ஞாயிறு, 10 மே, 2020

நட்ட கல்லு,,,

வருகிற வழியில் அவரைப்பார்க்கிறேன்.சலூன் கடை வாசலில் அமர்ந்திருக் கிறார்.

ஆளரவமற்ற வீதி,வீதியெங்குமாய் வழக்கமாய் குடிகொண்டிருக்கும் கடை கள் இல்லை,டீக்கடை,ஹோட்டல்,பலசரக்குக்கடை,டெய்லர் கடை வாட்ச்க் கடை ,,,,ம்ஹீம் எதுவும் விழிப் படலத்திலிருந்து விலகியே/

விழி கழண்ட பார்வை உருண்டோடி பார்த்த இடம் யாவுமாய் காலி பட்டுத்தெரிய ஓடோடி வந்து ஒட்டிக்கொண்ட விழிகள் இரண்டும் ஊர்ஜிதம் செய்து விட்டுச்செல்கிறது எதுவுமற்றுக் கிடக்கிறது வீதி என,,,/

மணி ஆறு இருக்கலாம்,

ஒரு மணியுடன் மூடி விட்டிருந்தார்கள் எல்லாவற்றையும்.மூடப்பட்டிருந்த கடைகள் யாவும் மனித முகங்களின்றி வெற்றுக் கூடுகளாய் காட்சியளிக் கின்றன.

தராசும், படிக்கல்லும், மீன்காரம்மாவும், காய்கறிக்கார அக்காவும் ,கோழிக் கடைக்காரரும் இன்னும் இன்னமுமானவர்களும் வெறுமனே நிமிட நேர இடை வெளிகளில் காணாமல் போனார்கள்.

சரி, எல்லாம் தீர்ந்து போகிறது, காய்கறி கடைக்காரியின் பேச்சு,சிரிப்பு, உசாவல்,விசாரிப்பு,அவர்களின்பிழைப்பு,ஆதங்கம்,,,வடைக்கடைக்காரரின் சிரிப்பு மாறா முகம்,பெரியண்ணனின் பலசரக்குக் கடையில் குடிகொண்ட மனம்,,இன்னும் இன்னமுமான எல்லாவற்றிற்குமாய் நேரம் நிர்ணயித்து கால அடைப்பு போட்டது போல மனதிற்கு போட முடியவில்லைதான்.

”அதுவரைக்கும்தான் சொல்லும், செயலும்,பேச்சும் உறவும் என்றால் அன்றாடம் முளைத்துக் கிளைத்தவைகளை தீயிட்டு பொசுக்கி விடுவதா,,,? தெரியவில்லை.

காலையில் பணிக்குச் செல்லும் போது திறந்திருந்த கடை இப்பொழுது பூட்டி இருக்கிறது.

காலையில் கடை வாசலில் இருந்த குதூகலம் இப்பொழுது யாரோலோ பிடுங்கி எறியப்பட்டது போல் தெரிகிறது.

மண்பிளந்து துளிர்த்து வளர்ந்து கிளைத்து பூவும் பிஞ்சும் காயும் கனியுமாய் நிற்கிற நிறை மரம் ஒன்றை அதன் மணத்துடன் சடுதியில் யாரோ தட்டி எடுத்து வெட்டிக்கொண்டு போய் விட்டதாக தோணியதுதான்,

கடைக்கு எதிர்த்தாற் போல் இருந்த வீட்டில் வாசலில் தெளித்த தண்ணீர் காயும் முன்னதாகவே வரைந்திருந்த கோலம் தரையில் அழுந்தப்பதிந்து காணப் பட்டது,

அழுந்திய பதிவுகளை காண கண்கள் கோடி வேண்டும்.இட்ட புள்ளிகளும் அதைச்சுற்றிவரையப்பட்டகோடுகளுமாய்நகன்றுகொண்டிருக்கிறவாழ்க்கை இது என்று சொன்னால் மிகையாய் தோணி விடப்போவதில்லை,

