய் இருக்கிறது,அதிலும் இளையராஜா அவர்களின் இசை என்றால் தனி இடம் உண்டு மனதில்/

அதிலும் இடது பக்க இருக்கையில் அமர்ந்து கேட்பதில் சந்தோஷமாகிப் போகிறது தான் மனம்.

அப்படி என்னதான் இருக்கு யெடது பக்கத்துல,மொதல்ல வாங்க இந்தப் பக்கமா என வலது காட்டி மனைவி சொன்னபோதும் கூட அதை ஏற்காத மனதினாய் சமாதானம் செய்துகொண்டு நின்றிருந்த கணங்கள் இவனில் நிறைய நிறையவே,,,,/

பெயிண்ட் உதிர்ந்த ஜன்னல் கம்பிகள் மூன்று அல்லது இரண்டில் ஏதாவது ஒன்றில் மடக்கிய அரைக்கையை உன்றி வெளி நீட்டியவாறு சில்லென்ற காற்றுக்கு தன் வழி சொல்லி சுகித்துப் பயணிக்கிற மனோ நிலை வாய்க்கப் பெறுகிற கணம் இவனுக்குள் ரம்மியமாகவே/

காதலைச்சொல்ல ஓரிடம் ,காமத்தைச்சொல்ல வேறோரிடம்,சுகம் சொல்ல ஒரு இடம், துக்கம் சொல்ல வேறோரிடம்,நலம் சொல்ல ஒரு இடம் மகிழ்ச்சியை சொல்ல வேறோரிடம்,அழுக ஒரு இடம் சிரிக்க ஒரு இடம்,,,என இன்னும் இன்னுமானதாய் இல்லாமல் அனைத்தும் கலந்து கட்டிய கலவை யாய் தந்து விட்டுச்செல்கிற மகானுபவம் அவரது பாடல்களை கேட்கிற சமயங்களில் தவிர்க்க இயலாமல் ஏற்பட்டுப்போவதுண்டு.

பேருந்தின் முன்னாக வழி காட்டி விட்டு சடுதியில் அதன் அடியில் சென்று மறைந்து கொள்கிற தார்ச்சாலை இவர்களை நக்ர்த்திக் கூட்டிசெல்கிற முன்னத்தி ஏறாய்,,,/

சாலையில் இரு மருங்கிலுமாய் நட்டு வைத்தும் தானாய் முளைத்துமாய் பச்சை போர்த்திக்காணப்படுகிற மரங்களும் செடி கொடிகளும் மழை காலத் தின் தளர்ச்சியை விட இப்பொழுதுதான் உண்மை காட்டி உரைந்திருப்பதாய் படுகிறது.

ஆளுயரபள்ளமாய் இருந்த சாலையோரத்தின் ஓடைகளும்,பள்ளங்களும் அது காத்து நின்ற தண்ணீரும், காணாமல் போய் அதன் இடத்தில் உயர்ந்து நிற்கிற செடிகளும் மரங்களும் அடர்ந்து நிற்கிற செடிகளும் மேடுபாவிப்போன ஓடை களை தன் வசபடுத்தி வைத்திருப்பதாக,,,/

வசம் கொண்டவைகளும், வசப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டவைகளும் மன மேற்பில் நடப்பவைகள்தானே,,,?

அந்த நேரம் மனம் பிடித்தவளின் தூரத்துப் பேச்சு வசபட்டுப் போகிறது, அவளின் மென் சிரிப்பு அச்சப்பட வைக்காதிருக்கிறது, அதிர்வற்ற அழுந்தாத கரம் பற்றுதல் ஆறுதல் தருகிறது, அருகிலில்லாத அவளது அருகாமை மனம் பிடித்ததாய் ஆகித்தெரிகிறது.

