ஞாயிறு, 12 ஏப்ரல், 2020

பிரயாணக்காத்து,,

     ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து பயணிப்பது மிகவும் பிடித்தமானது என்பது எவ்வளவு தூரத்திற்கு பொய்யில்லையோ அவ்வளவு தூரத்திற்கு உண்மை.

பிழைப்பதற்காய் விதிக்கப்பட்டிருக்கிற எத்தனையோ வேலைகளில் இவன் செய்து கொண்டிருந்த அரசு பணி நிமித்தமாக முப்பதும் முப்பதும் அறுபது கிலோ மீட்டர் தூரம் தினமும் பயணப்படுகிறான்.

மனதிற்கான பணிகள் தினந்தோறுமாய் பிணைகொண்டு காத்திருந்த போதும் வயிற்றுக்கானதே இங்கு முதன்மையானதாயும் ஜெயிக்கக்கூடியதாயும்/

அதற்கிணங்கியவனாயும்,தலை வணங்கியவனாயும் அன்றாடங்களின் அத்து வானங்களில் தன்னை கரைத்துக்கொள்கிறவனாய்/

சீவலூர் தாண்டி விட்டான்.இன்னும் பதினைந்து கிலோ மீட்டர் பயணித்து விட்டால்இவன் வேலை செய்கிற ஊரை அடைந்து விடலாம்,இவன் பேருந்து ஏறியதிலிருந்து நான்காவது ஊர்.நீண்டு விரைந்து செல்கிற சாலையின் இரு மருங்கிலுமாய் முளைத்துக்காணப்பட்ட கிராமங்கள் தன்னிறைவு காட்டியும் தன் தனித்த அடையாளம் சுமந்துமாய்…/

பேருந்து நிற்கிற அத்தனை கிராங்களைப்போலவே அவ்வூரிலும் ஆட்கள் எறினார்கள்.மற்ற ஊர்களைபோல் இரண்டு பேர் இறங்கினால் நான்கு பேர் ஏறாமல் இரண்டு பேர் இறங்கினால் இரண்டு பேர் அல்லது ஒருவர் மட்டுமே ஏறிய ஊராக இருந்தது.

அதில்அவளும்கைக்குழந்தையுடன்ஏறினாள்.பேருந்து முழுவதுமாய் பார்வை யை ஓட விட்ட அவள் இவனருகில் வந்து அமர்ந்து கொள்கிறாள்.

ஐயாமன்னிச்சிக்கங்க,பஸ்ஸீல முழுக்க தேடிப்பாத்தேன்,யெடம்கெடைக்கல, அதான் அவரசரத்துல வந்து ஒங்க பக்கத்துல ஒக்காந்துட்டேன்,

கௌவர் மெண்ட் ஆஸ்பத்திரிக்கு போயிட்டு வந்துக்கிட்டிருக்கேன் கொழந் தைக்கி காமிக்கிறதுக்காக.

ரெண்டு நாளா வயிறுசரியில்லாம கொஞ்சம் தண்ணியாபோகுது,இன்னைக்கி காலையிலயோடசேந்து எப்பிடியும் ஆறு ஏழு தடவைக்கு மேலயாவது போயி ருப்பான்,

அப்பப்ப வாந்தி வேற,அதான் காமிச்சிட்டு ஊசி போட்டுட்டு மாத்திரை வாங் கீட்டுப் போகலாம்முன்னு வந்தேன்,

எங்க ஊர்லயிருந்து இங்க வந்து யெறங்கி ரெண்டும்,ரெண்டும் நாலு கிலோ மீட்டர் தூரம் நடந்து போயி வரணும்,

ஆத்திரம்,,,,போயிட்டு வந்துட்டேன்,பெத்த புள்ள இப்பிடிக்கெடக்க பாத்துட்டு சும்மா இருக்க முடியுமா,,?காலையில வேற சாப்புடல,பசிக்கெறக்கம் ஒரு பக்கம் அதான் கேக்காமக்கூடவந்து உக்காந்துட்டேன்,மன்னிக்கணும். திரும்ப வுமாய் சொன்ன அவளை ஏறிட்ட போது இவளது இரண்டாவது மகளின் வய திற்கும் குறைவாகவே தெரிந்தாள்.

