ஞாயிறு, 5 ஏப்ரல், 2020

விழுதாகி,,,,,

படர்ந்து கிடக்கிறது சாலை வெளி,கேட்பாரற்ற அழுகுழந்தையின் இருப்பு போல.

அதன் மெல்லிய மேனி முழுவதுமாய் படர்ந்து கிடக்கிறது புழுதி. அள்ளி எடுத்து கை கொண்ட விரல்களின் இடை வெளி வழியாய் ஒழுகித்தீர்க்கிற தண்ணீர் போல/ நகர்வு கொண்ட புழுதியின் மீது நட்டு வைத்த விழிகள் இரண்டு ஊர்ந்து செல்கிற வேளையாய் கண்ணில் படுகிறாள் அவள்,

அழுந்த படிந்து வாரியிருந்த தலை முடியின் எண்ணெய் மின்னலும், நெற்றிக் கிட்டிருந்த குங்குமமும் அதன் மீது தீற்றலாய் இழுத்திருந்த திருநீறுகீற்றும் பார்க்க அழகாயிருந்தது,

தலையில் எண்ணெய்தான் கொஞ்சம் கூடுதலாய் தடவியிருந்தாள். அது ஒன்றும் பெரிதாய் கண்ணை உறுத்திவிடவில்லை,

திருநீறுக்கீற்றை இன்னும் கொஞ்சம்மேலேற்றிஇழுத்திருக்கலாம்,ஆனாலும் ஒன்றும்பெரிய பிழை தாங்கி இல்லை.,கையில் கொஞ்சம் திருநீறுஇருந்தால் அவள் அருகில் சென்று திருத்தி விட்டு வரலாம்,

பப்ளிக்,பப்ளிக்,,,,,,,என உசார்ப்படுத்திய மனதை கட்டுக்குள் வைத்துக்கொண்டு நகர்கிறான்,

கட்டியிருந்த புடவைக்கு மேட்சாக கட்டியிருந்த புடவைக்கு மேட்சாக மேட் சாக அணிந்திருந்த ஜாக்கெட் நெற்றி வகிடுக்கு இழுத்திருந்த குங்குமத்தை ஞாபகப்படுத்தியதாய்,,,,/

வெங்காயம் விற்கிற வண்டியின் இடது பக்கமாய் அமர்ந்திருந்தாள் அவள். அமர்ந்திருந்த இடம் வேப்பமர நிழல் தாங்கியதாய்,,,/

அவள் அமர்ந்திருந்த பிளாஸ்டிக் சேரில் விழுந்த மரத்தின் நிழல் அவளது இடதுபக்க புடவையின் ஒரமாய் மர இலைகளை காட்சிப்படுத்தியதாய்,,,/

பட்ட நிழலின் படர்வும் பார்வையின் தெளிவும் அவளது வயதைச் சொல்லிச் செல்கிறதாய்/

அது காலூன்றி நிற்கிற மண்ணும் மண் காத்து நிற்கிற மனிதர்களும் முக்கிய உருவெடுத்துக்காட்சிப்படுகிரவர்களாய் அங்கு/

மென்மை காத்து அள்ளி வீசிய சிரிப்புடனாய் வெங்காயம் விற்ற அவளிடம் கிலோவிற்கு விலை விசாரிக்கிறான்.

சிரிப்பு அவனுக்குள்ளாய் முளைத்தெழுந்த திடீர் பூகம்பமா,அல்லது மெட்ட விழ்ந்து மென்மை காத்து இளமலரா தெரியவில்லை.