கொஞ்சம் சிரிப்பு ,கொஞ்ச பேச்சு ,கொஞ்சம் பகிர்வு,கொஞ்சம் ஆற்றாமை,, என இன்னும் இன்னுமாய் ஓடி ஓடி தேடி எடுத்த சேகரங்களின் தொகுப் பணைத்தையுமாய் நூலில் கோர்த்து சேர்த்தணைத்து மனம் அசை போடுகிற இடமாயும்,செல் போனில் ஏதாவது மிச்சம் மீதியாய் இருக்கிற வேலை யாருடனான பேச்சு என ஏதாவது நிறுத்தி வைக்கப்பட்டதை முடிக்கிற இடமா யும் பேருந்தின் இருக்கை அமைந்து போவது கொஞ்சம் ஆறுதலாகவே/

அதிலும் பின் பக்க வாசலோர இருக்கை கிடைத்து விட்டால் ஓடிக் கொண் டிருக்கிற பேருந்தை ஒரு கணம் நிறுத்தி வெடி போட்டு கொண்டாடி விட்டு பிறகு ஏறிக்கொளிகிறவனாகிறான்/

ஞாயிறு, 5 ஏப்ரல், 2020

விழுதாகி,,,,,

படர்ந்து கிடக்கிறது சாலை வெளி,கேட்பாரற்ற அழுகுழந்தையின் இருப்பு போல.

அதன் மெல்லிய மேனி முழுவதுமாய் படர்ந்து கிடக்கிறது புழுதி. அள்ளி எடுத்து கை கொண்ட விரல்களின் இடை வெளி வழியாய் ஒழுகித்தீர்க்கிற தண்ணீர் போல/ நகர்வு கொண்ட புழுதியின் மீது நட்டு வைத்த விழிகள் இரண்டு ஊர்ந்து செல்கிற வேளையாய் கண்ணில் படுகிறாள் அவள்,

அழுந்த படிந்து வாரியிருந்த தலை முடியின் எண்ணெய் மின்னலும், நெற்றிக் கிட்டிருந்த குங்குமமும் அதன் மீது தீற்றலாய் இழுத்திருந்த திருநீறுகீற்றும் பார்க்க அழகாயிருந்தது,

தலையில் எண்ணெய்தான் கொஞ்சம் கூடுதலாய் தடவியிருந்தாள். அது ஒன்றும் பெரிதாய் கண்ணை உறுத்திவிடவில்லை,

திருநீறுக்கீற்றை இன்னும் கொஞ்சம்மேலேற்றிஇழுத்திருக்கலாம்,ஆனாலும் ஒன்றும்பெரிய பிழை தாங்கி இல்லை.,கையில் கொஞ்சம் திருநீறுஇருந்தால் அவள் அருகில் சென்று திருத்தி விட்டு வரலாம்,

பப்ளிக்,பப்ளிக்,,,,,,,என உசார்ப்படுத்திய மனதை கட்டுக்குள் வைத்துக்கொண்டு நகர்கிறான்,

கட்டியிருந்த புடவைக்கு மேட்சாக கட்டியிருந்த புடவைக்கு மேட்சாக மேட் சாக அணிந்திருந்த ஜாக்கெட் நெற்றி வகிடுக்கு இழுத்திருந்த குங்குமத்தை ஞாபகப்படுத்தியதாய்,,,,/

வெங்காயம் விற்கிற வண்டியின் இடது பக்கமாய் அமர்ந்திருந்தாள் அவள். அமர்ந்திருந்த இடம் வேப்பமர நிழல் தாங்கியதாய்,,,/

அவள் அமர்ந்திருந்த பிளாஸ்டிக் சேரில் விழுந்த மரத்தின் நிழல் அவளது இடதுபக்க புடவையின் ஒரமாய் மர இலைகளை காட்சிப்படுத்தியதாய்,,,/

பட்ட நிழலின் படர்வும் பார்வையின் தெளிவும் அவளது வயதைச் சொல்லிச் செல்கிறதாய்/

அது காலூன்றி நிற்கிற மண்ணும் மண் காத்து நிற்கிற மனிதர்களும் முக்கிய உருவெடுத்துக்காட்சிப்படுகிரவர்களாய் அங்கு/

மென்மை காத்து அள்ளி வீசிய சிரிப்புடனாய் வெங்காயம் விற்ற அவளிடம் கிலோவிற்கு விலை விசாரிக்கிறான்.