சற்று ஒல்லியான தேகம், அணிந்திருந்த சிவப்புக்கலர்டாப்ஸீம், வெளிர்க் காக்கி யில் பேண்ட்டும் அவளது மாநிறத்திற்கு எடுப்பாய் தெரிந்தது. துப்ப ட்டாவை பின் பக்கமாய் முடிச்சுப்போட்டு வைத்திருந்தாள்,அதுவும் பேண்ட் டின்  நிறத்தி லேயே,,,./

பேருந்தின் வேகத்தில் கண்ணை அசத்திகொண்டு வந்தது, தூக்கத்தை மட்டுப் படுத்தி கொண்டு குழைந்தையை வாங்கி தன் மடியில் வைத்துகொண்டான்,

”சார் வேண்டாம்,ஆஸ்பத்திரியிலயே ஒரு தடவை ஆயி போயிட்டான், நல்ல வேளை அங்க இருந்த கொழாயில தண்ணி வந்துச்சி ,கழுவி விட்டுட்டேன், இப்ப ஒங்க மடியில போயிட்டான்னா என்ன பண்ணுறது சொல்லுங்க, அதான் யார்கிட்டயும் கொழந்தைய குடுக்குறது இல்லை,நீங்களாவது பரவாயில்ல சார் கொழந்தைய கேட்டு வாங்க ஆசைப்படுறீங்க,,,ஆனா எங்க வீட்டுக்குப் பக்கத்துல சொந்தக்கார புள்ளைங்க கூட வாங்காதுங்க,கேட்டா ஒண்ணுக்கு கிண்ணுக்கு இருந்துட்டா,,,அப்பிடின்றாளுங்க,சரிதான்னு நானும் அதுலயில யிருந்து  கொஞ்சம் வெலகியே நின்னுகிறது,இப்ப ஒங்களப்போல இருக்குறவு ங்க புள்ளைங்கள கேக்கும் போது சந்தோஷமா இருக்கு,,,”என்றவளை ஏற இறங்கப் பார்த்தவன்,,,,

”கேக்குறேன்னு தப்பா நெனைச்சுக்கிறாதப்பா,ஏங் ரெண்டாவது பொண்ணு வயசுதான் இருப்ப போலயிருக்கு,நீயி.அவ இப்பத்தான் காலேஜீ ரெண்டாவது வருஷம் முடிக்கப்போறா, ஆனா நீ இந்த வயசுல கல்யாணம் முடிச்சி கையில ஒரு கொழந்தையோட இருக்க,,,,,”என்றவுடன் சிறிது விக்கித்த அவள் ”எனக்கு கல்யாணம் முடியும் போது கரெட்க்டா பத்தொம்பது வயசு சார், அம்மா இல்லாத வீடு,அப்பாதான் பாத்தாங்க,அம்மாவுக்கு அம்மாவா,அப்பாவுகு அப்பாவா நின்னு,நல்ல வேளை எங்க அத்தை உள்ளூர்லயே இருந்ததுனால எங்க அப்பாவுக்கு எங்கள வளக்குறதுல கொஞ்சம் செரமம் இல்லாம இருந்து ச்சி, ஆனாலும் என்னையும் ஏன் அண்ணனையும் வளக்க எங்கப்பா பட்ட செரமம் ஒரு அத்தியாயமுன்னு சொல்லலாம்.

நாங்க சின்னப்புள்ளைங்களா இருக்குறது வரைக்கும் ஏனோதானோன்னு என்னத்தையோ சமையல் பண்ண சாப்புட பள்ளிக்கூடம் போகண்ணு இருந் தோம்,

எங்க அத்தையும் அப்பப்ப கூட மாட ஒத்தாசைக்கு வந்து போவாங்களே தவிர்த்து அவுங்க இங்கயே நிரந்தரமா இருந்து எங்களுக்கு ஒதவ முடியாத நெலமை,

அதுக்க்காகஅவுங்கள குத்தம் சொல்றதும் தப்பு,பாவம்அவுங்களும் அன்னாடம் கூலிக்குப் போனாத்தான் அவுங்க வீட்ல அடுப்பெரியும்,

இந்த நெலைமையிலதான் நான் வயசுக்கு வர்றேன்,அப்பத்தான் எங்கப்பாவு க்கு கஷ்டம் தெரிஞ்சிச்சி, எங்க அத்தைதான் எங்கம்மா யெடத்துல நின்னு எல்லாம் செஞ்சாங்க,