”எப்பிடிண்ணே இப்பிடியெல்லாம் இருக்கீங்க,,”எதுக்கெடுத்தாலும் சிரிச்சீறீங்க ளே,,,?” என இவன் வழக்கமாய் செல்கிற டீக்கடைக்காரர் கேட்டபொழுது ”அது அப்பிடித்தான்.தானா வருது, அது தவிர்த்து சிரிப்பு ஒரு அரு மருந்து,அது நம்ம கிட்ட பஞ்சமில்லாம குவிஞ்சி கெடக்கு,அத எடுத்து பயன்படுத்துற நேரத்த்ல பயன் படுத்தாம விட்டுட்டு இப்ப மருந்துக்கும் மாத்திரைக்கும் டாக்டருக்குமா போயி நிக்கிறோம்” என்பான்,

வெங்காயம் விற்றவளிடம் சிரித்து நின்ற பொழுது இது ஞாபகம் வர,,,விலை கேட்டுவிட்டு ஏறிட்ட இவனிடம் இப்பயெல்லாம் இப்படி சிரிச்சிப் பேசுறவ ங்கள பாக்குறது அபூர்வமாப்போச்சி சார் என்றாள் கடைகாரி,

அவளது பேச்சில் பட்டுப்படர்ந்திருந்த இயல்பு இவனை ஈர்த்ததாய்,,/

’எங்கசார் கடைக்கு வர்ற ஆணும் சரி,பொண்ணும் சரி,ஏதோ சண்டைக்காரங்க மாதிரிதான் வருவாங்க,சில பேரு ஒரு அடி தள்ளி நின்னுக்கிட்டு வெங்காயம் வேணுமுண்ணுவாங்க,இன்னும் சில பேரு பக்கத்துல வந்து இடிச்சு தள்ளுறத் போல நின்னுக்கிட்டு மூஞ்சிக்கு நேரா பைய நீட்டுவாங்க,இன்னும் சில பேரு ன்னா அதிகாரமா கேப்பாங்க,நாம ஏதோ அடிமை மாதிரியும் அவுங்க ஏதோ நமக்கு எஜமானர் மாதிரியுமா பாவிச்சிட்டுக்கேப்பாங்க,இப்பிடி வர்றவுங்களை யெல்லாம் இழுத்துப்புடிச்சி வச்சிதான் யேவாரம் பண்ணி ஆக வேண்டிய திருக்கு,

“எப்பயாவது அத்தி பூத்த மாதிரி வர்ற ஒங்கள மாதிரி ஆள்களுக்கு யேவாரம் பண்ணும் போது சந்தோஷமா இருக்கு,நீங்க தள்ளி நின்னு ஒதுங்குறதும் இல்ல,மேல விழுந்து புடுங்குற ஆளும் இல்ல. எனக் கூறுபவளை ஏறிடும் போது இனம் புரியா ஒட்டுதல் ஒன்று பட்டென தோன்று மறைவதாய்,,,/

இவன் வெங்காயம் வாங்குவதற்கு முன்னாய் மரத்தடியில் பையை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தவளைப்பார்த்து அந்தம்மா எனக்கு முன்னாடியே வந்துட்டாங்க போலருக்கே, அந்தம்மாவுக்குப் போட்டுட்டு எனக்குப் போட வேண்டியதுதான,என்றவனை ஏறிட்டவள்,,,,,,,

இப்ப என்ன சார் அந்தம்மாவுக்கு,அவுங்க வாட்டுக்கு ஒக்காந்துருக்காங்க, காசா,பணமா,தங்கமா,வைரமா,,,?இதுல ஒரு செலவுமில்லாம ஒக்காந்துருக் குற மகராசி அவுங்க,அவுங்களுக்கு என்ன கொறை,,,?கண்ணு நெறைஞ்ச கணவரு, நெஞ்சு நெறைஞ்ச புள்ளைங்க,

புள்ளைங்கண்ணா புள்ளைங்க,அப்பிடி ஒரு புள்ளைங்க,அது போல புள்ளைங்க கெடைக்க குடுத்து வச்சிருக்கணும்.