சிரிப்பு அவனுக்குள்ளாய் முளைத்தெழுந்த திடீர் பூகம்பமா,அல்லது மெட்ட விழ்ந்து மென்மை காத்து இளமலரா தெரியவில்லை.

”எப்பிடிண்ணே இப்பிடியெல்லாம் இருக்கீங்க,,”எதுக்கெடுத்தாலும் சிரிச்சீறீங்க ளே,,,?” என இவன் வழக்கமாய் செல்கிற டீக்கடைக்காரர் கேட்டபொழுது ”அது அப்பிடித்தான்.தானா வருது, அது தவிர்த்து சிரிப்பு ஒரு அரு மருந்து,அது நம்ம கிட்ட பஞ்சமில்லாம குவிஞ்சி கெடக்கு,அத எடுத்து பயன்படுத்துற நேரத்த்ல பயன் படுத்தாம விட்டுட்டு இப்ப மருந்துக்கும் மாத்திரைக்கும் டாக்டருக்குமா போயி நிக்கிறோம்” என்பான்,

வெங்காயம் விற்றவளிடம் சிரித்து நின்ற பொழுது இது ஞாபகம் வர,,,விலை கேட்டுவிட்டு ஏறிட்ட இவனிடம் இப்பயெல்லாம் இப்படி சிரிச்சிப் பேசுறவ ங்கள பாக்குறது அபூர்வமாப்போச்சி சார் என்றாள் கடைகாரி,

அவளது பேச்சில் பட்டுப்படர்ந்திருந்த இயல்பு இவனை ஈர்த்ததாய்,,/

’எங்கசார் கடைக்கு வர்ற ஆணும் சரி,பொண்ணும் சரி,ஏதோ சண்டைக்காரங்க மாதிரிதான் வருவாங்க,சில பேரு ஒரு அடி தள்ளி நின்னுக்கிட்டு வெங்காயம் வேணுமுண்ணுவாங்க,இன்னும் சில பேரு பக்கத்துல வந்து இடிச்சு தள்ளுறத் போல நின்னுக்கிட்டு மூஞ்சிக்கு நேரா பைய நீட்டுவாங்க,இன்னும் சில பேரு ன்னா அதிகாரமா கேப்பாங்க,நாம ஏதோ அடிமை மாதிரியும் அவுங்க ஏதோ நமக்கு எஜமானர் மாதிரியுமா பாவிச்சிட்டுக்கேப்பாங்க,இப்பிடி வர்றவுங்களை யெல்லாம் இழுத்துப்புடிச்சி வச்சிதான் யேவாரம் பண்ணி ஆக வேண்டிய திருக்கு,

“எப்பயாவது அத்தி பூத்த மாதிரி வர்ற ஒங்கள மாதிரி ஆள்களுக்கு யேவாரம் பண்ணும் போது சந்தோஷமா இருக்கு,நீங்க தள்ளி நின்னு ஒதுங்குறதும் இல்ல,மேல விழுந்து புடுங்குற ஆளும் இல்ல. எனக் கூறுபவளை ஏறிடும் போது இனம் புரியா ஒட்டுதல் ஒன்று பட்டென தோன்று மறைவதாய்,,,/

இவன் வெங்காயம் வாங்குவதற்கு முன்னாய் மரத்தடியில் பையை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தவளைப்பார்த்து அந்தம்மா எனக்கு முன்னாடியே வந்துட்டாங்க போலருக்கே, அந்தம்மாவுக்குப் போட்டுட்டு எனக்குப் போட வேண்டியதுதான,என்றவனை ஏறிட்டவள்,,,,,,,

இப்ப என்ன சார் அந்தம்மாவுக்கு,அவுங்க வாட்டுக்கு ஒக்காந்துருக்காங்க, காசா,பணமா,தங்கமா,வைரமா,,,?இதுல ஒரு செலவுமில்லாம ஒக்காந்துருக் குற மகராசி அவுங்க,அவுங்களுக்கு என்ன கொறை,,,?கண்ணு நெறைஞ்ச கணவரு, நெஞ்சு நெறைஞ்ச புள்ளைங்க,

புள்ளைங்கண்ணா புள்ளைங்க,அப்பிடி ஒரு புள்ளைங்க,அது போல புள்ளைங்க கெடைக்க குடுத்து வச்சிருக்கணும்.

