ஞாயிறு, 24 மே, 2020

இறகசைவு,,,,,

இறகு போல லேசாகவும் பூப்போல மிருதுவாகவும் இருந்தால்தான் இப்படியாய் பேசவும் சிரித்து விடவுமாய் முடியும் போலிருக்கிறது,

இறகு என்பது ஒரு உயிர்,உயிர் என்பது உடலின் மையம்,மையமாய் உருக் கொண்ட உடல் உயரப் பறக்கிறது,தாழ்கிறது,அமர்கிறது,கைகோர்க்கிறது, கோர்த்த கைகளும், மனமுமாய் சேர்ந்து செய்விக்கிற வித்தை ஒன்றாய் பத்தாய் நூறாய் முளைத்துக் கிளைத்து பூவும் பிஞ்சும் காயும் கனியுமாய் காட்சிகொண்டு படர்கிறதுதான்.

பூ என்பது மொட்டு,விரிவு,மலர்வு,மணம்,,,என எல்லாம் தாங்கியதுதான் , என்கிற நண்பனிடம் இவனால் ஒன்றும் பேசி விட முடியவில்லை,

சிரிப்பு வாய்க்கப் பெறுகிற வரம் தான், தினங்களின் வழக்கத்தில் காலை யில் டீக்குடிக்கச்செல்கிற கடைக்கு வருகிறவர்களில் அவர் மட்டுமே சற்று வித்தி யாசம் காட்டி சிரிக்கிறார், பேசுகிறார், பழகுகிறார், ஓரு வார்த்தை பேசும் முன்னதாய் ஓராயிரம் தடவைகள் சிரிக்கிறார், வேண்டுமென்றோ வலியப் புனைந்ததாகவோ, ஒட்டவைக்கப்பட்டதாகவோ, பட்டுத்தெரிந்து விடவில்லை அவரது சிரிப்பு, உண்மையும் யதார்த்தமுமாய் பட்டு பிரதி பலிக்கிற பெருஞ் சிரிப்பாய் அது.அவர் சிரிக்கச்சிரிக்க சிரிப்பு வருகிறது, அவர் பேசப் பேச பேச்சும் கூடவே நெய்த சிரிப்பும் கலந்து வருகிறது,

இதில் பேச்சிற்கு தனி ட்ராக், சிரிப்பிற்கு தனி ட்ராக் என்பதெல்லாம் இல்லை, இரண்டும் கலந்து விட்ட மகாத்மியமாய் இருக்கும்,அவர் கடைக்கு வந்து விட்டாலே அவரைச் சுற்றி இறகு முளைக்காது பறந்து வந்தமர்கிற கூட்டமாய் மனிதங்கள், அவரது பேச்சிற்கோ இல்லை சிரிப்பிற்கோ மட்டும் கூடுகிற கூட்டமாய் இருக்காது அது, மாறாக அவரிடமிருக்கிற உண்மைக்காய் கூடுகிற கூட்டமாய் இருக்குமேயன்றி வேறில்லை,

பாய் கடைக்கு போவோம் என்பது இவன் எதிர்பாராத ஒன்று.பாய் கடை இவனுக்கு பல் முளைத்த காலத்திலுருந்து பழக்கம்,வாடகைக்கு சைக்கிள் இத்தனை மணி,இந்த இடம் எனச் சொல்லி விட்டுப்போவான் லீவு நாட்களில்,

ஒரு மணி அல்லது இரண்டு மணி நேரம் என்பது இவனுக்கு விடுமுறை தினங்களில் வாடிக்கை,பாய் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேரமும் கடை திறந்திருக்கும்,

அவரது கடை இருக்கிற ரோடே காலியாகிக்கிடக்கிற இரவு வேளைகளில் ஏழு அல்லது எட்டு மணிவரை கூட இவரது சைக்கிள் கடை பள்ளிப்பிள்ளைகளால் நிரம்பியிருக்கும்,

ஞாயிறுகளில் நடமாட்டம் குறைவாக இருக்கிற சாலையில் சைக்கிள் கற்றுக் கொள்வது ஈஸியாக இருக்கும் என்பது சைக்கிளை வாடகைக்கு எடுக்கிற பிள்ளைகளின் நம்பிக்கை,

அவரது கடையிலேயே எடுத்து அருகில் இருக்கிற ரயில்வே ஸ்டேஷன் சாலை யில் சைக்கிள் பழகிக்கொள்வது ஈஸியாக இருக்கும் உடன் வந்து பழகிக் கொடுப்பவருக்கும் தொந்தரவு இல்லாமல் இருக்கும்.இதற்காகவே பள்ளிப் பிள்ளைகள் சனி ஞாயிறின் விடுமுறைக்கு ,பாய் கடையில் வாடகை சைக்கி ளையும் ரயில்வே பீடர் ரோட்டையும் குத்தகைக்கு எடுத்துக்கொள்வது ண்டு,  அதற்காக அவர்கள் வீடுகளில் பிடிக்கிற அடம் கண் கூடு,

பாய் கடை யாரை நம்பி ஓடியது என்கிற வாதம் இங்கு தேவயற்றது என்ற போதிலும் கூட சனி ஞாயிறின் விடுமுறை தினங்களில் அவரது சைக்கிள் கடை யின் ஓட்டம் பள்ளிப்பிள்ளை களை நம்பியே என தெளிவுறச் சொல்லி விடலாம்,

இதில் நம்மாழ்வாரின் பிள்ளைகளுக்கு பாய் சைக்கிளை தனியே எடுத்து வைத்து விடுவார்,

அந்தப் பிள்ளைகள் மற்ற பிள்ளைகளைப்போல என்னா பாய் சைக்கிள் இருக்கா என காசை எடுத்து கையில் வைத்து நீட்டுக் கொண்டு அதிகாரம் பண்ணுவதில்லை.அந்தப் பிள்ளைகளுக்கு அந்தப் பழக்கம் சுட்டுப்போட்டா லும் வராது,

தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்.நல்ல வேளை நம்மாழ்வாரின் பிள்ளைக ளுக்கு அது வாய்க்கவில்லை,வாய்க்கவும் வாய்க்காது என நினைக்கிறார், தொட்டில் பழக்கத்தை இப்பொழுதெல்லாம் சூழலும் கொஞ்சம் மாற்றி விடுகிறதுதானே?

வளர்ப்பு, படிப்பு, குடும்பம், பழக்கம், சூழல், எல்லாவற்றின் கூட்டிசைவில் பிள்ளைகள் பிசைந்து உருவாக்கப்பட்ட உருவம் நடப்பு சாட்சியாய் நிற்கிற போது நம்மாழ்வாரின் பிள்ளைகள் மட்டும் சற்று விலகியே,,,/

அண்ணனும் தங்கையுமாய்த்தான் வருவார்கள்,காலை பதினோரு மணி தாண்டி வருகிறவர்கள் சைக்கிள் கடையின் ஓரமாக கைகட்டிக்கொண்டு நின்று கொள்வார்கள், பாய் பார்த்து சைக்கிள் ஒதுக்கிக்கொடுக்கும் வரை அவர்களது பள்ளிப்பாடங்கள்,வீட்டு வேலைகள் பற்றி பேசிக்கொண்டிருப் பார்கள்,

“அம்மாவுக்கு மருந்து வாங்கிக்கொண்டு போக வேண்டும் போகும் பொழுது” என்பது அவர்களது பேச்சின் முடிவாய் இருக்கும்,ரெண்டு பேரும் வந்து இப்பிடி கையக் கட்டிக்கிட்டு செவத்தோரமா நின்னுக்கிட்டா எங்களுக்கு எப்பிடித் தெரியும்நீங்க வந்துருக்கீங்கன்னு,சொல்ல வேணாமா,என கடைக் காரர் கேட்கிற கேள்விக்கு மௌனமே அவர்களது பதிலாய் இருக்கும்,அல்லது ஒரு மென் சிரிப்பு,