”புள்ளைங்க ரெண்டும்காலேஜுலபடிக்கிறாங்க,வீட்டுக்காரரு கௌவர்மெண்டு ஆஸ்பத்திரியில வேலை பாக்குறாரு,குடியிருக்க சொந்த வீடு ,எங்கனயின் னாலும் போயி வர காரு,எல்லாம் இருந்தும் கூட அவுங்க பழக்கமே என்னையப் போல இல்லாதவுங்க கூடத்தான்.இந்தக்காலத்துல இப்பிடி ஒரு ஆளான்னு ஆச்சரியமான ஆச்சரியம் எனக்கு,

“அது கூடப்பரவாயில்ல,சரின்னு ஏத்துகலாமுன்னு வையிங்களேன்,ஆனா பிடிவாதம் தளராம இப்பிடியே நகண்டு நகண்டு இங்க வந்துற்ராங்க என்னையப் பாக்கணுமுன்னு,அப்பிடி ஒண்ணும் நெனைச்ச ஒடனே ஓடி வந்து ற்ரதுக்கு அவுங்க வீடு ஒண்ணும் பக்கத்துல இல்ல,இங்கயிருந்து ரெண்டு கிலோ மீட்டர் தூரமாவது இருக்கும், அங்கயிருந்து ஒரு ஜீவன் மெனக்கெட்டு என்னையப்பாக்க வருதுன்னா ஏதோ ஒன்னத்தேடி வர்றாங்கன்னு அர்த்தம், அந்த மனோ நிலைதா அந்தம்மாவ இதுநாள் வரைக்கும் நல்லா வச்சிருக்கு. அந்த நல்ல மனசுக்காகவாவது அந்தம்மா நீண்ட ஆயுளோட நல்லாயிருக் கணும்.

”சிலபேரு அந்தம்மாவப் பத்தி ஏங் காது பட பேசிட்டுப்போவாங்க ,”இது போல ஒரு அப்பாவிய நாங்க இதுவரைக்கும் பாத்ததில்லன்னு,”

”அத அந்தம்மாட்டச்சொன்னமுன்னா,இரு ஏன் பூசி மொழுகிச்சொல்லுற, அவுங்க அப்பிடியெல்லாம் பேசீருக்க மாட்டாங்க,”இந்த மாதிரி ஒரு இளிச்ச வாய்ச்சிய பாத்துருக்க மாட்டேன்னு” சொல்லீருப்பாங்க,,, அப்பிடித்தான்னு,,” அந்தம்மா சொன்னப்ப எனக்கு கொஞ்சம் சங்கடமாக்கூடப் போயிருச்சி,

அப்புறம்தான் அந்தம்மா சொன்னாங்க,”அவுங்க நெனைக்கிற மாதிரி நான் இளிச்சவாய்ச்சியும்இல்ல,அப்பிடி சொல்லுறவுங்கபெரிய கெட்டிக்காரங்களும் இல்ல, அப்பிடி நான் இளிச்ச வாய்ச்சியா இருக்குறது னால எனக்கு எந்த வித நஷ்டமும் இல்ல,ஆனா கெட்டிக்காரத்தனமுன்னு நெனைச்சிக்கிட்டு அவுங்க பண்ணுற வேலைகளால,நடந்துக்குற நடத்தைகளால அவுங்களுக்குத்தான் கெட்ட பேரே தவிர்த்து எனக்கு ஒண்ணும் பெரிய நஷ்டமுல்ல,,,,எனச்சொன்ன அவளது பேச்சை பதிவு செய்த வெங்காயக்காரம்மாவை ஏறிட்டபோது,,,,,, அந்தம்மா இப்ப வெங்காயம் வாங்கத்தான் வந்துருக்காங்க,வாங்கியும் வச்சிட் டாங்க, அந்தம்மா பக்கத்துல இருக்கு பாருங்க கட்டைப்பையி அதுதான்,,,, ,என்ற கடைக்காரி,,,,,,,

”அது அப்பிடியில்ல தம்பி,,,,அந்தம்மா அவசரமா வீட்டுக்குப்போயி செய்யிற அளவுக்கு ஒண்ணும் பெரிசா வேலையில்லை.சாய்ங்காலம் மூணு மணிக்கு மேலதான் புள்ளைங்க காலேஜீல இருந்து வரும்.அதுவரைக்கும் இங்க இருந்துக்கிட்டு ரெண்டு கதை பேசீட்டு போவாங்க,