”புள்ளைங்க ரெண்டும்காலேஜுலபடிக்கிறாங்க,வீட்டுக்காரரு கௌவர்மெண்டு ஆஸ்பத்திரியில வேலை பாக்குறாரு,குடியிருக்க சொந்த வீடு ,எங்கனயின் னாலும் போயி வர காரு,எல்லாம் இருந்தும் கூட அவுங்க பழக்கமே என்னையப் போல இல்லாதவுங்க கூடத்தான்.இந்தக்காலத்துல இப்பிடி ஒரு ஆளான்னு ஆச்சரியமான ஆச்சரியம் எனக்கு,

“அது கூடப்பரவாயில்ல,சரின்னு ஏத்துகலாமுன்னு வையிங்களேன்,ஆனா பிடிவாதம் தளராம இப்பிடியே நகண்டு நகண்டு இங்க வந்துற்ராங்க என்னையப் பாக்கணுமுன்னு,அப்பிடி ஒண்ணும் நெனைச்ச ஒடனே ஓடி வந்து ற்ரதுக்கு அவுங்க வீடு ஒண்ணும் பக்கத்துல இல்ல,இங்கயிருந்து ரெண்டு கிலோ மீட்டர் தூரமாவது இருக்கும், அங்கயிருந்து ஒரு ஜீவன் மெனக்கெட்டு என்னையப்பாக்க வருதுன்னா ஏதோ ஒன்னத்தேடி வர்றாங்கன்னு அர்த்தம், அந்த மனோ நிலைதா அந்தம்மாவ இதுநாள் வரைக்கும் நல்லா வச்சிருக்கு. அந்த நல்ல மனசுக்காகவாவது அந்தம்மா நீண்ட ஆயுளோட நல்லாயிருக் கணும்.

”சிலபேரு அந்தம்மாவப் பத்தி ஏங் காது பட பேசிட்டுப்போவாங்க ,”இது போல ஒரு அப்பாவிய நாங்க இதுவரைக்கும் பாத்ததில்லன்னு,”

”அத அந்தம்மாட்டச்சொன்னமுன்னா,இரு ஏன் பூசி மொழுகிச்சொல்லுற, அவுங்க அப்பிடியெல்லாம் பேசீருக்க மாட்டாங்க,”இந்த மாதிரி ஒரு இளிச்ச வாய்ச்சிய பாத்துருக்க மாட்டேன்னு” சொல்லீருப்பாங்க,,, அப்பிடித்தான்னு,,” அந்தம்மா சொன்னப்ப எனக்கு கொஞ்சம் சங்கடமாக்கூடப் போயிருச்சி,

அப்புறம்தான் அந்தம்மா சொன்னாங்க,”அவுங்க நெனைக்கிற மாதிரி நான் இளிச்சவாய்ச்சியும்இல்ல,அப்பிடி சொல்லுறவுங்கபெரிய கெட்டிக்காரங்களும் இல்ல, அப்பிடி நான் இளிச்ச வாய்ச்சியா இருக்குறது னால எனக்கு எந்த வித நஷ்டமும் இல்ல,ஆனா கெட்டிக்காரத்தனமுன்னு நெனைச்சிக்கிட்டு அவுங்க பண்ணுற வேலைகளால,நடந்துக்குற நடத்தைகளால அவுங்களுக்குத்தான் கெட்ட பேரே தவிர்த்து எனக்கு ஒண்ணும் பெரிய நஷ்டமுல்ல,,,,எனச்சொன்ன அவளது பேச்சை பதிவு செய்த வெங்காயக்காரம்மாவை ஏறிட்டபோது,,,,,, அந்தம்மா இப்ப வெங்காயம் வாங்கத்தான் வந்துருக்காங்க,வாங்கியும் வச்சிட் டாங்க, அந்தம்மா பக்கத்துல இருக்கு பாருங்க கட்டைப்பையி அதுதான்,,,, ,என்ற கடைக்காரி,,,,,,,

