புதன், 18 மார்ச், 2020

வெங்காயத்தோலு,,,,,

வெங்காயம் விற்ற வண்டிகளிலெல்லாம் வெள்ளைப்பூண்டு விற்க ஆரம்பித் திருந்தார்கள்.

கிலோரூபாய் நூறு என்றார்கள்.பரவாயில்லை.பார்ப்பதற்கு நன்றாக தெரிந் தது, இன்னும் புழக்கத்தின் போது எப்படி இருக்கும்,எத்தனை நாள் தாங் கும் என்பது உறுதிபடத் தெரியவில்லை,

கடைகளில் பொதுவாக இவ்வளவு வெள்ளையாக வாங்கியதாய் ஞாபகம் இல்லை,பளீரெனச்சிரிக்கிற மனம் பிடித்த காதலியின் முகம் நினைவுக்குள் வந்து போவது தவிர்க்க இயலாமலேயே/

நினைவில் நிற்கிற நாட்களில் மட்டுமல்லாது மற்ற நாட்களிலும் கூட சந்திக்கப் போவதுண்டு,

சுகாவை இவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.

சுகா என்றால் இவனுக்கு இஷ்டம்,சுகா என்றால் இவனுக்கு அன்பு,சுகா என்றால் மனதில் அலை பாயும் உணர்வு,சுகா என்றால் காற்றில் கலந்து வந்த மிகை,,,சுகா என்றால் இவனின் உயிர்,சுகா என்றால் இவனின் உணர்வு, அவள் இன்றி இவனா,இவனன்றி அவளா நினைத்துப்பார்க்கக் கூட அச்சமாய் இருக் கிறது,,,,என இன்னும் இன்னுமாய் யோசிக்கிற இவனின் உணர்வுகளுக்கு ஈடாய் தெரிந்த அவளை உளமாற நேசித்தான்,

இங்கிருந்து என் ஜி ஓ காலனி போக வேண்டும்,அத்தை வீட்டுக்குப் பக்கத்தில் அவர்கள் குடியிருந்த போது ஏற்பட்ட பழக்கம்,

ப்ரௌசிங்க் சென்டருக்கு வருவாள்.இவன் எப்போதுமே கைதேர்ந்த பைத் தியக் காரனைப்போல பேப்பரும் கையுமாக ஜெராக்ஸ் பிரிண்ட் அவுட், பென் டிரைவ்,,,,என மேட்டரும் கையுமாக அலைபவன்.

பெரும்பாலுமாய் கதைகள் கருக்கொண்டிருக்கும் பென் டிரைவை பிரௌவ் சிங் சென்டரில் கொடுத்து விட்டுப்போய் விடுவான்,பிரிண்ட் அவுட் எடுத்து வைக்கச்சொல்லிவிட்டு ஒரு மணி கழித்தோ அல்லது மறுநாளோ வாங்கிக் கொள்வதுண்டு.

அப்படியான ஒரு நாளில்தான் பழக்கமானாள் அவள்.பிரிண்ட் அவுட் எடுத்த பேப்பரை கையில் வைத்துக்கொண்டு பிரௌசிங்க் சென்டர் வாசலில் நின்ற பொழுது,

நன்கு வளர்ந்து பருத்த மரம்,எப்பொழுது முளைகொண்டது என யாருக்கும் தெரியவில்லை,யாரும் அறியவில்லை.