பார்த்துப் பார்த்து பண்ணிப்பண்ணி நல்லது எது கெட்டது எது,யார் அருகாமை வேண்டும் யாரிலிருந்து விலகி இருக்க வேண்டும்,எந்த வீதியில் வீடு பார்த்து குடி போகலாம்,செல்கிற வீடும் அருகாமை மனிதர்களும் பழக்கமும் பாங்கும் மனதிற்கும் மற்றவைக்கும் ஏற்றதுதானா அல்லது அது அற்றதா,,வயசுப்பிள்ளையை வைத்துக்கொண்டு மடியில் கட்டிய நெருப்பை எப்பொழுது கீழே இறக்கி வைப்பது எனத்தெரியாமல் முழித்துக்கொண்டு திரிய வேண்டிய கட்டாயம் எத்தனை நாளைக்கும் எத்தனை பொழுதுக்கும் ஆட்பட்டதும் விதிக்கப்பெற்றதும் எனத்தெரியவில்லை,

என் வீடு என் மக்கள் என் வாழ்க்கை என இருப்பது தாண்டி எதுவும் யோசிக்க சூழல் அனுமதிக்குமா தெரியாது, மிகைப்படுத்தப்பட்டதாய்அன்றி சாதாரண ங்களில் நகன்றாலே நல்லதுதானே,,,?

”நல்லதுதான் நல்லதுதான்,ஒங்களுக்கு எல்லாம் நல்லதாத்தான் படுது, கெட்டதா எதையும் பாக்கத்தெரியாத கண்ணுக்கு பாக்குற எல்லாம் நல்ல தாத்தான் தெரியுது,அந்த வகையில நான் குடுத்து வச்ச ஆளு, என்றவளாய் சட்டைக் காலரைப் பிடித்து முன்னிழுத்து கண்ணத்தைக்கடித்து வைத்தாள்.

”சும்மா இரு லூசு,பெரியவ உள்ள படிச்சிக்கிட்டு இருக்கா,சின்னவ அவ பக்கத்துல உக்காந்துக்கிட்டு இருக்கா”,என்கிறான்,

“வழக்கமா இது நீ சொல்ற வசனம்,இப்ப நான் சொல்ல வேண்டியதா இருக்கு” என்கிறான்,

”இப்ப என்ன வசனமும் செய்கையும் ஒங்களுக்கு மட்டுந்தான் சொந்தமா என்ன?கற்பு மட்டுந்தான் ஆணுக்கும் பொண்ணுக்குமான சொந்தமா,,,,,? காதலும் காமமும்கூடத்தான”,,,,,என்றவள் ஓடோடி வந்து தோளில் சாய்ந்து கொள்கிறாள்,,,/

பாவனை நிறைந்த உலகம், உதட்டுச்சாயமும்,தலைக்கு இட்ட மைப்பூச்சும், முக அலங்காரமும் உடை மிகையுமாய் நகர்வு கொள்கிற வாழ்க்கையில் பார்ப்பதும் பேசுவதும் சிரிப்பதும் பரிமாறிக்கொள்வதுமாய் உறை கொள்கிற வாழ்வின் தருணங்கள் மிக மென்மையாகவே,,,/

சென்ற வாரம் முடிவெட்டிக்கொள்ள சென்றிருந்தபோது போது கடைக்கார் சொன்னார்,ரொம்ப கெடுபிடி சார்,கடைக்குள்ள முடி வெட்டிக்கிற ஆள் தவிர்த்து வேற யாரும் உக்காந்துருக்கக்கூடாதுன்னு சொல்றாங்க சார் மீறி யாராவது உக்காரவச்ச ஒடனே கடையப்பூட்டுன்னு சொல்றாங்க போலீஸ் காரங்க,நமக்கு எதுக்கு வீண் வம்புன்னு எவ்வளவு தெரிஞ்ச ஆளா இருந்தா லும் கடைக்குள்ள அனாவசியமா நிப்பாட்டுறது இல்ல,சார் என்றவர் மீறி நிக்க வைச்சா பொழப்புப்போயிரும் சார்,என்றார்,