”அது அப்பிடியில்ல தம்பி,,,,அந்தம்மா அவசரமா வீட்டுக்குப்போயி செய்யிற அளவுக்கு ஒண்ணும் பெரிசா வேலையில்லை.சாய்ங்காலம் மூணு மணிக்கு மேலதான் புள்ளைங்க காலேஜீல இருந்து வரும்.அதுவரைக்கும் இங்க இருந்துக்கிட்டு ரெண்டு கதை பேசீட்டு போவாங்க,

“அவுங்க வேறென்ன பேசீறப் போறா ங்க பாவம்.புருஷன் புள்ளைங்க,வீடு,,,,,, இதுதான்அவுங்க பேச்சா இருக்கும் தம்பி,அதென்னவோ தெரியல ,பொண்ணா ஜென்மம்எடுத்த நாளையிலயிருந்து இப்படித்தான் இருக்கணுமுன்னு விதிக்கப் பட்டுருக்கு போல,,,/

“ஆம்பளைங்களப் போல நாலு யெடத்துல ஒக்காந்து பேச,சிரிக்க டீக்குடிக்க,,, இப்பிடி இப்பிடியா எதுவும் கெடையாது தம்பி.இப்பதக்கி இப்ப கொஞ்சம் பரவாயில்ல நெலம, பொண்ணுங்க தனியாபோக,கடைகள்ல ஒக்கார,ரெண்டு டீ,காப்பி சாப்புடன்னு முடியுது, அதுவும் கொஞ்சம் பெரிய டவுன்கள்ல மட்டுந்தான் அப்பிடிப்பாக்க முடியிது,அந்தப்பழக்கம் இது போலான ஊர்ளுக்கு நகண்டு வர எத்தன நாட்கள்ஆகுமுன்னு தெரியல,போங்க,அது போல இல்லா ததுனாலதான் இது போல ஆட்கள் தேடி அலைய வேண்டி இருக்கு, பேச உறவாட, இன்னும் இன்னுமான லேசான பழக்க வழக்கங்களுக்கெல்லாம்,,,/ சொல்லப்போனா அதுவும் கூட ஒரு வகையில நல்லதுதான்.மனித மொகம் பாத்து பேசிப்பழகுறதுக்கும், வெறுமனே கடையில போயி ஒக்காந்துக்கிட்டு கடை அலங்காரத்த பாத்துக் கிட்டு டீ காப்பி ஸ்நான்க்ஸ்ன்னு சாப்புட்டு வர்றதுல என்ன சந்தோஷம் இருந்துற முடியும் சொல்லுங்க,

”அந்தம்மாவும் வந்ததுல இருந்து யேவாரம் இல்லாத நேரம் பாத்து பேச்சா பேசுவாங்க,நானும் அவுங்க பேசுற பேச்சயெல்லாம் கேக்குற மாதிரி காட்டிக்கி ருவேன். எனக்கும் பொழுது நகரணுமுல்ல,அங்க என்ன வெங்காயம் வாங்க கியூவுலயா நிக்கிறாங்க,,,,?,

“அதுவும் அந்தம்மாவுக்குத்தெரியும்தான்.அவுங்க வீட்டுல இருந்து மெனக் கெட்டு இங்க என்னைய தேடி வராட்டி அங்க தெருவுல அக்கம் பக்கத்துல பேசலாமுல்லன்னு சொன்னா பேசலாம்,பழகலாம்,அதுல ஒண்ணும் மாற்றம் இல்ல,ஆனாஅவுங்ளெல்லாம் ஒன்னைய மாதிரி இல்லைன்றாங்க, ஒருத்தரப் போலவே இன்னொருத்தர் இருக்கணுமுன்னா எங்க போறது நாம சொல்லு ங்க,