மூன்றாவது கதையின் நான்காவது பக்கத்தில் அத்தை மகள் என்பதற்குப் பதில் ”அத்தைத்தையின் மகள் என டைப் அடித்து வைத்திருந்தான்,அது இப்போதுதான் புடிபடுகிறது,திருத்தம் வேண்டி உள்ளே கொண்டு போக திரும்பிய பொழுது எதிர்பட்ட அவள் சில்லிட்டு இதம் தந்த வேப்பமர இலைகளின் பூம்பிஞ்சி வாசனையுடனும் மென்மை சுமந்துமாய் காணப் பட்டாள், அப்படி தலைக்குக் குளித்திருந்திருப்பாள் போலும், முடியை அள்ளி முடியாமல் விரித்து விட்டு முடியின் நுனியில் முடிச்சுப் போட்டிருந்தாள், விரிந்து பறந்திருந்த முடி காற்றில் அலைந்து ஒற்றை ஒற்றை யாய் பிரிந்தா டியது பார்க்க நன்றாக இருந்தது,பெரிதாகவும் இல்லாமல் சிறியதாகவும் இல்லாமல் சிவப்புக்கலரில் அவள் வைத்திருந்த பொட்டு நன்றாக இருந்தது, கழுத்தில்தொங்கியஒற்றைச்செயின்அவளது நிறத்திற்கே,,,/வெளிர் மஞ்சளில் அங்கங்கே எம்ராய்டரிங்க் வைத்த டாப்ஸீம், காக்கிகலர் பேண்டும் பார்க்க நன்றாக இருந்தது,ஆ,,,,சூப்பர் அப்படியே தூக்கி ஒரு சுற்று சுற்றி விடலாம் போலிருந்தது,கண் இமைக்காமல் இப்படியாய் ஒரு வயசுப்பிள்ளையை பார்ப்பதும் தவறுதான் என எண்ணியவனாய் பார்வையை திருப்பிக்கொண்டு பிரௌசிங்க் சென்டருக்குள்ளாய் நுழையப்போனவனை தடுத்தாட் கொண்ட குரலாய் அவளது பேச்சு,

கதையெல்லாம் எழுதுவீங்களா நீங்க,நேத்து பிரிண்ட் அவுட் எடுத்து வைச்சி ருந்த பேப்பர்லயிருந்து ஒண்ணு பறந்து வந்து சென்டருக்குள்ள நெழையப் போன ஏங் முன்னாடி விழுந்துச்சி,நான் கூட மொத்தல்ல எதாவது ஜெராக்ஸ் எடுத்த பேப்பரா இருக்குமுன்னு கடந்து போக நெனைச்சப்ப எதுக்கும்  எடுப்போமுன்னு எடுத்துப்பாத்த நல்ல கதையோட ஒரு பக்கம்,ஆகா அப்ப மிச்சம் உள்ள இருக்கான்னு அவரு தரமாட்டேன்னு சொன்னத அவருகிட்ட யிருந்து கேட்டு வாங்கி படிச்சிட்டு இன்னைக்கி ஒங்கள பாக்கலாமுன்னு இருந்தேன்,நல்லவேளையா நீங்களே கண்ணு முன்னாடி வந்து நிக்கிறீங்க, பொதுவா கும்பிடப்போனாலும் சரி குறுக்க போனாலும் சரி தெய்வங்கள் இப்பிடி குறுக்க வந்து நிக்குறது தவிர்க்க இயலாம போயிறது உண்டு தானே,,,, அது போல நீங்க,என்றாள்,

இவனுக்கென்றால் ஜிவ்வும் சிரிப்புமாய் ஒரு சேர்ந்து வர எதை முதலில் வெளிபடுத்துவது என கலங்கி நிற்கிறான்,

இதில் முதலிடம் பெற்றது ஜிவ்வுதான்,மனம் கொஞ்சம் லேசாகியும் குஞ்சரம் கட்டியது போலவுமாய் ஆகித் தெரிந்தது,

ஊலா,லா,லா,,,,,,,,,,ஆகா மேலே மேலே பறக்க ஏதுவாய் றெக்கைகட்டிக் கொள்கிறதுதான் மனம்.

இதற்குத்தானே காத்திருந்தாய் இத்தனை நாட்களாய் என்பது போல் இல்லாமல் இயல்பாகவே அவளில் ஈடு கொள்கிறவனாய்,,,/

அப்பிடியெல்லாம் இல்லை ,நான் தெய்வமும் இல்லை நீங்க பக்தையும் இல்ல,என்கிறஇவனின் சொல்லுக்கு சிரித்தவள் அப்பிடிச்சொல்லல நானு, தெய்வங்கள திடீர்ன்னுதான் பாக்கமுடியும் ,அது போல காத்திருந்துதான் ஒங்கள பாக்கமுடியுது ,அதத்தான் சொல்றேன் என்றாள்.