அன்னைக்கி ரவைக்கி எங்கப்பா அழுத அழுகைக்கு அளவில்ல,அத்தைதான் செருப்புட்டு நாலு அடி போட்ட மாதிரிசுடு சொல்லு சொல்லி ஆத்துப் படுத்தி ச்சி அவர,,,,,,/

“ஓங் பொண்டாட்டி இருக்குற வரைக்கும் வீடு தங்கல நீ,குடி கூத்தியான்னு அலைஞ்ச, பாவம் ஒன்னைய நெனைச்சி மருகியே மகராசி போயிசேந்துட்டா, இப்ப மருகி அழுகுற, என்ன பிரயோஜனம் சொல்லு,நான் வேணா ஓங் மகளுக்கு கல்யாணம் முடிக்கிற வரைக்கும் ஏங் மகளா வச்சிப் பாத்துக்கிறன ப்பா,நீ பையன ஒழுங்கா காப்பாத்தி கரை சேரப்பாருன்னு” அன்னைக்கி அவ சொன்ன சொல்லு இன்னைக்கி வரைக்கும் நிக்குது,நா கல்யாணம் பண்ணி வந்துட்டேன்,அப்பாவுக்கு பொழப்பகுடுத்த அதே மில்லு இப்ப அண்ணனுக்கு சாப்பாடு போடுது, அடுத்த ஊர்லயே என்னைக் கட்டிக்குடுத்தாங்க, எங்க வீட்டுக் காரருசொந்தம்தான் எனக்கு ,எங்க அண்ணன் வேல பாக்குற மில்லுல தான் வேலை பாக்குறாரு,என்க்கண்ணனுக்கு மில்லு மேனேஜரு நல்ல பழக்கம்,அதவச்சிதான்சேத்துவிட்டாரு,,,,,மேனேஜருக்குஅண்ணனைபிடிக்கும், நல்ல வேலைக்காரனை எல்லாருக்கும் பிடிகிறதப்போல அவருக்கும்  அண்ண னைப் பிடிச்சிருந்துச்சி,,/

இந்தா ஒரு புள்ளையாயிப்போச்சி, இன்னும் ஒன்னு பெத்துக்கலாமுன்னு இருக்கேன் வசதியையும் ,மனசையும்,ஒடம்பையும் பொறுத்து,,,,,,,பாப்போம் என இறங்கிப்போகிறாள் அவளது ஊர் வந்ததும்,,,,/

                                                                    பாகம் 2

”சார் வாங்க,உக்காந்துட்டீங்களா,,,”என கண்டக்டர் கேட்ட நேரமும் இவன் பயணச்சீட்டிற்காய் பணம் நீட்டிய பொழுதும் ஒன்றாகவே ஆகித் தெரிகிறது.

இயல்பாகவே பேச்சில் சிறிது குழைவும்,நடத்தையில் சிறிது அன்பையும் திரட்டி வைத்திருப்பவர்.

அப்படியான நபர்களிடம் இவன் பெரும் மதிப்பும் மரியாதையும் வைத்திருப் பான் இவன்.

ஆனால் அதை பயன் படுத்தி கொஞ்சம் யெசக்கேடாக நடந்து கொள்ள முற் படுகிறவர்களை சமயங்களில் ரத்தம் வர பிராண்டி வைத்தும் விடுவார் கண்டக்டர்.

சாது மிரண்டால் காடு கொள்ளாதுதான்,பேருந்து முதலாளியிடம் அடிக்கடி மிரள்கிற சாதுவாய் உங்களது கண்டக்டர் இருக்கிறார் என அவர் பற்றி சிலர் சொன்னபோதும் கூட அவர் அதை ஒன்றும் பெரிதாய் எடுத்துக் கொள்ளவில் லை,

”இருக்கட்டும்,இருக்கட்டும் இப்பிடி மிரள்கிற சாது ஒண்ணு நமக்கும் வேணும், இல்லைன்னா அந்தப்பக்கம் நம்ம மோட்டார் ஓட்ட முடியாது, சிரிக்கிற நேரத்துல சிரிப்பு,வெளையாடுற நேரத்துல வெளையாட்டு,மத்த நேரத்துல மத்ததுன்னு,,,,இருக்கணும்,அப்பத்தான் சரியா இருக்கும்”என்பார் பேருந்தின் ஓனர்.