“இப்பிடியே சிரிப்பையும் மௌனத்தையும் மட்டுமே வச்சிக்கிட்டு வண்டிய ஓட்டீற முடியாது தெரிஞ்சிக்கங்க,,,,,” என சொல்கிற பாய் ”கொஞ்சம் சீக்கிர மா வரக்கூடாது ,இந்நேரம் வந்தீங்கன்னா இப்பிடித்தான் ஆகிப் போகும், சைக்கிள் வெளியில போயிரும்,காத்துக்கிட்டில்ல கெடக்கணும்,

”அம்மாவுக்கு மருந்து வாங்கணுமுன்னு சொன்னீங்கல்ல,போயி வாங்கிக் குடுத்துட்டுக்கூட வாங்க, சைக்கிள் வந்தா நிறுத்தி வைக்கிறேன்,என்பவர் பாவம் இந்த வயசுல ஒங்கம்மாவுக்கு வந்த சுர நோயி வேற யாருக்கும் வரக்கூடாது , அவ பண்ணுன பாவமோ ,ஒங்கப்பாவும் நீங்களும் செஞ்ச புண் ணியமோ அவள இன்னும் கொண்டு போகாம உசுரோட வச்சிருக்கு, ஒங்கம் மாவ காப்பாத்த ஒங்கப்பன் கொஞ்ச நஞ்ச பாடா பட்டான், கௌவர் மெண்டு ஆஸ்பத்திரியே கதின்னு கெடந்தான்,இங்க இருக்க ஆஸ்பத்திரியில இதுக்கு மருந்து இல்லைன்னு மதுரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகச் சொல்லீ ட்டாங்க,

“இப்ப இருக்குற மாதிரி அப்பயெல்லாம் மதுரைக்கு நெனைச்ச ஒடனே போயிட்டு வந்துர்ற வசதியெல்லாம் கெடையாது,ரெண்டாவது இத்தனை பஸ்ஸீ ங்களும், நால்வழிச் சாலையும் கெடையாது,இருந்துகூட எல்லாம் ரெடி பண்ணி யாச்சி, மதுரை ஆஸ்பத்திரிக்கி போறதுக்கு /

ஒங்கப்பன் ஏங்கூட படிச்சவங்குறது ஓங்களுக்கு நல்லாத்தெரியும்,அது போல இன்னும் பத்துப்பேரு இந்த ஊர்லதான்இருக்கோம்.

நாங்களெல்லாம் பெரிசா ஆகா,ஓகோன்னு பொழச்சிறல, நான் எப்பிடி சைக் கிள் கடை வச்சிருக்கேனோ அது போல அவுங்கெல்லாம் ஒவ்வொரு வேலை யில இருக்காங்க,ஒரு தொழில் பண்றாங்க,,,,நாங்க எல்லாம் ஏதாவது குடும்ப விஷேங் களப்ப மட்டும் இல்ல,ஏதாவது அவசரம் ஆத்திரம், ஆஸ்பத்திரின்னா ஒண்ணு கூடிருவோம்,

எங்கள்ல நல்ல காரியங்கள்ல ஒண்ணு சேராம போனவுங்க கூட ஏதாவது துக்க நிகழ்வுகன்னா,இல்ல ஏதாவது நாங்க வந்தாத்தான் ஆகணுமுன்னு ஒரு சூழ்நிலை இருந்தா வந்து கைகோர்த்துருவோம்.

அப்பிடித்தான் ஒங்க அம்மாவ ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கிட்டு கூட்டிக்கிட்டுப் போகும் போது நடந்துச்சி,ஒங்க அம்மா விஷயத்துல மட்டும் இல்ல,நாங்க பத்துப் பேரும் பத்து பேரு வீட்டுல ஏதாவது நல்லது கெட்டது நடந்தாலும் ஒண்ணுக் கொண்ணு கைதூக்கி விட்டுக்குருவம்.பண விஷயத்துல இருந்து மத்த எல்லாத்துலயுமா ஒண்ணுக்கொண்ணு கைதூக்கி விட்டுக்கிட்டது போல அன்னைக்கும் எல்லாருமா சேந்துதான் ஒங்க அம்மாவை மதுரை ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைச்சோம்,

“அப்ப ஏறிட்டுப்பாத்த ஒங்கப்பனோட பார்வைய புரிஞ்சிக்கிட்ட நானு இப்ப என்ன கொழந்தைகளப்பத்திதான யோசிக்கிற ,அதுக ரெண்டையும் ஏங் கிட்ட விட்டுப்போ,ஏங்புள்ளைகளோட புள்ளைங்களா அதுகளும் இருந்துட்டு ப் போகட்டும். இருக்குறப்ப அள்ளித்திங்கட்டும்,இல்லாதப்ப கரைச்சிக் குடிக் கட்டும், அவ்வ ளவுதான,விடு கவலைப்பாடாம போயிட்டு வா, கூடிருக்கு தாங்கிக்கிற,வீடிருக்கு பொங்கிக்கிற,பள்ளிக்கூடம் இருக்கு படிச்சிக்கிற நாங்கெல்லாம் அப்புறம் எதுக்கு இருக்கோமுன்னு நெனைக்கிற,இந்த மாதிரி பொழுதுகள்ல கூட ஒருத்தருக்கொருத்தரு தோள்குடுக்காட்டி அப்பறம் நம்ம பழகுன பழக்கத்துல சூத்த விழுந்துரும்டான்னு,,,” சொன்ன மறு நாளே ஒங்கள கூப்பிட்டுக்கிட்டு வந்து எங்க வீட்ல விட்டுட்டு மதுரை ஆஸ்பத்தி ரிக்கி கெளம்பீட்டாங்க,அன்னைக்கி ஒங்க அம்மா அழுத அழுகைக்கும், வடிச்ச கண்ணீருக்கும் அளவில்லைப்பா, விட்டா வீதியில ஆறா ஓடிருக்கும் கண்ணீரு,

”நான் என்ன புண்ணியம் பண்ணுனேன்னு தெரியல,இது போல நண்பர்கள கொண்ட புருசன் அமைஞ்சதுக்குன்னு சொல்லி கண்ண கசக்கீட்டே நின்னது இன்னைக்கி வரைக்கும் கண்ணுலநிக்குதுப்பா” என்றார்.

அன்னைக்கி போயிட்டு பத்து நா கழிச்சித் தான் வந்தாங்க ,அப்பிடி வரும் போது ஒங்கம்மா ஓரளவுக்கு கொஞ்சம் கொணமாகி வந்தாங்க,அப்பிடி வந்தவுங்க இன்னைக்கி வரைக்கும் மருந்து மாத்திரைகதான் தாங்கிப் புடிச் சிக்கிட்டு இருக்கு,என்றவர் வீட்டிற்கு போய் வந்த பிள்ளை களுக்கு சைக்கிள் கொடுத்தார்.

இரு சக்கர வாகனத்தின் முன் சக்கரத்தில் சற்று காற்று குறைந்திருந்தது, வண்டி ஓடுகிற ஓட்டத்திலேயே வண்டியின் உலட்டல் தெரிந்தது.சரி சமாளித் துக் கொள்ளலாம்,

ஐந்து கிலோ மீட்டர் தூரம்தானே ஓட்டுக்கொண்டு போவோம் இடையில் ஏதாவது ஒர்க் ஷாப் அல்லது காற்று அடிக்கும் கடை திறந்திருந்தால் செக் பண்ணிக்கொண்டு போவோம் என நினைத்தவனாய் வண்டியை ஸ்டார்ட் செய்தான்,

தெரு முனையில் திரும்பும் போது மூட்டப்பட்டுக்கிடந்த காம்ப்ளக்ஸ் கடை வாசலில் நான்கைந்து பேர் அமர்ந்திருந்தார்கள்,அறிமுகமற்ற நபர்கள்,இந்த நெருக்கடி கால வேளையில் நிறையப்பேரை இப்படியெல்லாம் பார்த்து விட முடிகிறது, அறிமுகமற்றமுகங்கள், அறிமுகமற்றவர்களின் பேச்சுக்கள் அறிமுகமற்றவர்களின் உரையாடல்கள் என கேட்டு விடவும் பார்த்து விடவு மாய் முடிகிறது,

செல்கிற வழியில் சிறிது நின்று பையில் இருக்கிற தண்ணீர் பாட்டிலை எடுத்து தண்ணீர் குடிக்கவோ இல்லை வேறேதற்கோ நின்றால் பரிதாபம் காட்டிய பார்வையுடன் யாராவது வந்து உதவி என கைநீட்டுகிறார்,

சங்கடமாய் இருக்கிறது,நேற்று வரை அவர் நிச்சமாய் கை நிறைய சம்பாதித் தவராய் இருக்கவேண்டும்,சூழல் இன்று அவரை கையேந்த வைத்திருக் கிறது, இவர் ஒருவருக்கு இவன் செய்கிற உதவி போதலாம் ,அல்லது காணா மல் போகலாம், வீட்டில் இருக்கிற அவரது பெண்டாட்டி பிள்ளைகளுக்கு,,,?