இவன் எழுதிய கதைகள் பற்றி பேசினான்.அவள் படித்த கதைகள் பற்றி பேசினாள்.பேச்சு பேச்சாகவே இருந்த நேரத்தில் அரும்பிய காதலுக்கு ஏது முன்னுரை,,,,,

அன்றைய முன்னுரையின் முடிச்சு சிறிது நாட்கள் வரை புள்ளியிட்டு கோலம் போடப்பட்டு தொடர்ந்ததாய்,,,,,/

ப்ரௌசிங் சென்டர்க்காரர் கூடச்சொன்னார்.சார் வேணாம் அதெல்லாம் ஒத்து வராது ஒங்களுக்கு,,,உள்ளுக்குள்ள ஏதாவது ஆசைய வளத்து அத பூவும் பிஞ்சுமா காய்க்க விட்டுக்கிறாதீங்க,பின்ன அது வேரோட அறு பட்டு சாயும் போது சங்கடபட்டும் காயப்பட்டும் போவீங்க, பாத்துக்கங்க, நாங்க மூணாவது மனுசன்,அவ்வளவுக்குள்ளதான் பட்டும் படாம சொல்ல முடியும், ஒங்களுக் கென்ன தங்கத்துக்கு நல்லா படிக்கிறீங்க,நல்லா எழுது றீங்க, நல்ல பேரு இருக்கு ,அத விட என்ன வேணும் இந்த வயசுல, எனக்குத் தெரிஞ்சி ஒங்க வயசுக்கு இவ்வளவு யோசிச்சி பேசி,கதை எழுதி அத புத்தகமா போட்ட ஆள நான் பாத்ததே இல்ல,ஒரு பக்கம் காலேஜீ படிப்பு,ஒருபக்கம் மனசுக்குப்பிடிச்ச எழுத்து படிப்பு,,,நாளைக்கு கையில கெடைக்கப்போற நல்ல உத்தியோகம்,,,, இப்பிடியெல்லாம் இருக்கும் போது எதுக்குப்போயி நீங்க,,,,,,,என்றார்,

அவரது பேச்சு பேச்சாக இருந்த நேரத்தில் எ ன் ஜி ஓ காலனி வரை இவனும், டவுனுக்குள் ஏதாவது வேலையை சுமந்தவளாய் அவளுமாய் வந்து போய்க் கொண்டிருந்த நாட்களில் இவன் மனம் ஈர்த்தவளின் தந்தைக்கு டிபார்ட் மெண்டில் இடமாறுதல் என வெளியூருக்குச் சென்று விட்டார் கள்.

அவர்கள் ஊரை விட்டு செல்வதற்கு முதல் தினமாய் பார்த்தது அவளை,,,/ கோயிலில் நின்றவள் குங்குமம்,திருநீருடன் கண்ணீர் கலந்து நின்றாள், வெளியூரின் வரைபடத்தை கையில் வைத்துக்கொண்டு,,/

அன்று பறந்தவள் இன்றுவரை எந்த திசையில் இருக்கிறாள் எனத் தெரிந் திருக்கவில்லை இவனுக்கு,,/

பஸ்ஸை விட்டு இறங்கியவனுக்கு டீக்குடிக்க வேண்டும் போல இருந்தது, ஒரு மணி நேர பிரயாணம்,

தனியார் பஸ் கிடைக்கும் நாட்களில் இளையராஜாவின் இசை மனதையும் செவியை நிறைத்து விடும் என்பது உறுதி,

அது அல்லாது டவுன் பஸ்ஸில் ஏறுகிற நாட்களில் மனமும் இசைக்கு உத்திரவாதமில்லை.

அன்று டவுன் பஸ்ஸில்தான் வந்திருந்தான்,

அலுத்துப் போயிருந்த உடலுக்கும் மனதுக்குமாய் டீ கொஞ்சம் உற்சாகம் ஊட்டலாம்தான்.