“அவுங்க வேறென்ன பேசீறப் போறா ங்க பாவம்.புருஷன் புள்ளைங்க,வீடு,,,,,, இதுதான்அவுங்க பேச்சா இருக்கும் தம்பி,அதென்னவோ தெரியல ,பொண்ணா ஜென்மம்எடுத்த நாளையிலயிருந்து இப்படித்தான் இருக்கணுமுன்னு விதிக்கப் பட்டுருக்கு போல,,,/

“ஆம்பளைங்களப் போல நாலு யெடத்துல ஒக்காந்து பேச,சிரிக்க டீக்குடிக்க,,, இப்பிடி இப்பிடியா எதுவும் கெடையாது தம்பி.இப்பதக்கி இப்ப கொஞ்சம் பரவாயில்ல நெலம, பொண்ணுங்க தனியாபோக,கடைகள்ல ஒக்கார,ரெண்டு டீ,காப்பி சாப்புடன்னு முடியுது, அதுவும் கொஞ்சம் பெரிய டவுன்கள்ல மட்டுந்தான் அப்பிடிப்பாக்க முடியிது,அந்தப்பழக்கம் இது போலான ஊர்ளுக்கு நகண்டு வர எத்தன நாட்கள்ஆகுமுன்னு தெரியல,போங்க,அது போல இல்லா ததுனாலதான் இது போல ஆட்கள் தேடி அலைய வேண்டி இருக்கு, பேச உறவாட, இன்னும் இன்னுமான லேசான பழக்க வழக்கங்களுக்கெல்லாம்,,,/ சொல்லப்போனா அதுவும் கூட ஒரு வகையில நல்லதுதான்.மனித மொகம் பாத்து பேசிப்பழகுறதுக்கும், வெறுமனே கடையில போயி ஒக்காந்துக்கிட்டு கடை அலங்காரத்த பாத்துக் கிட்டு டீ காப்பி ஸ்நான்க்ஸ்ன்னு சாப்புட்டு வர்றதுல என்ன சந்தோஷம் இருந்துற முடியும் சொல்லுங்க,

”அந்தம்மாவும் வந்ததுல இருந்து யேவாரம் இல்லாத நேரம் பாத்து பேச்சா பேசுவாங்க,நானும் அவுங்க பேசுற பேச்சயெல்லாம் கேக்குற மாதிரி காட்டிக்கி ருவேன். எனக்கும் பொழுது நகரணுமுல்ல,அங்க என்ன வெங்காயம் வாங்க கியூவுலயா நிக்கிறாங்க,,,,?,

“அதுவும் அந்தம்மாவுக்குத்தெரியும்தான்.அவுங்க வீட்டுல இருந்து மெனக் கெட்டு இங்க என்னைய தேடி வராட்டி அங்க தெருவுல அக்கம் பக்கத்துல பேசலாமுல்லன்னு சொன்னா பேசலாம்,பழகலாம்,அதுல ஒண்ணும் மாற்றம் இல்ல,ஆனாஅவுங்ளெல்லாம் ஒன்னைய மாதிரி இல்லைன்றாங்க, ஒருத்தரப் போலவே இன்னொருத்தர் இருக்கணுமுன்னா எங்க போறது நாம சொல்லு ங்க,

”அது வேற ஒண்ணும் இல்ல தம்பி,இந்தம்மா இல்லாத வீட்டுப்பொண்ணாத் தான் இங்க வாக்கப்பட்டு வந்தாங்க,கஞ்சிக்கே கஷ்டப்பட்ட வீட்டு ஆள்க, விவசாயக்குடும்பம்,வருஷமெல்லாம்கரட்டுக்காட்லயும்,ஒழவுக்கட்டிகளுக்கு மத்தியிலயும் மல்லுக்கட்டுன குடும்பம்,ஏதோ அந்தம்மா செஞ்ச புண்ணியம், இந்த வீட்டுக்கு வாக்கப்பட்டு வந்துட்டாங்க,வீட்டுக்காரரு சொந்தமாம்,பொண் ண மட்டும் குடுங்கன்னு அந்தம்மாவ கூப்புட்டுக்கிட்டு வந்துருக்காரு,