இப்படி உதவி கேட்பவர்களில் உண்மையில் கேட்பவர்கள் யார், பொய் சொல்லி வாங்கியவர் யார் எனத்தெரியவில்லை,நேற்றைக்கு முந்தினம் புது பஸ்டாண்டு க்கு சமீபமாய் போய்க்கொண்டிருந்த வேளையாய் வண்டியை மறித்த பெரியவர் ”ஐயா வீட்டுல அரிசி பருப்பு ஒண்ணும் இல்லையா உதவுங் கய்யா,,” என்றவரிடம் ”அரிசி வாங்கித்தர்றேன் கொண்டு போறீங்களா,, ” எனக்கேட்க இல்லை பணமாக் குடுங்க என்றார்,

இவனும் இறக்கம் பார்த்து குடுத்து விட்டு வர மாலை அலுவலகம் முடிந்து திரும்பும் போது போதையில் தள்ளாடிக்கொண்டிருந்தார் தன் நிலையற்று,

உதவி எனக்கேட்டு வருகிறவர்களில் நல்லவர் யார் கெட்டவர் யார் என பிரித்துப் பார்க்கமுடியவில்லை.

அது போல் காம்ப்ளெக்ஸ் கடைகளின் வாசலில்களிலும், இன்னபிற இடங்க ளிலுமாய் அமர்ந்திருப்பவர்களை பார்க்கிற பொழுது சிறிதளவில் மனக் கிலேசம் ஏற்பட்டு விடுகிறதுதான்,

இது அப்படியே வளர்வது சமூகத்திற்கும் நமக்கும் நல்லதில்லைதான். கெஞ் சிக் கேட்டவைகள் எத்தனை நாள்வரை கையை ஏந்திக் கொண்டிருப்பார் கள், பிழைக்க ஏதும் கதியற்ற போது ,ஏந்திய கைகள் ஓங்க ஆரம்பித்தால்,,,,? அல்லது தட்டிப்பறிக்க ஆரம்பித்தால் ,,,,,,நிலைமை மிகவும் மோசமாகி கரடு தட்டிப் போகும் சமூகம்,வலுத்தவன் கை ஓங்கும், இளைத்தவனின் கை இறங்கும், என்கிற நினைப்பூடே சென்று கொண்டிருந்தவன் இப்பொழுதெல் லாம் அலுவலகத்தில் உடன் பணிபுரிகிற எல்லோரிடமும் சொல்கிறான், தனியா வண்டியில போகும் போது செயின், மோதிரம்,பிரேஸ்லெட்டுன் னு போட்டுக் கிட்டு வராதீங்க,ஓத்தையில் டூ வீலர்ல வர்றீங்க அம்பது அறுபது கிலோ மீட்டர்ன்னு,,கொஞ்சம் நாம தான் பாதுகாப்பா இருந்துக்கிறனும்” என்றான்,

காலை நேரத்திற்கு இந்த வெயில் அதிகம்தான்,சுள்ளிட்டுச்சுட்டது. அலுவல கத்தின் முன்னால் நின்ற வேப்ப,மர நிழலில்தான் வண்டியை நிறுத்தினான், வேப்பமர நிழலும் அதிலிருந்து வீசிய காற்றும் இதமளிப்பதாகவே/

இசைவாகிப் போகிற இதங்கள் சற்று ஆறுதலாகவே/ரோட்டில் பட்டுச்சுட்ட வெயில் மர நிழலில் நின்று கொண்டிருந்தவனுக்கு தெரியவில்லை.

அண்ணாந்து பார்க்கிறான் மரத்தை.கூடு கட்டி குஞ்சு பொரித்த பறவைகள் இரண்டு காதல் பாஷை பரிமாறிக்கொண்டதாய்.பேசிக்கொண்ட பாஷை யின் தேவபாவங்கள் இழைந் தோடிய மென் ராகங்களாய்/

கிளை படர்ந்த இலைகளினூடாய் பூவும் பிஞ்சும் காயும் கனியுமாய் கட்டித் தெரிந்தவைகளினூடே நாங்களும் இருக்கிறோம்தானே உயிர்ப்புடன் ஒன்று சேர்ந்து என்பதாய் சேதி சொன்ன பறவைகள் காதல் ஜோடி என அறியப் பட்டது,

மர நிழலிலிருந்து வெளி வருகிறான்,எதிர்பட்ட காற்று முகத்தில் மோதி இதமளிக்கிறதாய்,,/

லேசாகிப்போகிறதுதான் மனமும்,உடலும்,,,,/

புதன், 20 மே, 2020

தேநீர் சுமந்து,,,,,


        
காலை மற்றும் மாலை வேளைகளிலும்
அலுவலகப்பணிக்குச்செல்கிற
இதரப் பொழுதுகளிலும்
ஏதாவது வேலையாய் நகருக்குள் செல்கிற போதும்
சாலையோரக்கடையில்  தேநீர் அருந்துவது
தவிர்க்க இயலாமல் போய் விடுவதாகவே/

அது தேநீரின் மீதுள்ள பிரியமா இல்லை
அதற்கு அடிமையாகிப் போன 
மனோநிலையா பிடிபடவில்லை.

அன்றும் அப்படித்தான் அலுவலகம் செல்கிற
காலை வேளையாய் நாற்கரச்சாலையோரமாய்  
இருந்த கடையில் டீ சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்,

கடையின் முன் விரைந்த சாலையில் அமர்ந்து
சாலையோரமாய் முளைத்துத்தெரிந்த புற்களையும்
இதரச்செடிகளையுமாய் பிடுங்கக் கொண்டிருக்கிறாள் அவள்.

கிழிந்து தொங்கிய ஆடைகளும்,
அழுக்கு படிந்த தோற்றமும்
அவளை மனோ நிலை பிறன்றவள் என 
அங்கீரத்துச்சொல்கிறது.
அவளது எதிரில் இருந்த கண்ணாடிகிளாஸில்
நிறைந்த டீ இருந்தது,
டீக் கிளாஸின் மீது வடையோ,
பன்னோ மடித்து வைக்கப்பட்டிருக்கிறது,

எவ்வளவு நேரமாய்  அது அப்படி இருக்கிறது
எனத்தெரியவில்லை,
அதை எடுப்பதை விடுத்து செய்கிற
வேலையிலேயே மும்பரமாய் இருந்தாள்,
தரையிலிருந்து பிடுங்கிய புற்களையும் செடிகளையும்
ஓரமாய் குவித்து வைத்திருந்தாள், 

குவித்து வைக்கப்பட்டிருந்த புற்களையும்
அதைபிடுங்கிக்கொண்டிருந்தவளையும்
கடை முன் காட்சிப்பட்டவர்களும்,கடைக்காரருமாய்
பார்த்துக்கொண்டிருக்கின்றனர்,

டீயைக்குடித்து விட்டு காசைத்தருகிற போது
டீக்கடைக்காரர் சொல்கிறார்,

அன்றாடங்களில் நாம் டீக்குடிக்கிற கடைகள்
வெறும் டீயை மட்டும் தந்து
விடுவதில்லைதான்,                                                                                                                                                 