”அது வேற ஒண்ணும் இல்ல தம்பி,இந்தம்மா இல்லாத வீட்டுப்பொண்ணாத் தான் இங்க வாக்கப்பட்டு வந்தாங்க,கஞ்சிக்கே கஷ்டப்பட்ட வீட்டு ஆள்க, விவசாயக்குடும்பம்,வருஷமெல்லாம்கரட்டுக்காட்லயும்,ஒழவுக்கட்டிகளுக்கு மத்தியிலயும் மல்லுக்கட்டுன குடும்பம்,ஏதோ அந்தம்மா செஞ்ச புண்ணியம், இந்த வீட்டுக்கு வாக்கப்பட்டு வந்துட்டாங்க,வீட்டுக்காரரு சொந்தமாம்,பொண் ண மட்டும் குடுங்கன்னு அந்தம்மாவ கூப்புட்டுக்கிட்டு வந்துருக்காரு,

”ஆனா அவுங்க குடியிருக்குற தெரு ஏதோ குபேரபுரிக்கு பக்கத்துல இருக்கு றதா அந்த தெருவாசிகளே நெனைச்சி வாழ்ந்துக்கிட்டு இருக்குற தெரு, பணத்த பையிலயும் கௌரவத்த மனசுலயுமா வச்சிக்கிட்டு அலையுற கூட்டம். பக்கத்துல இவுங்கள அண்டக்கூட விடல. இவுங்களுக்கு அது தெரிஞ் சாலும் கூட வெளிப்படையா காட்டிக்கிறாம சரி நம்ம தெருக்காரங்கதானே அவுங்க,நம்மளேஅனுசரிக்காட்டிவேற யாரு அனுசரிப்பா,,,,ங்குற நெனைப்புல எல்லார் கூடயும் அனுசரிப்பா பழகீருக்காங்க,ஹீம் ஒண்ணும் ஆகல,

”சுத்தி இருக்குற வீட்டுக்காரங்க எடுத்துட்டு வர்ற நகைக,சேலை, துணிமணி கன்னு அவுங்க பகட்டயும் ஜபர்தஸ்தையும் காண்பிக்க மட்டும் வருவாங்க ளாம்,

”ஒரு கல்யாணம் காச்சி,நல்லது பொல்லதுன்னா இந்தம்மாவ பக்கத்துல சேத்துக்க கூட மாட்டாங்களாம்,

”இந்தம்மாவும் பொறுத்துப் பொறுத்துப் பாத்திருக்காங்க, கழுத போகுதுங்க, இவுங்க பக்கத்துல சேத்துக்காட்டி இப்ப என்ன நட்டமா போச்சி,நம்ம வீட்டுல என்ன ஒலையா கொதிக்க மாட்டேங்குதுன்னு நெனைச்சிக்கிட்டு,,,,,இனிமே நார் உரிக்கிறது வேஸ்ட்டுங்குற நெனைப்புல இங்க வந்துட்டாங்க,,,, என்னையப் போல ஊரு விட்டு ஊரு வந்து பொழைக்க வந்தவுங்களுக்கு இது போல ஒரு பந்தம் கெடைச்சா விட்டுரற வா தோணும்,

”எங்கயோ பொறந்து வளந்து எங்கயோ வாக்கப்பட்டு பொழப்புக்காக இங்க வந்து வேர்விட்டு நின்னுக்கிட்டு இருக்கமே,அது எங்க நேரமுன்னா அந்தம்மா வந்து ஏங் தோள்மேல விழுது படர்ந்து நிக்குறாங்களே அது அந்தம்மாவுக்கு வாய்ச்சதுன்னு செயல்ன்னு சொல்லணும்.

”இந்தா நிக்குது பாருங்க,இந்த வேப்பமரம்.அத மேம்போக்கா பாக்கும் போது அது நல்லா பருத்து யெலையும் தலையுமா தளதளன்னு நிக்குறத பாக்க முடியுது, ஆனா அத கவனம் ஊனிப்பாக்கும் போதுதான் அதோட நல்லது கெட்டதுஅதுல இருக்குற கொப்புக எத்தன,சுழிக எத்தனை முடிச்சுக, எத்தனை அது எங்கெங்க இருக்குன்னு தெரியும்,அதுதான் அனுபவம்,அத எந்த பள்ளிக் கூடமும் பல்கலைக்கழகமும் சொல்லித்தந்துற முடியாது,அத ஆண்டபவிச்ச எங்களப்போல இருக்குற ஆட்களும்,வாழ்க்கை அனுபவமும் கொண்டவங்க ளால மட்டும்தான் உணர முடியும்,அது போலத்தான் மண்ண உணரக் கெடை க்கிற அனுபவமும் இல்லையா,,,?