”ஆனா அவுங்க குடியிருக்குற தெரு ஏதோ குபேரபுரிக்கு பக்கத்துல இருக்கு றதா அந்த தெருவாசிகளே நெனைச்சி வாழ்ந்துக்கிட்டு இருக்குற தெரு, பணத்த பையிலயும் கௌரவத்த மனசுலயுமா வச்சிக்கிட்டு அலையுற கூட்டம். பக்கத்துல இவுங்கள அண்டக்கூட விடல. இவுங்களுக்கு அது தெரிஞ் சாலும் கூட வெளிப்படையா காட்டிக்கிறாம சரி நம்ம தெருக்காரங்கதானே அவுங்க,நம்மளேஅனுசரிக்காட்டிவேற யாரு அனுசரிப்பா,,,,ங்குற நெனைப்புல எல்லார் கூடயும் அனுசரிப்பா பழகீருக்காங்க,ஹீம் ஒண்ணும் ஆகல,

”சுத்தி இருக்குற வீட்டுக்காரங்க எடுத்துட்டு வர்ற நகைக,சேலை, துணிமணி கன்னு அவுங்க பகட்டயும் ஜபர்தஸ்தையும் காண்பிக்க மட்டும் வருவாங்க ளாம்,

”ஒரு கல்யாணம் காச்சி,நல்லது பொல்லதுன்னா இந்தம்மாவ பக்கத்துல சேத்துக்க கூட மாட்டாங்களாம்,

”இந்தம்மாவும் பொறுத்துப் பொறுத்துப் பாத்திருக்காங்க, கழுத போகுதுங்க, இவுங்க பக்கத்துல சேத்துக்காட்டி இப்ப என்ன நட்டமா போச்சி,நம்ம வீட்டுல என்ன ஒலையா கொதிக்க மாட்டேங்குதுன்னு நெனைச்சிக்கிட்டு,,,,,இனிமே நார் உரிக்கிறது வேஸ்ட்டுங்குற நெனைப்புல இங்க வந்துட்டாங்க,,,, என்னையப் போல ஊரு விட்டு ஊரு வந்து பொழைக்க வந்தவுங்களுக்கு இது போல ஒரு பந்தம் கெடைச்சா விட்டுரற வா தோணும்,

”எங்கயோ பொறந்து வளந்து எங்கயோ வாக்கப்பட்டு பொழப்புக்காக இங்க வந்து வேர்விட்டு நின்னுக்கிட்டு இருக்கமே,அது எங்க நேரமுன்னா அந்தம்மா வந்து ஏங் தோள்மேல விழுது படர்ந்து நிக்குறாங்களே அது அந்தம்மாவுக்கு வாய்ச்சதுன்னு செயல்ன்னு சொல்லணும்.

”இந்தா நிக்குது பாருங்க,இந்த வேப்பமரம்.அத மேம்போக்கா பாக்கும் போது அது நல்லா பருத்து யெலையும் தலையுமா தளதளன்னு நிக்குறத பாக்க முடியுது, ஆனா அத கவனம் ஊனிப்பாக்கும் போதுதான் அதோட நல்லது கெட்டதுஅதுல இருக்குற கொப்புக எத்தன,சுழிக எத்தனை முடிச்சுக, எத்தனை அது எங்கெங்க இருக்குன்னு தெரியும்,அதுதான் அனுபவம்,அத எந்த பள்ளிக் கூடமும் பல்கலைக்கழகமும் சொல்லித்தந்துற முடியாது,அத ஆண்டபவிச்ச எங்களப்போல இருக்குற ஆட்களும்,வாழ்க்கை அனுபவமும் கொண்டவங்க ளால மட்டும்தான் உணர முடியும்,அது போலத்தான் மண்ண உணரக் கெடை க்கிற அனுபவமும் இல்லையா,,,?