சனி, 16 மே, 2020

பொய்யற்று,,,,,,,



மணியைப்பார்க்கிறான் சற்றே எட்டி,

சடுதியாய் யாரோ சட்டையைப்பிடித்திழுத்த பாவனையாய் அவரசமாய் பார்த்த வன் உள் நுழைந்து கொள்கிறான் திரும்பவுமாய்/

”கிட்டக் கிட்டவச்சி பக்குவமாப்பாத்தாலும் எட்ட எட்ட வெலகிப்போயி திருட்டுத் தனம் காண்பிக்கிறதுதான ஒங்க ஆம்பள மனசுபாக்க பதவிசா காமிச்சிக்கிட்டு அங்கிட்டுப்போயி திமிருத்தனம் காட்டி வெளையாடுறதும், தாண்டித்தாவுறதும் நடக்கலைன்னா சொல்றீங்க,

“கொழஞ்ச சாதமும்,மெளகு ரசமும் போதும் ,கறி காய் ஆகாது ,ஒத்துப் போறதுல ஒடம்புக்கு சிக்கல் வருமுன்னு சொன்னத ஏத்து பதனமாப்பாத்து வடிச்சி இது வேணும்,இது வேணாம், இது போதும்,இது போதாது,இவ்வளவு வேக்காட்டுக்கு இந்தக்காயி,இவ்வளவு வேக்காட்டுக்கு இந்தக்கறி, இதுக்கு இதுதான் பக்குவம், அதுக்கு அந்தப்பக்குவந்தான் ஏத்தது குக்கர்ல ரெண்டு விசிலு,ஸ்டவ்வ சிம்முல வையி,மிக்சி அரவை வேண்டா முன்னுருவாரு,நான் கை அரைவையே அரைச்சி க்கிறேன்னு பாத்துப்பாத்து பண்ணிப்பண்ணி செஞ்சி வச்சாலும் கூட எந்தக் கடையில எது நல்லாயிருக்கு,இன்னிக்கி ஸ்பெசல் எங்க என்னன்னு தேடித் திரியிற ஒங்களத் தெரியாதா எனக்கு என்றவள் சொன்ன போது பகீரென்று சிரித்தவன் அலையுற மனசுக்கு வெந்தது ஏது,வேகாதது ஏது, பக்குவம் ஏது,? அது அல்லாததது எது,,?ன்னு தெரிய ஞாயமில்ல,“மலை, மலையா கொட்டி வச்சி சாப்புடச்சொன்னாலும் எச்சச் சோத்துக்கு அலையிற கொணம் இருக்குதுதான அப்ப தொட்டு,,,, சூழ்நிலையும் தைரியமும் கை கோர்க்கும் போது அது ஒரு தனி உலகமாத் தெரியுது, என்றவனின் பேச்சிற்கு இல்லை இல்லை அப்படியெல்லாம் என உறுதி குடுத்து விட்டாலும் கூட போகிற போக்கில் எட்ட இருப்பதை படம் பிடித்துப் பார்ப்பதுதானே மனது,என்பது உறுதியாகிப்போகிறது,

எத்தனைதான் திரை போட்ட போதும் கூட விலக்கிப்பார்க்கிற சூட்சுமம் லேசாய் வாய்க்கப் பெற்றிருக்கிறதுதானே சிறுவயதிலிருந்து,இது மாதா பிதாவிடமிருந்து வந்ததா இல்லை குருவிடமிருந்தா அதுவுமில்லையெனில் கற்றுக் கொடுக்கிற சமூகத்திலிருந்தா,,? கற்றுக் கொள்வதும் கற்றுக் கொடு ப்பதும் நம் தேவையை யும் அவசரத்தையும் பொறுத்ததுதானே இல்லையா என்றவளின் முன் நின்றவன் சமையலறையில் இருந்தான்,

வீட்டுக்குள் எத்தனை ரூம்கள் இருந்த போதும் இவனுக்கு உடை மாற்ற வாய்த்தது சமையலறைதான் என ஆகிப்போகிறது,

வீட்டில் இவனுக்குப் பிடித்தஇடங்களில் சமையலறை மிக முக்கியமாகிப்  படுகிறது / வெறும் சமையல், அரிசி பருப்பு பண்டம், பாத்திரம், அரிசி, பருப்பு, அரசலவு அஞ்சறைப் பெட்டி மிக்ஸி,கிரைண்டர்,,,,,மட்டும் குடி கொண்டது சமையலறை இல்லை,

மாறாய் ஊன் உருக்குகிற உன் நினைவுகளும் உருவமும் ரத்தமும் சதையு மாய் அன்றாடம் உனது அர்த்தங்களை எழுதிச் செல்கிற சமையலின் உயர் அழுத்தமும் கொண்டதல்லவா அவ்விடம் ,ஆகவே அது பிடித்துப் போகிறது தான், எனக்கு என மனம் பிடித்தவளின் இளம் புன்னகையும், மெல்லிய பார்வையும் ஒரு சேர மனதிற்கு கிடைத்து விட்ட திருப்தியை சமையலறை கள் ஏற்படுத்தி விடுகிறதுதான், அதனால்தான் தஞ்சமாகிப் போகிறான் அடிக்கடி.அவளின் உள்ளர்த்தங் களை ஏற்றுக்கொண்டு/

மணி ஒன்பது தாண்டி ஒன்பது ஐந்தை எட்டித்தொட்டு விடப்போன வேளை வலது ,காலில் மாட்டிய பேண்ட்டை போட்டவாறே ஹாலுக்கு வந்தான்,

”கடைசி ரூமில் பெரியவள் படுத்திருந்தாள்,அடுத்த ரூமில் சின்னவள் படுத்திருந் தாள், ஹால்தான் எப்பொழுது இவனுக்கு வாய்த்தது,அதெல்லாம் இருக்கட்டும் கூட. இவ்வளவு பெரிய வீட்டை கட்டிப்போட்டு விட்டு ஆத்திர அவசரத்திற்கு உடை மாற்றக்கூட சமையலறையில் போய்த்தான் நிற்க வேண்டியிருக்கிறது எனும் போதுசங்கடமாய் இருக்கிறதுதான்” என்கிறான்

“இன்னும் புள்ளைங்க ரெண்டு பேரும் எந்திரிக்கலையா,,என்றவாறே, ராத்திரிக்கு சீக்கிரம் படுத்தாத்தானே காலையில சீக்கிரம் எந்திருப்பாங்க,/ எல்லாம் இங்க இருந்து வர்றது, ஒங்களச்சொல்லணும் மொதல்ல,அவுங்க ரெண்டு பேரும் கெட்டுப் போறதே ஒங்களாலத்தான் என்ற மனைவியை ஏறிட் டவன் சும்மா இரு நீ,ஒடனே ரொம்பத்தானா குத்தம் சொல்ல ஆரம்பிச் சுருவ, லேசுசுக்குள்ள குத்தம் சொல்ல மாட்ட,ஆனா ஆரம்பிச்சிட்டயின்னா விடமாட்ட ,ஊர விட்டு தள்ளி வைக்கிற அளவுக்கு போயிறுவ”,,,,,,,,என்பான் சிரித்துக்கொண்டே,,,/

கண்டிக்கிற இவனின் குழி விழுகிற கண்ணத்தில் லேசாய் கிள்ளி விட்டு எட்டப் போய் சொல்லுவாள் ஊர விட்டு தள்ளிப்போறப்ப என்னையும் கூட்டிக்கிட்டுப் போயிருங்க,அப்பிடியே கோயிச்சிட்டுப்போனது போல அங்கிட்டுப் போயி இருந்துட்டு வருவம், கொஞ்ச நாளைக்கி என்கிற அவளது சிரிப்பிற்கும், பேச்சிற் கும்,, செய்கைக்கும்,,, அட போங்கப்பா வாழ்க்கை மொத்தத்தையும் எழுதி வைத்தால் கூட காணாதுதான்,எழுதி வைக்கிற பேரேடு முடிந்து பரஸ்பரம் இருவரது மனங்களிலுமாய் மாறி மாறி எழுதி வைத்துக் கொள்ள வேண்டியது தான்,