”இப்பிடித்தான் அந்தம்மாவைப்பாத்த மொத நாளு உணர்ந்தேன்,

”ஏங்கிட்ட வெங்காயம் வாங்க வந்த மொதத்தடவை காலையில ஒன்பது மணிக்கு வந்தாங்க.பாஜருக்குப்போயி மத்த ஜாமான்களும் காய்கறியும் வாங் கணும், கொஞ்சம் சீக்கிரம் போடுங்கன்னு ஒத்தைக்கால்ல நின்னாங்க, ரொம்ப பசிக்குதுன்னு அப்பத்தான் கடையில இருந்து வாங்கீட்டு வந்த இட்லிய சாப்புடப் போனேன்,

“மொத நாளு நைட்டு வயிறு சரியில்லாததால சாப்புடல. வயித்துக் கோளா றோட சாப்புட்டுட்டு நடுராத்திரியில ஏதாவது ஒண்ணு ஆயிருச்சின்னா என்ன செய்யிறது,,,?நாங்க கெடக்குறது தெருவுல,இந்த வெங்காயம் விக்கிற வேனு தான் எங்க வீடு,,இந்த மரத்தடிதான் எங்க வாசல். யெசக்கேடா ஏதாவது நடந்தாலும் பொறுத்துக்கத்தான் வேணும்.என்ன செய்ய எங்க தலையெழுத்து அப்பிடி.நாலு நல்லது வரும்,நாலு பொல்லதும் வரும்,

”அவசரப்பட்ட அந்தம்மாவ கொஞ்ச நேரம் இந்த மரத்தடியில ஒக்காருங்கம் மான்னு நான் உக்காந்துருக்குற பிளாஸ்டிக் சேர எடுத்துப்போட்டுட்டு வாங் கீட்டு வந்த இட்லிய சாப்புடப் போனேன்,

”இந்த வேப்பமரத்துல இருந்து கத்துன காக்கா ஒண்ணு நேரா பறந்து வந்து கொஞ்சம் தள்ளி நின்னுக்கிட்டு தலையத்தலைய சாச்சிக்கிட்டு பொசுக்கு பொசுக்குன்னு முழிச்சிக்கிட்டு நின்னுச்சி,எனக்கு படக்குன்னு தோணல.அத் எதுக்கு நிக்குதுண்ணு, அப்புறம்தான் தோணுச்சி.தன்னோட பசிக்கு வந்து நிக்குதுன்னு.அது சரி,எல்லாருக்கும் எல்லாமும் படக்குன்னு தோணிறதில்ல, அந்த வாணிக்கி ஒரு இட்டிலிய பிச்சி எடுத்து சாப்புட வாயத் தொறக் குறேன், அப்ப அந்தம்மா அவசரம் கண்ணுல நிக்கிது,

”நான் கூட அந்தம்மாவ கேக்கலாமுன்னு நெனைச்சேன்.அப்பிடியே போயிட்டு வாங்க,நான் வெங்காயம் போட்டு வைக்கிறேன்னு சொல்லாமுன்னு,

அத உணர்ந்தவங்க போல எந்திரிச்சிப்போயிட்டாங்க,நான் மார்க்கெட்டுப் போ யிட்டு வர்றேன்னு,,,/

”மார்க்கெட்டு போயிட்டு அரை மணி நேரத்துல வந்துட்டாங்க, அப்ப வந்தவுங்க சாய்ங்காலம் மூணு மணிக்குத்தான் வீட்டுக்குப்போனாங்க.

”அன்னைக்கி தோள் மேல படர ஆரம்பிச்ச பழக்கம்தான் இன்னைக்கி வரைக் கும் நிக்காம தொடர்ந்துக்கிட்டிருக்கு,,,/