சென்ற வாரத்தின் ஒரு நாளில் மாலை நேர டிரிப் வந்து கொண்டிருக்கும் போது வழக்கம் போல் எல்லோரிடமும் சிரித்துகொண்டே டிக்கெட் போட்டுக் கொண்டு வந்தவர் முப்பதைந்து வயதுள்ள அவனிடமும் டிக்கெட் கேட்க அவன் காது கேட்காதவன் போல இருந்திருக்கிறான்,கொஞ்சம் நிதானமற்றும் தெரிந்திருக்கிறான், அவன் தோளைத் தொட்டு திருப்பியவர் டிக்கெட் எடு என்றிருக்கிறார் சிரித்துக்கொண்டே/

அதற்கு அவன் ”போடா இளிச்சவாயி,,,,,,,,,ன்னு யெசக்கேடா வைஞ்சிட்டான்,

கண்டக்டரும் சொல்லி சொல்லிப்பாத்துருக்காரு,அவனும் நிப்பாட்டுற மாதிரித் தெரியல,ஓங்கி அடிச்சிட்டாரு,கையோட விசிலடிச்சி பஸ்ஸ நிறுத்தி அவன பொடதியப்புடிச்சி யெறக்கி விட்டுருக்காரு,

மறுநா அந்த ரூட்டுல போன பஸ்ஸ அவன யெறக்கிவிட்ட அதே யெடத்து லயே மடக்கி பஸ்ஸீக்குள்ள நாலைஞ்சி பேரு ஏறி கண்டக்டரோட சட்டையப் புடிச்சி மல்லுக்கட்டீருக்காங்க,அதுல ஒருத்தன்கத்திய காமிக்கவும்,இவரு முறுக்கீட்டு நிக்கவும், அதுக்குள்ள பஸ்ஸ நிறுத்தீட்டு ஓடிவந்த டிரைவர் அவுங்கள சமாதானப்படுக்கிட்டிருக்க கண்டக்டரும் இடுப்புல வச்சிருந்த கத்தியை எடுத்துக்காட்டவும் ஓடிப்போயிட்டாங்க எல்லாரும், கண்டக்டரும் விடாம கொஞ்ச தூரம் வெரட்டிக்கிட்டுப்போயிருக்காரு.

பஸ்ஸீல கொஞ்ச பேரு கூட கண்டக்டர சத்தம் போட்டுருக்காங்க,அவுங்க சில்லறைப்பசங்க,அவுங்களுக்கு அதுதான் வேலை,ஒங்க வேலை அதுல்ல, மோட்டார்ல போறது ,எங்களக்கொண்டு போயி பத்தரமா சேக்குறதுன்னு சொ ன்னவுங்கள நோக்கி சிரிச்சிக்கிட்டே வாஸ்தவம்தான் அதுக்காக இப்பிடியே விட்டமுன்னு வையிங்க,நம்ம தலையில ஏறி ஒண்ணுக்கடிக்க ஆரம்பிச்சி ருவாங்க,அதுக்காகத்தான்இப்பிடி/ மத்தபடி எனக்கு இப்பிடி பண்ணணுமுன்னு ஒரு ஆசை கெடையாதுன்னு சொல்லீருக்காரு,அப்பிடிச்சொல்லவும் அப்பிடி பஸ்ஸ ஓட்டவும் எங்களுக்கு ஒரு ஆளு வேண்டியதிருக்கு என அன்று சொன்ன பேருந்தின் முதலாளி இன்றும் கண்டக்டர் மீது நன் மதிப்பு வைத்தி ருப்பராய் இருக்கிறார்,

எப்பொழுதும் போல் வணக்கம் சொல்லி விட்டு டிக்கெட்டுக்கான பணத்தைக் கொடுக்கிறான்,இவ்னைப் பார்த்ததும் உற்சாகமாகி விடுகிற கண்டக்டர் அன்பையும் கலந்து புன்னைகையாய் வீசி விட்டு டிக்கெட்டை கிழித்துத் தருகி றார்,

பணத்தைவாங்கி விரலிடிக்கினுள் மடித்துச்சொருகியவராக மிஷினில் டிக்கெட் அடித்துக் கொடுக்கிறார்,

வழக்கத்தை விட உற்சாகம் இழந்து காணப்பட்டவராய் தெரிந்தார், கேட்டிருக் கலாம்,என என்னவென/

கேட்க நினைக்கிற பலவிஷயங்கள் திட்டமிடப்பாடா ஏதாவது மறுகுதலின் காரணமாய் தட்டியும் மறந்தும், மறகடிக்கப்பட்டுமாய்/