வட்ட வடிவ கடிகாரத்திற்குள் சின்னதும் பெரியதுமாய் களைப்பு காட்டாமல் ஓடிய சின்னதும் பெரியதுமான முட்கள் விநாடி முள்ளை துணைக்கு அழைத்துக் கொண்டு காலனை கண்ணாடியாய் பிரதிபலித்துக் கொண்டி ருந்தது,

சுவர் கடிகாரம் வாங்க வேண்டும் என முடிவான நாட்களில் சற்று வித்தியா சமாய்,நல்லதொரு டிசைனில் இருக்குற கடிகாரமாய் வாங்க வேண்டும் என முடிவெடுத்தான்,

வாங்கி பத்து வருடங்களுக்கும் மேலாகி விட்டது,இன்னமும் பெரிய அளவிற் கானரிப்பேர்ஏதுமில்லாமல்ஓடிக்கொண்டிருக்கிறது,அவ்வப்பொழுதுபேட்டரி போடு வதை ரிப்பேர் கணக்கில் வைக்க முடியாது,பாவமாகிப்போகும்,பின் காலன் பஸ்ஸேறி வந்து கண்டனம் தெரிவித்து விட்டுப்போவான், இப்போ தைக்கு அதற்கும் வழியில்லை,பின்கண்டனத்தை ஆதரிப்பவர் எதிர்ப்பவர் இரு பிரிவுகள் உண்டாகி அவர்களுக்குள்ளான பெரும் பிளவிலும் சர்ச்சை யிலுமாய் காலமும் நேரமும் மறைந்து சர்ச்சை மட்டுமே மேலோங்கி நிற்பதாக ஆகிப்போகும். ஆகவே வேண்டாம் என சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு சாகஸம் நிகழந்ததாய் மன நிமிர்வு கொண்டு திரிந்த நாட்களில் சத்தம் போட்டாள் மனைவி,

சப்தம் போடுவதற்கும் குறை சொல்வதற்கும் ஏற்றவளாகிப் போனவள்தான் மனைவி போலும்,

‘அப்பிடியெல்லாம் சுருக்கமா நெனைக்காதீங்க, நீங்க நெனைக்குறதான் வாஸ்தவமுன்னா இவ்வளவு பெரிய வீட்டை கட்டி இழுக்குறது யாரு,,? நீங்க ளா,,,,? ஒங்களுக்கு காலையில எந்திரிச்சி ஆபீஸ் கெளம்பவே நேரம் சரியாப் போகுது,,,,இதுல நீங்க குடும்பத்த இழுத்துட்டாலும்,,என்கிற அங்கலாய்ப்பு அவளைச்சார்ந்ததாய்.

அவளது சொல்லிலும் செயலிலும் வாஸ்தவம் தட்டுப் படாமலும், அடையாளப் பட்டுத் தெரியாமலும் இல்லை, காலையிலெழுந்து பிள்ளைகளுக்கு டீப் போடுறதுல இருந்து அவுங்க ரெண்டு பேரையும் ஸ்கூலுக்கு தயார் செய்வது வரை ஏங் வேலைதான,அதுக்கு என்ன தனியா சம்பளத்துக்கு ஆள்போட்டா வச்சிருக்குறீங்க, இல்லையே, ஓசியான வாசிங்க் மிஷினா, ஓசியான மிக்ஸி யா, ஓசியான கிரைண்டரா, இன்னும்,இன்னுமான ஓசியான வேலை செய்யிற மிஷினா இருக்கு றோமே தவிர்த்து,கட்டிக்கிட்டு வந்தவளா இல்லை,

ஒன்பது மணிக்கெல்லாம் பஜாரில் இருக்க வேண்டும் என நினைத்தான், போகிற வழியில் ஓரு டீ ,வடை சாப்பிட்டுப்போகலாம் என்கிறதான நினைப்பில்,

ரொம்ப நாட்களாகிப்போனது அப்படியாய் சாப்பிட்டு/

டீக் கடை அவசர ஆத்திரத்திரத்திற்கு சாப்புடுகிற ஹோட்டல் டிபன், சாப் பாடு எல்லாம் மறந்து போனது ,கண்முன் இருந்து மறைந்தும் போனது, நேர் கோட்டு நிகழ்வு போல் வீட்டிலிருந்து கிளம்பி அலுவலகம் செல்ல, அலுவல கத்திலிருந்து கிளம்பி வீடு வர என தினசரிகளிலான காலை மாலை நிகழ்வுகள் இதுவே என சாஸ்வதமாகிப்போகிறது,யாரையும் பார்த்து பேசி உறவாடி மனம் கலந்து நீண்ட நாட்கள் ஆகிப்போனது,உறைந்து கிடக்கிற வீட்டையும்,பிள்ளைகளையும்,அக்கம்பக்கத்தையும்தெருக்களையும்,ஊரையும் பார்க்க சற்று சங்கடமாய் இருக்கிறது

காலில் சக்கரம் கட்டிக் கொண்டு நகர்வு கொண்டிருந்த சமூகம் ஓரிடத்தில் நின்று கொண்டு அசைய மறுக்கிறதாய்,சமூகத்தின் காலில் எப்பொழுது சக்கரம் கட்டப்போகிறார்கள் எனத் தெரியவில்லை,

சமூகம் சடுதியெடுத்து ஓடுகிற ஓட்டத்தையும் இசைக்கிற கீதத்தையும் கேட்கஆசைதான்,கேட்ககாத்திருப்போம் என்கிறதான நினைப்புடன் சென்று கொண்டிருக்கிறான் இரு சக்கர வாகனத்தில்/

வாகனத்தை மாற்ற வேண்டும்,ஐந்து வருடங்கள் கூட ஆகியிருக்கவில்லை, வாங்கி, மூன்று வருடங்கள் கூட முழுமையாக எட்டி இருக்காது என்றே நினைக்கி றான், நான்கு சர்வீஸ் விட்டு விட்டான்,ஆனாலும் கூட வண்டியை ஓட்டுகிற திருப்தி இல்லை,சக்கட்டான், சக்கட்டான்,,,,என கட்டை வண்டியை தலையில் சும்மாடு கட்டிதூக்கிக்கொண்டு நடக்கிற கொடுமையாய் இருக்கி றதுதான்,

“கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனா அங்க ரெண்டு கொடுமை தங்கு தங்குன்னு ஆடுன கதையாய் ஆகிப் போகிறது இந்த வண்டியை ஓட்டுகையில்/

ஆனால் தினசரி தங்குதங்குதான்ம்,தினசரி கொடுமைதான்,விற்று விட்டு ஸ்கூட்டி அல்லது பெரிய வண்டி வாங்கலாம் என்கிற நினைப்பிலேயே சிறிது காலம் போயிற்று,

வீட்டில் பெரிய,பெரிய செலவுகள் இருக்க இதில் கொண்டுபோய் பணத்தை முடக்குவானேன் என்கிற எண்ணம் ஒரு பக்கம்,இல்லை ஆத்திர அவசரத் திற்கு ஒரு வண்டி அவசியம் என்கிற எண்ணம் மறுபக்கம்,வெவ்வேறாய் பரிணாமம்கொண்ட எண்ணங்கங்களின் துளிர்ப்பும் வேர்விடலுமாய் இருந்த சமயங்களில் பிள்ளைகளுக்கு இவன் பெரிய வண்டி வாங்குவதில் இஷ்டம் இருந்திருக்கவில்லை,ஏறிப்போனவயது,தப்பிப்போகிறநினைவுகள், தளர்ந்து போன உடல், எல்லாம் ஒன்று சேருகையில் வண்டியை கட்டுப்படுத்துவதற்கு மிகவும் சிரமம் கொள்வீர்கள், ஆதலால் வேண்டாம் பெரிய வண்டி,அதை வாங்குகிற எண்ணத்தை அடியுடன் கைவிட்டு விடுங்கள் என்றார்கள் ,சரி இருக்கட்டும் அவ்வாறே,,,/ என்கிற எண்ணத்துடன் ஸ்கூட்டி வாங்கி விடலாம் என்கிற நினைவுடன் இருந்த பொழுது நெருக்கடி வந்து விட பழையதையே ரிப்பேர் பார்த்து ஓட்டிக்கொண்டு இருக்கிறான்.