டீக்கும் வடைக்குமாய் ரூபாயைக் கொடுக்கும் போதுதான் ஞாபகம் வருகிறது, வெங்காயம் வாங்கிப்போக வேண்டும் எனவும் அதற்காய் கூடுதலாய் பணம் கொண்டு வந்ததும்.

முக்கு ரோட்டில் இறங்கியதும் வழக்கமாய் கேட்கிற ”நாலுகிலோ நூறு ரூபாய்,,,,அஞ்சி கிலோ நூறு ரூபா,” என்கிற குரல் கேட்கவில்லை.

கடையை விட்டு இறங்கியதும் ரோட்டோரமாய் நின்றிருந்த வேனை பார்க்க முடிந்தது.

வேனை நெருங்கும் போதுதான் தெரிகிறது வெங்காயம் இல்லை என.

சாலையின் இடது ஓரமாய் பரந்து விரிந்து குடை போல் நின்றிருந்த வேப்ப மரத்தின் அருகில் நின்றிருந்த மினி வேனில் அடுக்கப்பட்டிருந்த மூடை களின் ஓரமாய் நின்றிருந்தாள்,

வேனின் பின்புறகதவு லேசாய் திறந்திருந்தது,அதன் இடது ஓரத்தில் அமர்ந் திருந்த அவளது அருகில் அவிழ்க்கப்பட்டு வாய்திறந்த நிலையில் இருந்த வெள்ளைப்பூண்டு மூடையின் அருகில் தராசு இருந்தது,

மினி வேன் அது.

”மொத்தமா வாடைகைக்கு பேசிருவோம்.யேவாரத்துக்கு போற வார ஊர்கள்ல பூரா யெடம் கெடைக்காதுல்ல. அதான் இப்பிடி ஒரு ஏற்பாடு, என்ன இங்க யிருந்து நாலைஞ்சி ஊர்களுக்குப்போவம்,நெரந்தரமா எங்களு க்குனு இந்த யெடம்தான்.

”பொறந்தது வளந்தது ஒரு யெடமா இருந்தாலும் எங்களுக்கு சாப்பாடு போடுறது இந்த யெடமாத்தான் இருக்கு”,

ஐம்பது வயதிற்குற்குள்ளாக இருக்கலாம் அவளுக்கு.உடல் தடித்துப்பாரித்தி ருந்தாள்.அழுந்தப்படிய வாரியிருந்த தலையில் நடு வகிடு எடுத்திருந்தாள். நெற்றிக்கு இட்டிருந்த குங்குமத்தை கொஞ்சம் நடு வகிடின் ஆரம்பத்திற்கும் இழுத்திருந்தாள்,வெளிர்க்கலரில் பொடிப்பூக்கள் தூவியிருந்த புடவை பார்ப்ப தற்கு நன்றாக இருந்தது.அதே கலரில் சட்டையின் கை வலது கைநுனி ஓரம் பிரிந்து தொங்கிய நூல் வெள்ளைக்கலராய் இருந்தது,

சிவப்பு சட்டைக்கு வெள்ளைக்கலர் நூல்,காலடியில் சேலைக்கு கீழாக தெரிந்த பாவாடை மஞ்சள் கலராயும் நைந்து கிழிந்துமாய் தெரிந்தது.

”எப்போஎதுகிடைக்குதோ அதக்கொண்டாந்து விப்போம்.மத்தபடி இதுதான்னு” இல்ல,அனேகமா இன்னும் ஒரு வாரம் கழிச்சி வெங்காயம் திரும்ப வந்துரு முன்னு நெனைக்கறோம்.