அப்பொழுது கடைக்குள் நுழைந்த இரண்டு பேரை தம்பி கோவிச்சிக்கிறாம கடையோட வாசல்ல ஒக்காந்துக்கங்க தம்பி,போலீஸ்காரங்க வந்து கேட்டா முடிவெட்டிக்க வந்தேன்னு சொல்லுங்க தம்பி என்றார்,

பையனைச்சேர்த்து மூன்று பேர் கடை வாசலில் உட்கார்ந்து இருந்தார்கள், கடைக்குள் அமர்ந்திருந்த நான் படியில் அமர எழுந்த போது சார் சார் நீங்க உக்காருங்க ,அடுத்தது நீங்கதான் என்றார்,

இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே வெட்டிக்கொள்ள வேண்டிய முடி, கொஞ் சம் முடி கூடி விட்டால் பார்க்க அசிங்கமாகிப்போய் விடுகிறது, தவிர்த்து முடி கூடிப்போகும் நேரங்களில் தலை வலி வந்து விடுவது தவிர்க்க இயலாமல் ஆகிப்போகிறது, இது தவிர்த்து குளித்தவுடன் தலை காயாமல் இருப்பது, தலையில் நிறைந்திருக்கிற முடியிலிருந்து எண்ணெய் வழிவது போலான தொந் தரவுகளை தவிர்க்கவாவது முடி கூடிப்போக விடாமல் பார்த்துக் கொள்வான்,

இந்த பொழப்புக்காகத்தான சார் ஊர்லயிருந்து நித்தம் பதினைஞ்சி கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் மிதிச்சி இங்க வர்றேன் என்றார்,

எப்பயோ வாங்கிப்போட்ட சைக்கிளு, இப்ப ஒதவுது சார்,போக வயித்து ஆத்திரமுன்னு ஒண்ணு இருக்குல்ல சார்,

தினமும் இங்க வராம சொந்த ஊர்லயே தொழில் பண்ணலாமந்தான் சார், அங்கயும் வாய்ப்பு வசதி இருக்குதான்,நம்ம சொந்தக்காரங்கப்பயலுக ரெண்டு பேரு கடை போட்டுருக்கான்,அங்கயின்னா நான் சம்பளத்துக்குப் போயி நிக்கணும்,இங்கயின்னா நாந்தான ஓனரு சார்,

ஏங்வீட்டம்மாவுக்கு சொந்தக்காரப்பயதான் கடை வச்சிக்கிறவன்,நம்ம மேல ரொம்ப மரியாதையான பையன்,நம்ம போயி வம்படியா அவன் மடியில போயி ஒக்காந்துக்கிட்டு மரியாதையக்கெடுத்துக்கக்கூடாது, என்றார்.

நமக்குன்னு சொந்தத்துல ஒண்ணு இருக்கும் போது அது எதுக்கு சார் இழி பொழப்பு, நான் வேர் விட்ட மண்ணு இதுதான்னாலும் கூட விழுத இங்கயில்ல யெறக்கி விட்டுருக்கேன் சார்,என்றவர் எனக்கு முன்பாக அமர்ந்திருந்தவ ருக்கு முடி வெட்டி ஷேவிங் பண்ணி முடித்திருந்தார்,

ஒல்லி யாய் சிவந்து கசலையாய் தெரிந்த அவர்.அரைக்கை சட்டை அணிந்தி ருந்தார், கட்டம் போட்ட ஊதாக்கலர் கைலி சட்டைக்கு பொருத்தமாய் இருந்தது.

கைலியை மடக்கிக்கட்டியிருந்தார்.அவர் தொடைக்கு மேல் கைலியை தூக்கிக் கட்டி எப்பொழுதுமே இவன் பார்த்ததில்லை.மறந்து போய்க்கூட அப்பிடியெல் லாம் செய்ய மாட்டேன் சார் என்பார்,ஏனென்றால் அப்படி தூக்கிக் கட்டுவது எதிர் படுகிறவர்களை அவமதிப்பது அல்லது அவர்களை மரியாதை இல்லாமல் நடத்துவது எனவுமாய் சொல்வார்,