தெரு முக்கு திரும்புகையில்தான் அவரை கவனிக்கிறான்,

லோடு மேனாக அறிந்திருக்கிறான் அவரை.இவன் அறிந்து அவர் சோம்பி இருந்து பார்த்ததில்லை, எந்தப் பக்கமிருந்தாவது எந்தப்பக்கமாவது சென்று கொண்டி ருப்பார் அல்லது வந்து கொண்டிருப்பார்,அப்படி செல்கிற நேரங்களில் சைக்கி ளில் மூட்டை கட்டிக் கொண்டு போவார்,என்ன மூடை இது என்றால் அரிசி மூடை அல்லது பருப்பு மூடை என்பார் ,அரிசி மூடை என்றால் ஒரு கடையிலிருந்து இன்னொரு கடைக்கும், அதேது பருப்பு மூடை என்றால் ஒரு மில்லிருந்து இன்னொரு கடைக்குமாய் கொண்டு போகிறேன் என்பார்,

இப்படியாய் நாள்தோறும் உழைப்பு உழைப்பு உழைப்பிற்கு மட்டுமே உடலையும் மனதையும் ஒப்புக் கொடுத்து விட்டுப்பெரிய அளவிற்காய் வேறெந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் உழைப்பிற்கான ஊதியத்தை மட்டுமே பெரிதாக நினை த்து வாழ்பவர்,

அவரின் உழைப்பும் ஊதியமுமாய் நின்று போன இந்த நாட்களில் வேலை க்குப் போகாமல் இருக்கிறேன் வீட்டில் என்றார்,வேலையும் அதற்கேற்ற ஊதியமுமாய் இருந்த நாட்களில் சாலையில் செல்கிற வேலையும் ஊதிய மும் அற்ற பெரும்பாலோனரைப் போலத்தான் அவரும் இவனைப் பார்த்தார்,

ஒரு நாளின் பிற்பகல் வேளையாய் கடைக்குப் போய்க்கொண்டிருக்கும் பொழு தில் இவனைப்பார்த்து வண்டியை நிறுத்தி விட்டார்,”தம்பி தப்பா நெனைச்சிக்கி றாதீங்க,வேலைக்குன்னு போயி ஒரு மாசத்துக்கு மேல ஆகிப் போச்சி. கையில ஒரு நயாப்பைசா கெடையாது, செலவுக்கு ஏதாவது இருந்தா குடுத்துட்டுப்போ தம்பி” என இறைஞ்சலுடன் கேட்கிறார்,மனம் தொட்ட அவரது இறைஞ்சலுக்கு அன்று இறங்கியது இன்று தப்பு என நினைக்கத் தோனி விட்டது,

“ஒரு தடவை குடுத்தால் உதவி ,ஓயாமல் கேட்டால் அதற்கு பெயர் என்னவாய் இருக்கும் நீங்களே சொல்லுங்கண்ணே,,,,,” என மூன்றாவது தடவையாய் அவர் இவனிடம் கையேந்தி நின்ற நாளில் கேட்ட பொழுது இல்ல தம்பி திரும்பத்திரும்ப ஓங்கிட்டயே வர்றேன்னு தப்பா நெனைச்சிக்கிறாத தம்பி, எனக்கு ஒன்னைய விட்டா யாரு தம்பி இருக்கா சொல்லு,நீயும் ஒன்னையப் போல இருக்குற ரெண்டு மூணு பேரையும்தான் எனக்குத்தெரியும். சுருக்க மான ஒலகத்துக்குள்ளயே வாழ்ந்து பழகீட்டவன் தம்பி, அதுனாலத்தான் தம்பி ஒங்களயே சுத்திச்சுத்தி வர்றேன் ,எனக்கு ஒங்கள விட்டா யாரு தம்பி சொல்லுங்க என்றவரின் பேச்சில் பொய் தெரியவில்லை,

ஞாயிறு, 10 மே, 2020

நட்ட கல்லு,,,

வருகிற வழியில் அவரைப்பார்க்கிறேன்.சலூன் கடை வாசலில் அமர்ந்திருக் கிறார்.

ஆளரவமற்ற வீதி,வீதியெங்குமாய் வழக்கமாய் குடிகொண்டிருக்கும் கடை கள் இல்லை,டீக்கடை,ஹோட்டல்,பலசரக்குக்கடை,டெய்லர் கடை வாட்ச்க் கடை ,,,,ம்ஹீம் எதுவும் விழிப் படலத்திலிருந்து விலகியே/

விழி கழண்ட பார்வை உருண்டோடி பார்த்த இடம் யாவுமாய் காலி பட்டுத்தெரிய ஓடோடி வந்து ஒட்டிக்கொண்ட விழிகள் இரண்டும் ஊர்ஜிதம் செய்து விட்டுச்செல்கிறது எதுவுமற்றுக் கிடக்கிறது வீதி என,,,/

மணி ஆறு இருக்கலாம்,

ஒரு மணியுடன் மூடி விட்டிருந்தார்கள் எல்லாவற்றையும்.மூடப்பட்டிருந்த கடைகள் யாவும் மனித முகங்களின்றி வெற்றுக் கூடுகளாய் காட்சியளிக் கின்றன.

தராசும், படிக்கல்லும், மீன்காரம்மாவும், காய்கறிக்கார அக்காவும் ,கோழிக் கடைக்காரரும் இன்னும் இன்னமுமானவர்களும் வெறுமனே நிமிட நேர இடை வெளிகளில் காணாமல் போனார்கள்.

சரி, எல்லாம் தீர்ந்து போகிறது, காய்கறி கடைக்காரியின் பேச்சு,சிரிப்பு, உசாவல்,விசாரிப்பு,அவர்களின்பிழைப்பு,ஆதங்கம்,,,வடைக்கடைக்காரரின் சிரிப்பு மாறா முகம்,பெரியண்ணனின் பலசரக்குக் கடையில் குடிகொண்ட மனம்,,இன்னும் இன்னமுமான எல்லாவற்றிற்குமாய் நேரம் நிர்ணயித்து கால அடைப்பு போட்டது போல மனதிற்கு போட முடியவில்லைதான்.

”அதுவரைக்கும்தான் சொல்லும், செயலும்,பேச்சும் உறவும் என்றால் அன்றாடம் முளைத்துக் கிளைத்தவைகளை தீயிட்டு பொசுக்கி விடுவதா,,,? தெரியவில்லை.

காலையில் பணிக்குச் செல்லும் போது திறந்திருந்த கடை இப்பொழுது பூட்டி இருக்கிறது.

காலையில் கடை வாசலில் இருந்த குதூகலம் இப்பொழுது யாரோலோ பிடுங்கி எறியப்பட்டது போல் தெரிகிறது.