காரணம் இதுவென சரியாகத்தெரியாவிட்டாலும் கூட இதுதான் என யூகித்து விட முடிகிறது ஓரளவிற்கேனுமாய்,,,

சாப்பிடவில்லை,தலை வலிக்கிறது,உடல் நிலை சரியில்லை,,, என்கிறது போலான எதனுள்ளும் அடக்கிக் கொள்ளமாட்டார் தன்சோர்வை/ மேற்கண்ட உபாதைகளால் அவர் துன்பப்பட்ட போதிலும் கூட,,,/

அது அவரது சுபாவமா இல்லை, அல்லது அவராய் விரும்பி ஏற்றுக் கொண்ட தா, தெரியவில்லை,

போன மாதத்தின் நிறை திங்களன்று காலை வேளையாய் பஸ்ஸில் டிக்கெட் போட்டு வந்து கொண்டிருந்தவர் இவனருகில் வந்ததும் புன்னகைத்தவாறே டிக்கெட் கேட்டவர் சொல்லி வைத்தாற் போல் மயங்கிவிட்டார்,

புன்னைகை வாயிலிருக்க,டிக்கெட் மிஷின் கையிலிருக்க,பணப்பை தோளிலி ருக்க,,,,,அப்படியே சரிந்தவரை கைதாங்கிப்பிடித்துபக்கத்து இருக்கைக்காரரின் துணையுடன் அமர வைத்து தண்ணீர் தெளித்ததும் எந்திரித்தமர்ந்தவர் சிறிது தண்ணீர் குடித்து விட்டு அதே வேகத்தில் டிக்கெட்ப் போட கிளம்பி விட்டார்,

டிக்கெட்ப்போட்டு விட்டு வந்ததும் காலையில் சாப்பிடவில்லை அதுதான் கொஞ்சம் அசத்தி விட்டது என்றார்,

”நல்லா ஆனா சாப்புட ஒரு அஞ்சி நிமிஷம் ஆகுமா,அதுக்குப்போயி சோம்பல் பட்டுக்கிட்டு இப்பிடி கொலை பட்டினியா கெடக்குறீங்களே சார்” என்றவனைப் பார்த்துச் சிரித்தவர் ”அது அப்பிடியில்ல சார்,,,,சாப்புடுறதுக்கு நேரம் தவிர்த்து மனசும் ஒரு காரணம் சார்,

”அது போக பழக்கமும் இதுல முக்கிய பங்கு வகிக்கிது,காலையில வீட்ல குடிச்சிற டீக்களோட எண்ணிக்கை மொத நா ராத்திரி முழிச்சிக்கிட்டு இருக் குறது எல்லாம் இதுல முக்கிய காட்டுது” என்றார்.

ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து பயணிப்பது இவனுக்கு மிகவும் பிடித்த தாகவே/

கொஞ்சமாய் பெயிண்ட் உதிர்ந்து அங்கங்கே திட்டுத்திட்டாய் காணப்படுகிற கம்பிகள் எப்பொழுதும் இவன் கவனம் ஈர்க்கத் தவறியதில்லை,கொஞ்சம் அழுக்கு ,கொஞ்சம் தூசி,கொஞ்சம் வர்ணம்,,,,இதுதான் பேருந்துகளில் உள்ள ஜன்னல் கம்பிகளின் தனித்துவ அடையாளம் போலும்,

அடையாளம் இருந்துவிட்டுப்போகட்டும் ஒருபக்கம்.ஆனால் அதனை உட்கிர கித்து பயணிக்கிற மனோ நிலை என்னிலும்,உன்னிலும் நம் எல்லோரிலு மாய் காணக்கிடைப்பது பெரும் பாக்கியம் என்பான் நண்பன்,

பயணங்களும் பயண வாய்ப்பும் வாய்க்கப்பெற்றவர்கள் நட்புகளும் தோழமை களும் உறவுகளும் அக்கம் பக்கத்தினருமாய்தான் இவனில் பூத்துக்கிடக்கிறார் கள் /

கண்டக்டர் அணிந்திருந்த காக்கிச்சட்டையின் இடது ஓர கீழ்ப்பகுதியில் ஒற்றை நூல் பிரிந்து தொங்கியது,

தொங்கிய நூலின் கீழ்ப்பகுதி அவர் டிக்கெட்க்கொடுக்கையில் இவன் மீது உரசிச்செல்வதாக,,,/

டிக்கெட்க் கொடுத்துவிட்டு நகன்ற கண்டக்டரை தோள் தொட்டு நிறுத்தி சார் சட்டையில நூல் தொங்குது எனச்சுற்றிக்காட்டினான்.

”அது அவ்வளவுதான் சார் தூக்கிப்போட்டுட்டு வேற வாங்க வேண்டியதுதான், எக்ஸ்பெயரிடேட் முடிஞ்சி போச்சி இனி அதைப்போயி வைச்சிக்கிட்டு,,,,” என அவர் சொல்லி முடிக்கும் முன்னாய் அவரது அனுமதியுடன் நூலைப் பிடித்து இழுத்து அறுத்து விட்டான்,இழுத்த வேகத்தில் வந்த நூல் கொஞ்சம் சட்டை யின் கீழ்ப்பகுதியை பிரித்து விட்டு விட்டது,

சட்டையைப்பார்த்த கண்டக்டர் பிரிந்து தொங்கிய சட்டையின் பிரிவை ஊக்கு கொண்டு மாட்டிக்கொண்டு”சார் இப்பத்தான் திருப்தியா இருக்கு,இப்பிடி ஏதாவது ஒண்ணு ஆனாத்தான் சட்டையை தூக்கிப்போட மனசு வருது, இல்லைன்னா வருதுல்ல,அப்பிடியே போட்டு சமாளிச்சி ஓட்டிறலாமுன்னு தோணுது”

ஆர்.எஸ்.நகர் பாலத்து ஓரமாய் இருக்கிற பேருந்து நிலையத்தில்தான் இவன் பஸ் ஏறினான்.

எட்டு நாற்பதிற்கு பஸ்,இவன் வந்து சேர்ந்து விட்ட எட்டு முப்பதை கடக்க இன்னும் பத்து நிமிடம், கஷ்டம் கொண்டு பிடித்துத்தள்ள வேண்டும்.

ஸ்கூட்டியில் கொண்டு வந்து இறக்கிவிட்டுப்போன சின்ன மகளிடம் இதை சொன்ன போது ”டேக் இட் ஈஸிப்பா,,,,உங்களுக்குத்தான் இருக்கவே இருக்கே, டீக்கடை அதுல பொழுத தள்ளீரலாம்ல,,,,” என்றாள்.

அவள் சொல்லிலும் அனுமானத்திலும் தப்பில்லை,டீ,டீ,டீ,,,, டீக்குடிக்க ஒரு டீ,  அதன் முன் ஒரு டீ,அதன் பின் ஒரு டீ,,,,என்கிற ரகத்தில் ஓடிக் கொண்டிரு ப்பவன்.

அதற்கு அவசியமில்லை அது சுலபமே,பேருந்து நிறுத்தத்தின் அருகில் உள்ள கடையில் டீயும்,வடையும் சாப்பிட்டால் கடந்து போய்விடும் பத்து நிமிடங் கள்.

ஊதாக்கலர் இருக்கைகள் ,வலது பக்கம் வரிசை சீட்டுகள் போல் இடது பக்கமுமாய் இரண்டு வாசல்களுக்கும் சம இடைவெளி விட்டு ஒன்றன் பின் ஒன்றாய் அடுக்கப்பட்டிருந்த சீட்டுகள் கொஞ்சம் அழகு காட்டியும் அதன் நிறம் காட்டியும்,கூடவே கொஞ்சம் கவனிக்கத் தவறியுமாய்,,/

பூப்பின்வாய்ப்பும்,புஷ்பித்தலின் சந்தர்ப்பங்களுமாய் கைகோர்க்கிற வேளை வாய்க்கப் பெறுகிற பயணங்கள் ஜன்னலோர இருக்கை கொண்டதாய் இருந் தால் நன்றாக இருக்கும் எனத்தோணுகிறது.

பேருந்து முழுவதுமாய் பரவிப்பாவி இழையோடிய மெல்லிய இசை மனம் கொண்டதாய் இருக்கிறது,அதிலும் இளையராஜா அவர்களின் இசை என்றால் தனி இடம் உண்டு மனதில்/

அதிலும் இடது பக்க இருக்கையில் அமர்ந்து கேட்பதில் சந்தோஷமாகிப் போகிறது தான் மனம்.