”இப்பிடித்தான் அந்தம்மாவைப்பாத்த மொத நாளு உணர்ந்தேன்,

”ஏங்கிட்ட வெங்காயம் வாங்க வந்த மொதத்தடவை காலையில ஒன்பது மணிக்கு வந்தாங்க.பாஜருக்குப்போயி மத்த ஜாமான்களும் காய்கறியும் வாங் கணும், கொஞ்சம் சீக்கிரம் போடுங்கன்னு ஒத்தைக்கால்ல நின்னாங்க, ரொம்ப பசிக்குதுன்னு அப்பத்தான் கடையில இருந்து வாங்கீட்டு வந்த இட்லிய சாப்புடப் போனேன்,

“மொத நாளு நைட்டு வயிறு சரியில்லாததால சாப்புடல. வயித்துக் கோளா றோட சாப்புட்டுட்டு நடுராத்திரியில ஏதாவது ஒண்ணு ஆயிருச்சின்னா என்ன செய்யிறது,,,?நாங்க கெடக்குறது தெருவுல,இந்த வெங்காயம் விக்கிற வேனு தான் எங்க வீடு,,இந்த மரத்தடிதான் எங்க வாசல். யெசக்கேடா ஏதாவது நடந்தாலும் பொறுத்துக்கத்தான் வேணும்.என்ன செய்ய எங்க தலையெழுத்து அப்பிடி.நாலு நல்லது வரும்,நாலு பொல்லதும் வரும்,

”அவசரப்பட்ட அந்தம்மாவ கொஞ்ச நேரம் இந்த மரத்தடியில ஒக்காருங்கம் மான்னு நான் உக்காந்துருக்குற பிளாஸ்டிக் சேர எடுத்துப்போட்டுட்டு வாங் கீட்டு வந்த இட்லிய சாப்புடப் போனேன்,

”இந்த வேப்பமரத்துல இருந்து கத்துன காக்கா ஒண்ணு நேரா பறந்து வந்து கொஞ்சம் தள்ளி நின்னுக்கிட்டு தலையத்தலைய சாச்சிக்கிட்டு பொசுக்கு பொசுக்குன்னு முழிச்சிக்கிட்டு நின்னுச்சி,எனக்கு படக்குன்னு தோணல.அத் எதுக்கு நிக்குதுண்ணு, அப்புறம்தான் தோணுச்சி.தன்னோட பசிக்கு வந்து நிக்குதுன்னு.அது சரி,எல்லாருக்கும் எல்லாமும் படக்குன்னு தோணிறதில்ல, அந்த வாணிக்கி ஒரு இட்டிலிய பிச்சி எடுத்து சாப்புட வாயத் தொறக் குறேன், அப்ப அந்தம்மா அவசரம் கண்ணுல நிக்கிது,

”நான் கூட அந்தம்மாவ கேக்கலாமுன்னு நெனைச்சேன்.அப்பிடியே போயிட்டு வாங்க,நான் வெங்காயம் போட்டு வைக்கிறேன்னு சொல்லாமுன்னு,

அத உணர்ந்தவங்க போல எந்திரிச்சிப்போயிட்டாங்க,நான் மார்க்கெட்டுப் போ யிட்டு வர்றேன்னு,,,/

”மார்க்கெட்டு போயிட்டு அரை மணி நேரத்துல வந்துட்டாங்க, அப்ப வந்தவுங்க சாய்ங்காலம் மூணு மணிக்குத்தான் வீட்டுக்குப்போனாங்க.

”அன்னைக்கி தோள் மேல படர ஆரம்பிச்ச பழக்கம்தான் இன்னைக்கி வரைக் கும் நிக்காம தொடர்ந்துக்கிட்டிருக்கு,,,/