மண்பிளந்து துளிர்த்து வளர்ந்து கிளைத்து பூவும் பிஞ்சும் காயும் கனியுமாய் நிற்கிற நிறை மரம் ஒன்றை அதன் மணத்துடன் சடுதியில் யாரோ தட்டி எடுத்து வெட்டிக்கொண்டு போய் விட்டதாக தோணியதுதான்,

கடைக்கு எதிர்த்தாற் போல் இருந்த வீட்டில் வாசலில் தெளித்த தண்ணீர் காயும் முன்னதாகவே வரைந்திருந்த கோலம் தரையில் அழுந்தப்பதிந்து காணப் பட்டது,

அழுந்திய பதிவுகளை காண கண்கள் கோடி வேண்டும்.இட்ட புள்ளிகளும் அதைச்சுற்றிவரையப்பட்டகோடுகளுமாய்நகன்றுகொண்டிருக்கிறவாழ்க்கை இது என்று சொன்னால் மிகையாய் தோணி விடப்போவதில்லை,

பார்த்துப் பார்த்து பண்ணிப்பண்ணி நல்லது எது கெட்டது எது,யார் அருகாமை வேண்டும் யாரிலிருந்து விலகி இருக்க வேண்டும்,எந்த வீதியில் வீடு பார்த்து குடி போகலாம்,செல்கிற வீடும் அருகாமை மனிதர்களும் பழக்கமும் பாங்கும் மனதிற்கும் மற்றவைக்கும் ஏற்றதுதானா அல்லது அது அற்றதா,,வயசுப்பிள்ளையை வைத்துக்கொண்டு மடியில் கட்டிய நெருப்பை எப்பொழுது கீழே இறக்கி வைப்பது எனத்தெரியாமல் முழித்துக்கொண்டு திரிய வேண்டிய கட்டாயம் எத்தனை நாளைக்கும் எத்தனை பொழுதுக்கும் ஆட்பட்டதும் விதிக்கப்பெற்றதும் எனத்தெரியவில்லை,

என் வீடு என் மக்கள் என் வாழ்க்கை என இருப்பது தாண்டி எதுவும் யோசிக்க சூழல் அனுமதிக்குமா தெரியாது, மிகைப்படுத்தப்பட்டதாய்அன்றி சாதாரண ங்களில் நகன்றாலே நல்லதுதானே,,,?

”நல்லதுதான் நல்லதுதான்,ஒங்களுக்கு எல்லாம் நல்லதாத்தான் படுது, கெட்டதா எதையும் பாக்கத்தெரியாத கண்ணுக்கு பாக்குற எல்லாம் நல்ல தாத்தான் தெரியுது,அந்த வகையில நான் குடுத்து வச்ச ஆளு, என்றவளாய் சட்டைக் காலரைப் பிடித்து முன்னிழுத்து கண்ணத்தைக்கடித்து வைத்தாள்.

”சும்மா இரு லூசு,பெரியவ உள்ள படிச்சிக்கிட்டு இருக்கா,சின்னவ அவ பக்கத்துல உக்காந்துக்கிட்டு இருக்கா”,என்கிறான்,

“வழக்கமா இது நீ சொல்ற வசனம்,இப்ப நான் சொல்ல வேண்டியதா இருக்கு” என்கிறான்,

”இப்ப என்ன வசனமும் செய்கையும் ஒங்களுக்கு மட்டுந்தான் சொந்தமா என்ன?கற்பு மட்டுந்தான் ஆணுக்கும் பொண்ணுக்குமான சொந்தமா,,,,,? காதலும் காமமும்கூடத்தான”,,,,,என்றவள் ஓடோடி வந்து தோளில் சாய்ந்து கொள்கிறாள்,,,/

பாவனை நிறைந்த உலகம், உதட்டுச்சாயமும்,தலைக்கு இட்ட மைப்பூச்சும், முக அலங்காரமும் உடை மிகையுமாய் நகர்வு கொள்கிற வாழ்க்கையில் பார்ப்பதும் பேசுவதும் சிரிப்பதும் பரிமாறிக்கொள்வதுமாய் உறை கொள்கிற வாழ்வின் தருணங்கள் மிக மென்மையாகவே,,,/

சென்ற வாரம் முடிவெட்டிக்கொள்ள சென்றிருந்தபோது போது கடைக்கார் சொன்னார்,ரொம்ப கெடுபிடி சார்,கடைக்குள்ள முடி வெட்டிக்கிற ஆள் தவிர்த்து வேற யாரும் உக்காந்துருக்கக்கூடாதுன்னு சொல்றாங்க சார் மீறி யாராவது உக்காரவச்ச ஒடனே கடையப்பூட்டுன்னு சொல்றாங்க போலீஸ் காரங்க,நமக்கு எதுக்கு வீண் வம்புன்னு எவ்வளவு தெரிஞ்ச ஆளா இருந்தா லும் கடைக்குள்ள அனாவசியமா நிப்பாட்டுறது இல்ல,சார் என்றவர் மீறி நிக்க வைச்சா பொழப்புப்போயிரும் சார்,என்றார்,

அப்பொழுது கடைக்குள் நுழைந்த இரண்டு பேரை தம்பி கோவிச்சிக்கிறாம கடையோட வாசல்ல ஒக்காந்துக்கங்க தம்பி,போலீஸ்காரங்க வந்து கேட்டா முடிவெட்டிக்க வந்தேன்னு சொல்லுங்க தம்பி என்றார்,

பையனைச்சேர்த்து மூன்று பேர் கடை வாசலில் உட்கார்ந்து இருந்தார்கள், கடைக்குள் அமர்ந்திருந்த நான் படியில் அமர எழுந்த போது சார் சார் நீங்க உக்காருங்க ,அடுத்தது நீங்கதான் என்றார்,

இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே வெட்டிக்கொள்ள வேண்டிய முடி, கொஞ் சம் முடி கூடி விட்டால் பார்க்க அசிங்கமாகிப்போய் விடுகிறது, தவிர்த்து முடி கூடிப்போகும் நேரங்களில் தலை வலி வந்து விடுவது தவிர்க்க இயலாமல் ஆகிப்போகிறது, இது தவிர்த்து குளித்தவுடன் தலை காயாமல் இருப்பது, தலையில் நிறைந்திருக்கிற முடியிலிருந்து எண்ணெய் வழிவது போலான தொந் தரவுகளை தவிர்க்கவாவது முடி கூடிப்போக விடாமல் பார்த்துக் கொள்வான்,

இந்த பொழப்புக்காகத்தான சார் ஊர்லயிருந்து நித்தம் பதினைஞ்சி கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் மிதிச்சி இங்க வர்றேன் என்றார்,

எப்பயோ வாங்கிப்போட்ட சைக்கிளு, இப்ப ஒதவுது சார்,போக வயித்து ஆத்திரமுன்னு ஒண்ணு இருக்குல்ல சார்,

தினமும் இங்க வராம சொந்த ஊர்லயே தொழில் பண்ணலாமந்தான் சார், அங்கயும் வாய்ப்பு வசதி இருக்குதான்,நம்ம சொந்தக்காரங்கப்பயலுக ரெண்டு பேரு கடை போட்டுருக்கான்,அங்கயின்னா நான் சம்பளத்துக்குப் போயி நிக்கணும்,இங்கயின்னா நாந்தான ஓனரு சார்,

ஏங்வீட்டம்மாவுக்கு சொந்தக்காரப்பயதான் கடை வச்சிக்கிறவன்,நம்ம மேல ரொம்ப மரியாதையான பையன்,நம்ம போயி வம்படியா அவன் மடியில போயி ஒக்காந்துக்கிட்டு மரியாதையக்கெடுத்துக்கக்கூடாது, என்றார்.

நமக்குன்னு சொந்தத்துல ஒண்ணு இருக்கும் போது அது எதுக்கு சார் இழி பொழப்பு, நான் வேர் விட்ட மண்ணு இதுதான்னாலும் கூட விழுத இங்கயில்ல யெறக்கி விட்டுருக்கேன் சார்,என்றவர் எனக்கு முன்பாக அமர்ந்திருந்தவ ருக்கு முடி வெட்டி ஷேவிங் பண்ணி முடித்திருந்தார்,

ஒல்லி யாய் சிவந்து கசலையாய் தெரிந்த அவர்.அரைக்கை சட்டை அணிந்தி ருந்தார், கட்டம் போட்ட ஊதாக்கலர் கைலி சட்டைக்கு பொருத்தமாய் இருந்தது.