அப்படி என்னதான் இருக்கு யெடது பக்கத்துல,மொதல்ல வாங்க இந்தப் பக்கமா என வலது காட்டி மனைவி சொன்னபோதும் கூட அதை ஏற்காத மனதினாய் சமாதானம் செய்துகொண்டு நின்றிருந்த கணங்கள் இவனில் நிறைய நிறையவே,,,,/

பெயிண்ட் உதிர்ந்த ஜன்னல் கம்பிகள் மூன்று அல்லது இரண்டில் ஏதாவது ஒன்றில் மடக்கிய அரைக்கையை உன்றி வெளி நீட்டியவாறு சில்லென்ற காற்றுக்கு தன் வழி சொல்லி சுகித்துப் பயணிக்கிற மனோ நிலை வாய்க்கப் பெறுகிற கணம் இவனுக்குள் ரம்மியமாகவே/

காதலைச்சொல்ல ஓரிடம் ,காமத்தைச்சொல்ல வேறோரிடம்,சுகம் சொல்ல ஒரு இடம், துக்கம் சொல்ல வேறோரிடம்,நலம் சொல்ல ஒரு இடம் மகிழ்ச்சியை சொல்ல வேறோரிடம்,அழுக ஒரு இடம் சிரிக்க ஒரு இடம்,,,என இன்னும் இன்னுமானதாய் இல்லாமல் அனைத்தும் கலந்து கட்டிய கலவை யாய் தந்து விட்டுச்செல்கிற மகானுபவம் அவரது பாடல்களை கேட்கிற சமயங்களில் தவிர்க்க இயலாமல் ஏற்பட்டுப்போவதுண்டு.

பேருந்தின் முன்னாக வழி காட்டி விட்டு சடுதியில் அதன் அடியில் சென்று மறைந்து கொள்கிற தார்ச்சாலை இவர்களை நக்ர்த்திக் கூட்டிசெல்கிற முன்னத்தி ஏறாய்,,,/

சாலையில் இரு மருங்கிலுமாய் நட்டு வைத்தும் தானாய் முளைத்துமாய் பச்சை போர்த்திக்காணப்படுகிற மரங்களும் செடி கொடிகளும் மழை காலத் தின் தளர்ச்சியை விட இப்பொழுதுதான் உண்மை காட்டி உரைந்திருப்பதாய் படுகிறது.

ஆளுயரபள்ளமாய் இருந்த சாலையோரத்தின் ஓடைகளும்,பள்ளங்களும் அது காத்து நின்ற தண்ணீரும், காணாமல் போய் அதன் இடத்தில் உயர்ந்து நிற்கிற செடிகளும் மரங்களும் அடர்ந்து நிற்கிற செடிகளும் மேடுபாவிப்போன ஓடை களை தன் வசபடுத்தி வைத்திருப்பதாக,,,/

வசம் கொண்டவைகளும், வசப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டவைகளும் மன மேற்பில் நடப்பவைகள்தானே,,,?

அந்த நேரம் மனம் பிடித்தவளின் தூரத்துப் பேச்சு வசபட்டுப் போகிறது, அவளின் மென் சிரிப்பு அச்சப்பட வைக்காதிருக்கிறது, அதிர்வற்ற அழுந்தாத கரம் பற்றுதல் ஆறுதல் தருகிறது, அருகிலில்லாத அவளது அருகாமை மனம் பிடித்ததாய் ஆகித்தெரிகிறது.

கொஞ்சம் சிரிப்பு ,கொஞ்ச பேச்சு ,கொஞ்சம் பகிர்வு,கொஞ்சம் ஆற்றாமை,, என இன்னும் இன்னுமாய் ஓடி ஓடி தேடி எடுத்த சேகரங்களின் தொகுப் பணைத்தையுமாய் நூலில் கோர்த்து சேர்த்தணைத்து மனம் அசை போடுகிற இடமாயும்,செல் போனில் ஏதாவது மிச்சம் மீதியாய் இருக்கிற வேலை யாருடனான பேச்சு என ஏதாவது நிறுத்தி வைக்கப்பட்டதை முடிக்கிற இடமா யும் பேருந்தின் இருக்கை அமைந்து போவது கொஞ்சம் ஆறுதலாகவே/

அதிலும் பின் பக்க வாசலோர இருக்கை கிடைத்து விட்டால் ஓடிக் கொண் டிருக்கிற பேருந்தை ஒரு கணம் நிறுத்தி வெடி போட்டு கொண்டாடி விட்டு பிறகு ஏறிக்கொளிகிறவனாகிறான்/