”எங்களால உறுதியா எதுவும் சொல்ல முடியல,வெங்காயம் இப்பத்தான் முக்கா வெளைச்சல நிக்குதுன்னு சொல்றாங்க,இத்தன நாளா பெரிய வெங் காயம் வித்துக்கிட்டு இருந்தோம்,இப்ப சின்னது வருத்து வருதுன்னு சொல்றா ங்க,அந்த இடைவேளை வரைக்கும் நாங்க எப்பிடி சும்மா இருக்க முடியும்,,,? அதான் சந்தையில் சலுசா கெடைச்சத போட்டு கொண்டாரம், இதுன்னா அன்றாடம் குடும்பத்துக்கும் கடைகளுக்கும் தேவைப்படுற பொருளு, ரெண்டு மூணு நாளு கழிச்சினாலும் பொருள் அழிஞ்சி போகும், ஆனா மத்தது அப்பிடியில்ல,அந்தா கொஞ்சம் தள்ளி ஒரு வண்டியில பழம் விக்கிறாருல்ல. இதுபோலவாரக்கணக்குலயெல்லாம் வச்சிக்கிற முடியாது, ஒரு ரெண்டு நாளைக்கு வேணுமுண்ணா தாங்கும்,அதுக்கு மேல நம்ம கை நட்டமாகிப் போகும்,அதுக்குதான் இந்த மாதிரி யேவாரமா பாத்து எடுக்கு றது என்றாள் வெங்காயம் விற்றவள்.

பஜாரில் வாங்கலாம் என நினைக்கிற நாட்களில் முடியாமல் போகிறது, அது. வேலை முடிந்து அலுப்பையும், சுமையையும் தூக்கிக்கொண்டு பேருந்து ஏறினால் ஊர் வந்து சேர ஒரு மணி நேரமாகிப்போகிறது,

சமயத்தில் இரவு ஒன்பது மணிவரை கூட ஆகிப் போவதுண்டு.

அதற்குப் பின் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே சாத்தியம்,அன்றும் கூட என்ன விலை விற்கிறதோ அதைப்பொறுத்தே வெங்காயம் வாங்கத்தோன்றும்,

சாலையின் இடது ஓரமாய் பரந்து விரிந்து குடை போல் நின்றிருந்த வேப்ப மரத்தின் அருகில் நின்றிருந்த மினி வேனில் அடுக்கப்பட்டிருந்த மூடைகளின் ஓரமாய் நின்றிருந்தாள்,

வேனின் பின்புறகதவு லேசாய் திறந்திருந்தது,அதன் இடது ஓரத்தில் அமர்ந் திருந்த அவளது அருகில் அவிழ்க்கப்பட்டு வாய்திறந்த நிலையில் இருந்த வெள்ளைப்பூண்டு மூடையின் அருகில் தராசு இருந்தது,

கடைசியாய் வாங்கிய போது நாலு கிலோ நூறு ரூபாய் என வாங்கியதாய் ஞாபகம், அலுவலகம் முடிந்து போகிற மாலை வேளைகளில் வாங்கிக் கொள்ளலாம்என்றால் காலையில் விற்ற விலை மாலையில் மாறிப்போகிற து, அதனால்தான் இப்பொழுதே வாங்கிகொள்ளலாம் என வேனின் முன்னால் போய் நின்ற போது அதுவரை வெங்காயம் புடைத்துக்கொண்டிருந்தவள் தனியாய் குவிக்கப்பட்டிருந்த வெங்காயத்தை அள்ளி தராசில் போட்டாள்.

இவனுக்கு முன்பாய் பெண்ணொருத்தி நின்று கொண்டிருந்தாள்,”ஏங் அவுங்களுக்கு போட்டுட்டு எனக்கு போட வேண்டியதுதானம்மா” என இவன் சொன்ன போது ”இருக்கட்டும் சார் நீங்க பல வேலையா போற வுங்க, அந்தம்மா அப்பிடியில்ல,இனி மதியத்துக்குப்போயி வீட்டுல சோறு பொங்குற வேலை மட்டுந்தான் அவுங்களுக்கு,,,”சாங்காலம் அவுங்க புள்ளைங்க காலேஜ் விட்டு வர்ற வரைக்கும் அவுங்களுக்கு பொழுது இங்கதான் என சுட்டிக் காட்டியவளை ஏறிட்டவன் வெங்காயம் வாங்கிக் கொண்டு வருகிறான் மௌனம் காத்த மனதுடன்,,,,/

அவள் சுட்டிக்காட்டிய பெண்ணிடம் வெங்காயம் வாங்கிக்கொண்டு திரும்பி வரும் போதாவது விசாரித்திருக்கலாம் ”என்ன சுகா நல்லாயிருக்கையா” என,/