கைலியை மடக்கிக்கட்டியிருந்தார்.அவர் தொடைக்கு மேல் கைலியை தூக்கிக் கட்டி எப்பொழுதுமே இவன் பார்த்ததில்லை.மறந்து போய்க்கூட அப்பிடியெல் லாம் செய்ய மாட்டேன் சார் என்பார்,ஏனென்றால் அப்படி தூக்கிக் கட்டுவது எதிர் படுகிறவர்களை அவமதிப்பது அல்லது அவர்களை மரியாதை இல்லாமல் நடத்துவது எனவுமாய் சொல்வார்,

அவர் அப்படி இருக்க அவரது கடைக்கு விடலைகள் சிலர் தொடைக்கு மேல் கைலியை தூக்கி உருட்டுக்கட்டுக்கட்டிக்கொண்டு வருவதை பார்ப்பது தவிர்க்க இயலாமல் போய் விடுவதுண்டுதான்,

அப்படி வர்றவுங்கள ஒண்ணும் செய்ய முடியாது சார்,சொன்னாலும் கேக்க மாட்டானுங்க,யெளவட்ட முறுக்கு,யெளம் ரத்தம்,தாய்மார்க பையன்கள கூட்டிக்கிட்டு முடி வெட்டுறதுக்காக வருவாங்க,அவுங்க வர்ற யெடத்துல இப்பிடி வர்றது நல்லாவா இருக்குன்னு கேட்டா அப்ப எங்கள கடைக்கி வர வேணாமுன்னு சொல்லுறயாண்ணேன்னுட்டு கொஞ்சம் எதிர் வாதம் பண்ணு வாங்க,ரெண்டு வம்பு பேசுவாங்க,அவுங்களுக்கு அதுதான் பொழப்பு,. ஆனா நமக்கு அதுல்ல வேலை,பொழப்பு கெடக்கு சார் நீண்டு போயி,,,,,/ 

கடைக்கு வர்ற ரெண்டு மூணு பெரிய ஆள்ககூட இப்பிடித்தான் வருவாங்க ,நான்கூட அவுங்ககிட்ட சொல்றது உண்டு ,எதுக்கு இப்பிடின்னு ,புரிஞ்சிக் கிருவாங்க.சரியா,சரி தம்பி நீ சொன்னா தப்பா இருக்காதுன்னு ஏத்துக்கிரு வாங்க , என்பார் கடைக்கார்.

எட்ட வந்து கொண்டிருக்கும் போது சலூன் கடை வாசலில் உட்கார்ந்திருப்பது அவர்தான் எனப்புரியவில்லை.

அருகில் வர வர பிடிபட்டுப்போன அவரின் பிம்பத்தை இன்னார்தான் அவர் என நினைத்தவன் இரு சக்கரவாகனத்தின் வேகம் குறைத்து அவரருகில் போய் நிறுத்த வேண்டும் என நினைத்தவனாய் அவரை நோக்கி ஊர்ந்தவன் அவருக்கு பத்தடி தூரத்திற்கு முன்னதாகவே நிறுத்தி விடுகிறேன், ”எண்ண ன்னே நல்லாயிருக்கீங்களா,,,,”என்கிற ஒற்றைவார்த்தையைமுன்னிருத்தி,,,,/

நேற்றைக்கு முன் தினம் காலை அலுவலகம் கிளம்புகிற போது செல்போனை வீட்டில் விட்டு விட்டதாய் நினைத்து சிறிது தூரம் வண்டியில் சென்றவன்  திரும்ப வருகிறான் வீட்டிற்கு.

வீட்டில் வந்து வாகனத்தை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தும் போதுதான் பேண்ட் பை கனக்கிறது,ஆகா தோள்ல ஆட்டைப்போட்டுட்டு தேடுன கதையா ஆகிப் பேச்சே என வீட்டிற்குள் நுழைந்து தண்ணீர் குடித்து விட்டு செல் போனை எடுத்து பேண்ட் பாக்கெட்டிலிருந்து எடுத்து சட்டைபைக்குள்ளாய் போட்டுக் கொண்டு கிளம்புகிறான்,

இவனது தெரு சந்தை கடக்கும் போது இப்பதைக்கு மாச சம்பளக்காரங்க தான் குடுத்து வச்ச ஆளுங்க,எனப்பேசிக்கொண்டிருந்த நான்கைந்து பேரை தாண்டி வருகிறேன்,

இப்போதைக்கி வெறும் பேச்சாக இருக்கிற இந்த சொல் எப்போது பொறாமையாகவும், கோபமாகவும் மாறுமோ தெரியவில்லை, குடிகொண் டி ருக்கிற கோபங்கள் உருக்கொள்கிற போது அதற்கு பலம் ஜாஸ்தி என்பா ர்கள்.மாதக்கணக்கில் நின்று போன வருமானம் ,வீட்டில் பசியுற்று இருக்கும் மனைவி,பிள்ளைகள் புறம் பேசும் சமூகம் அக்கம் பக்கம் என எதைப் பார்க்கிற போதும் கூசிக்குறுகி நிற்கிறவ ர்களின் கோபம் உடனடியாய் மடை மாற்றப்படுவது மாதச்சம்பளம் வாங்குறவர்களை நோக்கியும் அரசு ஊழியர்களின் மீதுமாய் பாய்வதில் ஆச்சரியம் இருந்து விட முடியாது தான்,காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சாய் படுவது போல் எவ்வளவு வறிய நிலையில் வாழ விதிக்கப்பட்டவர்களாய் இருந்த போதும் கூட தன் வாழ்க் கையை தன் கைக்குள்ளாய் வைத்திருக்கிற அழகு தன்னளவில் அவர்களுக்கு வாய்க்கப்பெற்ற வரமாய் இருக்கிறதுதான்.

ஆனால் அதை மீறி வரை பட்டவராய் சலூன் கடை வாசலில் அமர்ந்திருந்தவர் தெரிகிறார்,

”நல்லாயிருக்கீங்களா,,,”எனக்கேட்டிருக்கக்கூடாதுதான்.அது இந்த நேரத்தில் அந்நியப்பட்டு நிற்கிற வார்த்தையாய் தெரிகிறது அவரிடத்தில்,,/

அவரை நான் அதிகம் பார்த்ததில்லை,அவர் இவனது உறவோ இல்லை சுற்றம் என்கிற வளையத்திற்குள்ளாகவோ வந்து விடுகிறவர் இல்லை.

அவ்வப்பொழுதுகளில் டீக்கடை அல்லது வேறு எங்காவது பார்க்க நேரிடுவதுண் டுதான்,

தம்பி ஒரு மாசமாகிப்போச்சி வேலையின்னு எங்கயும் போயி,வீட்டுல அரிசி பருப்பு அரசலவு எதுவும் இல்ல,சும்மா இருந்தாலும் பசிக்கும்தான வயிறு, வீட்டுக் காரி நாலு வீடுகளுக்குப்போயி வீட்டு வேலை செஞ்சி கொண்டு வர்ற காச வச்சிதான் தம்பி வண்டி ஓடுது,போக அவ வேலை செய்யிற வீடுகள்ல இருந்து கொண்டு வர்ற ஏதாவது தின்பண்டம் சாப்பாடு இதுகதான் இப்பதைக்கி வயித்தக் கழுவுது,நல்ல வேளை புள்ளைங்க இல்ல, கட்டிக் குடுத்து வெளியில போயிட்டா ங்க, இல்லையிண்ணா அதுக்கும் சேர்த்துப் பாக்கணும் என்றார், மத்தபடி வேற எதுவும் ஒண்ணும் இல்ல தம்பி, எங்கிட்டாவது வாட்ச்மேன் வேலை இருந்தாக்கூட சொல்லுங்க தம்பி,இப்பிடி தொண்ணாந்து போயி ஒக்காந்துக்கிட்டு யாரையாவது எதிர் பாத்து காத்துக் கெடக்குறது ரொம்ப வெக்கமா இருக்கு தம்பி, என்றவர் கையில் ஒரு நூறு ரூபாய் தாளை தருகிறேன், வாங்க மறுத்தவரின் சட்டைப் பையில் வம்படியாய் ரூபாய்த்தாளை வைத்து விட்டு நகர்கிறேன்,

அவர் எனது உறவினரெல்லாம்இல்லை.ஆனால்இப்போது உறவாகித் தெரிகி றார், அவர்எனது நண்பர் இல்லை,நட்பாகிப்படர்கிறார், அவர் எனது தோழர் இல்லை, ஆனால் தோழமைகளில் பூக்கிறார்,அவர் எனது அக்கம் பக்கமெல் லாம் இல்லை, ஆனால் மனம் கோர்த்து ஆகர்சித்துத்தெரிகிறார்.