அவர் அப்படி இருக்க அவரது கடைக்கு விடலைகள் சிலர் தொடைக்கு மேல் கைலியை தூக்கி உருட்டுக்கட்டுக்கட்டிக்கொண்டு வருவதை பார்ப்பது தவிர்க்க இயலாமல் போய் விடுவதுண்டுதான்,

அப்படி வர்றவுங்கள ஒண்ணும் செய்ய முடியாது சார்,சொன்னாலும் கேக்க மாட்டானுங்க,யெளவட்ட முறுக்கு,யெளம் ரத்தம்,தாய்மார்க பையன்கள கூட்டிக்கிட்டு முடி வெட்டுறதுக்காக வருவாங்க,அவுங்க வர்ற யெடத்துல இப்பிடி வர்றது நல்லாவா இருக்குன்னு கேட்டா அப்ப எங்கள கடைக்கி வர வேணாமுன்னு சொல்லுறயாண்ணேன்னுட்டு கொஞ்சம் எதிர் வாதம் பண்ணு வாங்க,ரெண்டு வம்பு பேசுவாங்க,அவுங்களுக்கு அதுதான் பொழப்பு,. ஆனா நமக்கு அதுல்ல வேலை,பொழப்பு கெடக்கு சார் நீண்டு போயி,,,,,/ 

கடைக்கு வர்ற ரெண்டு மூணு பெரிய ஆள்ககூட இப்பிடித்தான் வருவாங்க ,நான்கூட அவுங்ககிட்ட சொல்றது உண்டு ,எதுக்கு இப்பிடின்னு ,புரிஞ்சிக் கிருவாங்க.சரியா,சரி தம்பி நீ சொன்னா தப்பா இருக்காதுன்னு ஏத்துக்கிரு வாங்க , என்பார் கடைக்கார்.

எட்ட வந்து கொண்டிருக்கும் போது சலூன் கடை வாசலில் உட்கார்ந்திருப்பது அவர்தான் எனப்புரியவில்லை.

அருகில் வர வர பிடிபட்டுப்போன அவரின் பிம்பத்தை இன்னார்தான் அவர் என நினைத்தவன் இரு சக்கரவாகனத்தின் வேகம் குறைத்து அவரருகில் போய் நிறுத்த வேண்டும் என நினைத்தவனாய் அவரை நோக்கி ஊர்ந்தவன் அவருக்கு பத்தடி தூரத்திற்கு முன்னதாகவே நிறுத்தி விடுகிறேன், ”எண்ண ன்னே நல்லாயிருக்கீங்களா,,,,”என்கிற ஒற்றைவார்த்தையைமுன்னிருத்தி,,,,/

நேற்றைக்கு முன் தினம் காலை அலுவலகம் கிளம்புகிற போது செல்போனை வீட்டில் விட்டு விட்டதாய் நினைத்து சிறிது தூரம் வண்டியில் சென்றவன்  திரும்ப வருகிறான் வீட்டிற்கு.

வீட்டில் வந்து வாகனத்தை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தும் போதுதான் பேண்ட் பை கனக்கிறது,ஆகா தோள்ல ஆட்டைப்போட்டுட்டு தேடுன கதையா ஆகிப் பேச்சே என வீட்டிற்குள் நுழைந்து தண்ணீர் குடித்து விட்டு செல் போனை எடுத்து பேண்ட் பாக்கெட்டிலிருந்து எடுத்து சட்டைபைக்குள்ளாய் போட்டுக் கொண்டு கிளம்புகிறான்,

இவனது தெரு சந்தை கடக்கும் போது இப்பதைக்கு மாச சம்பளக்காரங்க தான் குடுத்து வச்ச ஆளுங்க,எனப்பேசிக்கொண்டிருந்த நான்கைந்து பேரை தாண்டி வருகிறேன்,

இப்போதைக்கி வெறும் பேச்சாக இருக்கிற இந்த சொல் எப்போது பொறாமையாகவும், கோபமாகவும் மாறுமோ தெரியவில்லை, குடிகொண் டி ருக்கிற கோபங்கள் உருக்கொள்கிற போது அதற்கு பலம் ஜாஸ்தி என்பா ர்கள்.மாதக்கணக்கில் நின்று போன வருமானம் ,வீட்டில் பசியுற்று இருக்கும் மனைவி,பிள்ளைகள் புறம் பேசும் சமூகம் அக்கம் பக்கம் என எதைப் பார்க்கிற போதும் கூசிக்குறுகி நிற்கிறவ ர்களின் கோபம் உடனடியாய் மடை மாற்றப்படுவது மாதச்சம்பளம் வாங்குறவர்களை நோக்கியும் அரசு ஊழியர்களின் மீதுமாய் பாய்வதில் ஆச்சரியம் இருந்து விட முடியாது தான்,காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சாய் படுவது போல் எவ்வளவு வறிய நிலையில் வாழ விதிக்கப்பட்டவர்களாய் இருந்த போதும் கூட தன் வாழ்க் கையை தன் கைக்குள்ளாய் வைத்திருக்கிற அழகு தன்னளவில் அவர்களுக்கு வாய்க்கப்பெற்ற வரமாய் இருக்கிறதுதான்.

ஆனால் அதை மீறி வரை பட்டவராய் சலூன் கடை வாசலில் அமர்ந்திருந்தவர் தெரிகிறார்,

”நல்லாயிருக்கீங்களா,,,”எனக்கேட்டிருக்கக்கூடாதுதான்.அது இந்த நேரத்தில் அந்நியப்பட்டு நிற்கிற வார்த்தையாய் தெரிகிறது அவரிடத்தில்,,/

அவரை நான் அதிகம் பார்த்ததில்லை,அவர் இவனது உறவோ இல்லை சுற்றம் என்கிற வளையத்திற்குள்ளாகவோ வந்து விடுகிறவர் இல்லை.

அவ்வப்பொழுதுகளில் டீக்கடை அல்லது வேறு எங்காவது பார்க்க நேரிடுவதுண் டுதான்,

தம்பி ஒரு மாசமாகிப்போச்சி வேலையின்னு எங்கயும் போயி,வீட்டுல அரிசி பருப்பு அரசலவு எதுவும் இல்ல,சும்மா இருந்தாலும் பசிக்கும்தான வயிறு, வீட்டுக் காரி நாலு வீடுகளுக்குப்போயி வீட்டு வேலை செஞ்சி கொண்டு வர்ற காச வச்சிதான் தம்பி வண்டி ஓடுது,போக அவ வேலை செய்யிற வீடுகள்ல இருந்து கொண்டு வர்ற ஏதாவது தின்பண்டம் சாப்பாடு இதுகதான் இப்பதைக்கி வயித்தக் கழுவுது,நல்ல வேளை புள்ளைங்க இல்ல, கட்டிக் குடுத்து வெளியில போயிட்டா ங்க, இல்லையிண்ணா அதுக்கும் சேர்த்துப் பாக்கணும் என்றார், மத்தபடி வேற எதுவும் ஒண்ணும் இல்ல தம்பி, எங்கிட்டாவது வாட்ச்மேன் வேலை இருந்தாக்கூட சொல்லுங்க தம்பி,இப்பிடி தொண்ணாந்து போயி ஒக்காந்துக்கிட்டு யாரையாவது எதிர் பாத்து காத்துக் கெடக்குறது ரொம்ப வெக்கமா இருக்கு தம்பி, என்றவர் கையில் ஒரு நூறு ரூபாய் தாளை தருகிறேன், வாங்க மறுத்தவரின் சட்டைப் பையில் வம்படியாய் ரூபாய்த்தாளை வைத்து விட்டு நகர்கிறேன்,

அவர் எனது உறவினரெல்லாம்இல்லை.ஆனால்இப்போது உறவாகித் தெரிகி றார், அவர்எனது நண்பர் இல்லை,நட்பாகிப்படர்கிறார், அவர் எனது தோழர் இல்லை, ஆனால் தோழமைகளில் பூக்கிறார்,அவர் எனது அக்கம் பக்கமெல் லாம் இல்லை, ஆனால் மனம் கோர்த்து ஆகர்சித்துத்தெரிகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக