வியாழன், 16 ஏப்ரல், 2020

ராம்குமார்,

இத்தனை ஆண்டுகள் ஆகியும் என்னில் உறைகொண்ட பெயராயும், நபராயும் அவர் இருக்கிறார்.


உளிகொண்டு செதுக்காது வரை கொண்ட உயிர் ஓவியமாய் என்னில்! இத்தனை ஆண்டுகள் கழித்தும் நான் நினைக்கிற பொழுதுகளில் என் மனதை இம்சிக்கிறவராகிப்போகிறார்.வானில்வந்துபோகிற எரி நட்சத்தி ரம் போல் சட்டென வந்து மறைந்துபோன அவர் ராம்குமார். அவர் இப் பொழுது நம்மில் இல்லை.ஆனால் அவர்பற்றிப்பேச,எழுத விஷயமிருக்கி றது நண்பர்களே….!


அது ஆகிப்போனது வருடங்கள் இருபத்தைந்திற்கும் மேலாக! வயிற்றுக்கு அரசுப் பணி மனதிற்கு,,,,,,?என்ன……?என்கிறகேள்வி என்னிலும் என்னைப்

போன்றே பலரிலும் உரைகொண்டிருந்த நேரம் அது.

நேரங்கள்,நொடிகளாய்,நிமிடங்களாய், மணிகளாய் முன்நகர்வுகொண்ட பொழுதொன்றின் புலர்தலில் அகில இந்திய எழுத்தறிவு இயக்க கலைப் பயணித்திற்கு நீவித்திடப்பட்டிருக்கிறாய் என 90 களின்பிற்பகுதியில் அசரீரி யாய் அல்லாமல் நிஜம் சுமந்து ஒருஅழைப்பு. அந்த அழைப்பில் கை கோர்த்தவர்களாய் நான் செல்வம்,நாராயணன்,அழகு,ஆறுமுகப்பெருமாள் ,முத்துச்சாமி,இந்திரஜித், மதனகோபால், உமாசங்கர் மற்றும் வெங்கடே ஸ் வரி மேடம்,பிரேமா மேடம்,பூங்கோதை மேடம்,விஜிலா மேடம் ஆகி யோர் கை கோர்த்தோம். உடன் அன்பின் உருவான ராம்குமாரும்/

திருச்சுழியில் ட்ரெயினிங்நாடகக்குழுவிற்கு.பத்துநாட்களோ,ஒருவாரமோ என்கிறதாய்ஞாபகம்.ஏற்கனவே பாண்டிச்சேரிஅறிவொளி இயக்ககலைக் குழுவில் பங்கேற்று பணியாற்றிய உலைக்களமாக்கல் எங்களுக்கு சிறிது போதுமானதாய்இருந்தது. பின் ஒரு வார காலத்தின் பட்டை தீட்டலில் மெரு கேறி நாற்பத்தைந்து நாட்கள் இம்மாவட்டம் முழுவதும் கல்வியின் அவசியம் குறித்த நாடகங்களைபகலில் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளிலும்,மாலை கிராமங்களிலுமாய் நடத்தி வந்தோம்.பதினைந்துபேர் வரை கொண்ட ஒரே குழு.

அது பயணித்தநாட்கள்.,பயணத்தினூடேசுமைகொண்ட எண்ணங்கள், எண்ண ங்களைச் சுமந்து உறை கொண்ட இடங்கள் சாப்பாடு தங்குமிடம் தூக்கம் என இன்னும் இன்னுமாய் நகர்வுகொண்ட மென் மனங்களில் நடத்திய நாடக ங்கள். பேசியவசனங்கள் சென்று வந்த இடங்கள் பார்த்துப் பேசிய மனிதர்கள் என அனைவரையும் பற்றி நாங்கள் பேசிய நேரத்திலும், உரையாடிய பொழுது களிலும் என் மனதிற்கு மிகவும் நெருக்கமாகிப் போனவராய் ஆகிப்போகிறார் ராம்குமார் என்கிற ராம்குமார்.

மெலிந்து ஒடுங்கிய தேகம். யாரோ மிகமிக அவசரமாய் ஓடிவந்து இதற்கு மேல் உன் உடம்பில் சதை போட்டால் நன்றாக இருக்காது எனச்சொல்லி விட்டுச்சென்றது போல் பாரிய உடம்பு.ஒட்டிப்போய் குழி விழுந்த கன்னம்,ஒடுங்கி உள்ளடங்கிய கண்கள். ஏறியநெற்றி.,தலையில் நட்டு வைத் தது போலாய் அலசலாய் இருந்த முடிகள்.அளவிற்கு மேல் இருந்தால் வலிக்கும் உடலுக்கு என்பதாலோ என்னவோ மிகச்சொற்பமாய் எலும்புக ளையும் அதை மூட சதையையும் கொண்டவராய் தெரிந்தார். அதனாலெ ன்ன எலும்பும்சதையும் மட்டுமல்லவே உடல். உள்ளமும் உயிரும் மேலோங்கிய உணர்வுகளின் கலவையும்தானே உயிர்,,,,,, இல்லையா? என ராம்குமாரிடம் உரிமையுடன் கேட்கும் நாட்களில் அவரைஒருமையில் பேசி அழைக்கிற நெருக்கம் பெற்றிருந்தேன்.அந்த நெருக்கத்தினூடான நாட்களில் வழக்கம் போல ஒரு நல்ல மாலையில் நாடகங்கள் நடத்திவிட்டு கிளம்பலாம் எனநினைத்த வேளை கனிந்து நின்றிருந்த வானம் யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் அவிழ்ந்து கொள்கிறது.

பின் என் செய்ய. மழை பெய்த ஒரு மணி நேரமும் ஒருஅரசுஉயர்நிலைப் பள்ளியின் தாழ்வாரத்தில் நிற்கிறோம். பெய்து கொண்டிருந்த மழையின் அடம் குறைந்து பூவானம் தூவி நின்ற நேரம்.பள்ளியின் தாழ்வாரத்தில் நாங் கள் அனைவரும் நின்று கொண்டிருக்க எங்களின் பின்னே யாருக்கும் தெரியாமல் தூசி படர்ந்தசிமெண்ட் தரையில் கையது கொண்டு மெய்யது போர்த்தி அமர்ந்திருந்தான்.மேலில் போர்த்தப்பட்டிருந்ததுண்டு அவன் உடல் நடுக்கத்தை கூட்டிக்காட்டியது.புரிந்து போகிறது எனக்கு. வழக்கம் போல் அவருக்கு உடல்நிலைசரியில்லை என்பதை டீம் கேப்டன் செல்வம்

அவர்களிடம் கூறிவிட்டு எங்களை ஏற்றிச்செல்ல வரும் வேனுக்காய் காத்தி ருந்தோம்.

நாங்கள் நின்ற பள்ளிக்கும் வேன் நிற்கிற இடத்திற்கும் ஊடாய் வாறுகால் தோண்டப்பட்டுக்கிடக்கிறது.ஆகவே நீங்கள்அனைவரும் வாறுகால் கடந் து வந்து விடுங்கள் வேன் நிற்கிற இடத்திற்கு என்றொரு சமிக்சை வருகிறது. சரி கடந்து விடலாம்.

தினந்தோறுமாய் கல்வி கற்க பிள்ளைகள் கடந்துவருகிற வாய்க்காலை கல்வியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு நாடகங்கள் நடத்துகிற நாம் கடக்கமுடியாதாஎன்ன?என்கிறமன மேவியில் ராம்குமாரைப் பார்க்கிறேன்.

நீங்கள் இருக்கையில் எனக்கென்ன மனக்கவலை என்கிறவனாய் என்னைப் பார்க்கிறவன் கையூன்றியும் என்கை பிடித்துமாய் எழுகிறான். தோண்டிப் போடப்பட்டிருந்த வாய்க்கால்வரை என் தோள் பிடித்து வந்தவன் வாய்க் கால் பள்ளத்தை நோக்கியதும் மலைக்கிறான்.

என்ன செய்வது இப்பொழுது என நின்ற சமயம் அதோ அங்கே கொஞ்சம் மேடாய் தெரிகிறது வாய்க்கால் அங்கே சென்று ஏறிக் கொள்ளலாம் என

மேடேறிய ஓடைப்பகுதியில் இறங்கினால் இதற்கு அதுவே தேவலை என்றாகிப் போகிறது என்ன செய்ய பின்னே? சற்றும் யோசிக்காமல் நான் ராம் குமாரை எனது முதுகில் உப்பு மூட்டை ஏறச்சொல்லி கறையிறக்கி விடுகிறேன்.எங்களது நாடகக்குழுவினூடாய் ஒரு பழக்கம் இருந்தது.

நாடகம் நடத்திவிட்டு இரவு எந்நேரம் வந்தாலும் ரவுண்டாய் அமர்ந்து அன்றைய நாடகங்கள். நடத்திய இடங்கள் அதன் குறை நிறை எல்லாம்

கலந்து பேசுவோம் .அப்படிப் பேசுகையில் எனதருகில் அமர்திருந்த ராம் குமார் அண்ணா உங்கள் மடியில் படுத்துக்கொள்ளட்டுமா சிறிது நேரம் எனக் கேட்கிறான்.

மடியில் என்னடா தம்பி. என் மனதிலேயே உனக்கு மெத்தையிட்டு வைத்திருக்கிறேன். இப்போதைக்கு எனது மடியில் படுத்துக்கொள்ளடா என் தம்பி என்கிறேன்.

அவன் அன்று படுத்த மடி இன்றும் கனக்கிறதாகவே,/

இத்தனைக்கும் அகில இந்திய எழுத்தறிவு விழிப்புணர்வு கலைக்குழுவிற்கு செல்லும் வரை நான் அவனைப்பார்த்ததில்லை,அவன் முகம் எனக்கு பரிச்சயம் இல்லை, அவன் கறுப்பா சிவப்பா தெரியாது,அவன் யாரெனக் கூட அறிந்ததில்லை.
பின் எப்படி அவன் பற்றிய கழிவிரக்கம்,அதுவும் இத்தனை வருடங்கள் கழித்து./

தன் வாழ்தலில் சாதனை என இனி ஏதும் இல்லை.தனக்கு வாழ்நாள் என இனி இருப்பது அபூர்வமே,உடல் கொண்ட நோய் உதிரம் குடித்து உயிரை போக வைப்பது உறுதி ,ஆகவே நாம் மறையப்போகும் முன்னாவது இப்பூ உலகிற்கும் அதில் குடிகொண்ட மனிதர்களுக்குமாய் எதாவது செய்து விட்டுப் போக வேண்டும் என்கிற அவனது நினைப்பு அவனை அகில இந்திய எழுத்தறிவு இயக்க பிரச்சார கலைப்பயணத்தில் பங்கேற்கச் செய்கி றது, தான் நடித்துக் கொண்டிருக்கும் போதும்,தன் மறைவிற்குப்பின்னாலும் தான் நடித்த கல்வி குறித்த விழிப்புணர்வு பேசப்படவேண்டும் என நினைத்த அந்த எளிய மனதினன் என்னில் உயர்ந்து நிற்கிறான், ஆண்டுகள் இத்தனை ஆகியும்,,,,./ 

என்னிலும் இயக்கத்திற்கான அர்ப்பணிப்பிலும் உயர்ந்து நின்ற ராம்குமாரின் நினைவைப் போற்றுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக